politics

img

பொதுச் செயலாளர் மேசையிலிருந்து...

தில்லியில் கொரோனா ஊரடங்கு காரணமாக எந்தப் பகுதியிலும் எந்தவிதமான கட்டுமானப் பணியும் அனுமதிக்கப்பட வில்லை. இதனால் பல்லாயிரக் கணக்கான கட்டுமானத் தொழிலாளர்கள் துயரத்தின் பிடியில் சிக்கியிருக்கிறார்கள். ஆனால் மறுபுறத்தில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கட்டுமானத் தொழிலாளர்கள் மட்டும் இரவும்-பகலுமாக இடைவிடாத பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் சென்றுவருவதற்காக 180 வாகனங்களுக்கு மட்டும் பிரத்யேக அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் சென்ட்ரல் விஸ்டா (மையப்பகுதி) கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள்தான் அவர்கள். சுமார் 20ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தப் பணி குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டதால், அதுஇப்போது, ஒரு அத்தியாவசியப் பணி என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த விருப்பத்தின் பேரில் உருவான திட்டம் இது. 20 ஆயிரம் கோடி ரூபாயை, இப்போது தேவையில்லாத இந்தத் திட்டத்தில் முடக்காதீர்கள் என்று நாடு முழுவதும் எழுந்த கருத்தினை நிராகரித்து, கொரோனா ஊரடங்கு காலத்திலும் கூட அத்தியாவசியப் பணி என்று பெயரிட்டு இந்தப் பணி தொடர்கிறது. மறுபுறத்தில் ஆக்சிஜன் இல்லாமல் லட்சக்கணக்கான மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். முதலில் இந்தத் திட்டத்தை நிறுத்துங்கள். அந்தப் பணத்தைக் கொண்டு ஆக்சிஜனும் தடுப்பூசியும் வாங்குங்கள்.

                                  ****************

இந்தியாவின் மிக அவசரத்தேவை, அதிவேகமாக அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்துவதுதான். இத்தகைய ஒரு தேசிய அவசர நிலை எழுந்துள்ள சூழலில், தகுதிவாய்ந்த அனைத்து நிறுவனங்களும் தடுப்பூசி உற்பத்தியை மிக வேகமாக மேற்கொள்வதற்கு உரிமம் வழங்கும் அதிகாரம் மத்திய அரசிடம் மட்டுமே உள்ளது.  அந்த அதிகாரத்தை உடனே பயன்படுத்துங்கள். மிக வேகமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். அதுமட்டுமல்ல, தடுப்பூசிகள் உள்பட அனைத்து அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் விலைகளை நிர்ணயம் செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே இருக்கிறது. அந்த அதிகாரத்தை இப்போதே பயன்படுத்துங்கள்.நாடு விடுதலை அடைந்த காலத்திலிருந்து, நாடு முழுவதும் அனைவருக்கும்இலவச தடுப்பூசி திட்டங்களே அமலாகியிருக்கின்றன. அத்திட்டங்களுக்காகமத்திய அரசே எப்போதும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்திருக்கிறது. எனவே இப்போது மத்திய அரசு அந்தப் பொறுப்பிலிருந்து தன்னை விலக்கிக் கொள்வதற்கு எந்தவிதத்திலும் அனுமதிக்கப்படக்கூடாது.

                                  ****************

அதிர்ச்சிகரமான மற்றொரு செய்தியும் வெளியாகியிருக்கிறது. தில்லியில் கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்வதற்கு போதிய இடங்கள் இல்லை. நாள் ஒன்றுக்கு சுமார்700 பேரின் உடல்களை எரியூட்ட வேண்டிய கொடிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதற்கான இடம் இல்லாததால், நாய்களை தகனம் செய்யும் ஒரு இடத்தையும் மனிதர்களுக்காக பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற அவலச் செய்தி மனதை உலுக்குகிறது.  தங்களது நிர்வாகத்திறமையின்மையால், உச்சக்கட்ட அலட்சியத்தால், நம்மையெல்லாம் இத்தகைய ஒரு இழிநிலைக்கு கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் ஆட்சியாளர்கள்; இப்போதும் கூட தங்களது படங்களைப் பொருத்திய பத்திரிகைச் செய்திகளை படாடோபமாகவும் பொருத்தமில்லாத விபரங்களுடனும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்தியர்களுக்கு இப்போதைய தேவை ஆக்சிஜன், மருத்துவமனை படுக்கைகள், தீவிர சிகிச்சைப் பிரிவுகள், தடுப்பூசிகள் ஆகியவைதானேத் தவிர, மேலும் மேலும் உங்களுடைய பெருமைகளைப் பேசும் வெற்றுப் பிரச்சாரச் செய்திகள் அல்ல. 

;