தலைநகர் தில்லியின் எல்லையில் விவசாயிகளின் போராட்டம் நடைபெற்று வருகிறது. நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய அந்தப் போராட்டம் இன்றுடன் 3 மாதங்களைக் கடந்துள்ளது. 3 மாதங்களாக ஆயிரக்கணக்கான விவசாயிகளும் பெண்களும் தில்லியைச் சுற்றி நான்கு மையங்களில் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்களது கிராமங்களுக்குத் திரும்பிச் செல்லப் போவதில்லை என்று அவர்கள் கூறிவிட்டனர்.
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுக!
கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண்துறை சார்ந்த 3 சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்என்பதுதான் அவர்களின் கோரிக்கை. ஆனால் மத்திய அரசு இந்த கோரிக்கைகளை ஏற்க முடியாதுஎன்று பிடிவாதம் பிடிக்கிறது. போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு பேச்சு நடத்த வேண்டும் என்றுநாங்கள் வலியுறுத்தி வருகிறோம். பேச்சுவார்த்தையில் விவசாயிகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் உறுதியான முடிவை மத்திய அரசு தெரிவிக்கவேண்டும்.
3 வேளாண் சட்டங்களையும் ஒன்றரை ஆண்டுகள் அமல்படுத்தப் போவதில்லை என்று மத்தியஅரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. எனவே இந்த 3 சட்டங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று அரசு அறிவிக்க வேண்டும். பின்னர் புதிய வேளாண் சட்டங்களை உருவாக்குவது குறித்து விவசாயிகள் அமைப்புகளுடன் கலந்து பேச வேண்டும்.
மோசமான வரிக் கொள்கையால் பெட்ரோல் விலை உயர்வு
இரண்டாவதாக பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையேற்றம். இப்பொருட்களின் விலையேற்றத்தால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். நாட்டின் சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்று 100 ரூபாயை எட்டியுள்ளது. மத்திய அரசின் பெட்ரோலிய பொருட்கள் மீதானவரிக்கொள்கை தான் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயரக் காரணமாகும். ஒரு லிட்டர்பெட்ரோல் 100 ரூபாய் என்றால் அதில் 62 ரூபாய்மத்திய மாநில அரசுகளின் வரியாகும். இதில்மூன்றில் ஒரு பகுதி மாநில அரசின் மதிப்புக்கூட்டுவரியாகும். மீதமுள்ள இரண்டு பங்கு வரி மத்தியஅரசு விதித்துள்ள வரியாகும்.
**************************
15 முறை கலால் தீர்வை உயர்வு
கடந்த சில ஆண்டுகளாக நரேந்திர மோடி தலைமையிலான அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் தீர்வையை 13 முதல் 15 முறை உயர்த்தியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தபோதும் மத்திய அரசு விலையைக் குறைத்து மக்களைப் பாதுகாக்க முன்வரவில்லை. மாறாக மீண்டும் மீண்டும் வரியை உயர்த்தி விலையை உயர்த்திக்கொண்டே இருந்தது. எனவே விலை உயர்வால் அவதிப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு உடனடியாக பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் தீர்வையைக் குறைக்க வேண்டும்.
மக்களை கசக்கிப்பிழிவதா?
மத்திய அரசுக்கு கடந்த நிதியாண்டில் (2020-2021) பல்வேறு இனங்களிலிருந்து வரக்கூடிய வரிவருவாய் கணிசமாகக் குறைந்துள் ளது. அந்த வரி இழப்பை ஈடுகட்ட மத்திய அரசுபெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் தீர்வையை உயர்த்திக்கொண்டே இருக்கிறது. மத்தியஅரசு தனக்குள்ள சுமையை பொதுமக்கள் மீது ஏற்றுகிறது. 2019 ஆண்டு பெருநிறுவனங்கள் மீதான நிறுவன வரியை உயர்த்தி பொதுமக்களைக் காப்பாற்றுவதற்குப் பதில் அந்நிறுவனங்கள் மீதான வரியைக் குறைத்துள்ளது.
மாற்று யோசனைகள்
பெருந்தொற்று, ஊரடங்கு ஆகியவற்றால் ஏற்பட்ட வரி இழப்பை ஈடுகட்ட மத்திய அரசு பெரு நிறுவனங்கள் மீதான நிறுவன வரியை உயர்த்தலாம். அந்த நிறுவனங்கள் மீதான சொத்து வரியை உயர்த்தலாம். இதுபோன்ற நடவடிக்கையால் அரசுக்குக் கணிசமாக வருவாய் கிடைக்கும். ஆனால் பெட்ரோல் மற்றும் டீசல் மீது மறைமுகமாக வரியை உயர்த்தி அரசு மக்களுக்கு மேலும் மேலும் துன்பத்தை அளித்து வருகிறது. இது வரி வருவாயைத் திரட்ட அரசு கடைப்பிடிக்கும் மிகமோசமான வழிமுறையாகும். சமையல் எரிவாயு விலை நேற்று முன்தினம்25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் மட்டும் 3 முறை எரிவாயு சிலிண்டர் விலைஉயர்த்தப்பட்டுள்ளது. மொத்தமாக ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்த்தி மக்களுக்குசொல்லொணாத் துயரத்தை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள்உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட் டுள்ளனர். இந்த விலை உயர்வு பல வகைகளில் மக்களைப் பாதிக்கும். பெட்ரோல், டீசல்,சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால்அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். சரக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகன கட்டணம் உயரும். பொது போக்குவரத்து கட்டணம் உயரும்.
பாகிஸ்தானில் விலை குறைவு
நம்மைச் சுற்றியுள்ள அண்டை நாடுகளைக்காட்டிலும் நமது நாட்டில் பெட்ரோல் டீசல் விலை அதிகமாக உள்ளது.பாகிஸ்தானில் லிட்டர் பெட்ரோல் ரூ.52ஆக உள்ளது. இலங்கை, பங்களாதேஷ் உள்ளிட்ட அனைத்துநாடுகளிலும் நம்மை விட 60 சதவீத குறைவானவிலையில் பெட்ரோல் விற்கப்படுகிறது. பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை உயர்த்தி வருவாயை அதிகரிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிடவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கு எதிராகத் தொடர்ந்துபோராட்டங்களையும் நடத்தி வருகிறது.
*******************
பொதுத்துறையே தேவையில்லையாம்
மத்திய பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்று தனியார் மயமாக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒரு அரசு பொதுத்துறை நிறுவனங்கள் நாட்டிற்குத் தேவையில்லை என்று கூறியுள்ளது. நிறுவனங்களை நடத்துவது அரசாங்கத்தின் வேலையல்ல என்று பிரதமர் மோடி கூறுகிறார். அப்படி நடத்திக் கொண்டிருந்தால் உடனடியாக அதிலிருந்து அரசு விலகிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் சொல்லியிருக்கிறார். எனவே பொதுத்துறை நிறுவனங்களை அழித்தொழிப்பது தான் அரசின் கொள்கை என்பதை அவர் சொல்லிவிட்டார். தற்போது இதுகுறித்த கொள்கைமுடிவையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
பெயரளவுக்கு நிறுவனங்கள்
கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 4 துறைகள்தவிர மற்ற துறைகளில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் அரசுக்கு உள்ள பங்குகள் விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்படும் அல்லது மூடப்படும். நிலக்கரி, எண்ணெய், பாதுகாப்பு உள்ளிட்ட கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நான்கு துறைகளிலும் குறைந்தபட்ச நிறுவனங்கள் மட்டும் அரசின் வசம் இருக்கும். உதாரணமாக இந்திய உருக்கு ஆலை நிறுவனம் (செயில்) பல உருக்காலைகளை நடத்துகிறது. இதில் இரண்டு அல்லது 3 ஆலைகளை மட்டும் வைத்துக்கொண்டு மீதமுள்ளவை தனியாருக்கு விற்கப்படும் அல்லது மூடப்படும். தொலைத்தொடர்பு, அணுசக்தி ஆகிய துறைகளிலும் இதே நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசின் இத்தகைய நடவடிக்கை மிகமோசமான விளைவுகளை ஏற்படுத்தும். சேலம் உருக்காலை நிறுவனம் விற்கப்படும். விசாகப்பட்டினத்தில் உள்ளஉருக்காலையின் 100 சதவீத பங்குகள் விற்பனைசெய்யப்படும் என்று ஏற்கனவே மோடி அரசு பட்ஜெட்டில் அறிவித்து விட்டது.
நெய்வேலி நிறுவனமும் பறிபோகும்
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் ஆட்சியாளர்களின் கண்களிலிருந்து தப்பவில்லை. நிலக்கரித்துறையில் இந்திய நிலக்கரிநிறுவனங்களின் பங்குகளை விற்க அரசு முடிவு செய்துள்ளது. குறைந்த நிறுவனங்களை மட்டும் பெயருக்கு வைத்துக்கொள்ளும். மத்திய அரசின் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் நமது நாட்டின் இறையாண்மையைப் பலிகொடுக்கும் நடவடிக்கைகள் ஆகும். பாதுகாப்பு தளவாட துறையையும் அரசு விட்டுவைக்கவில்லை. நாட்டில் உள்ள ஆயுத தளவாட ஆலைகள் அனைத்தும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு முயன்று வருகிறது.
ஆந்திராவில் போராட்டம்
விசாகப்பட்டினம் உருக்காலையைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதைஎதிர்த்து ஆந்திராவில் மிகப்பெரிய போராட்டம்தொடங்கியுள்ளது. சேலத்திலும் உருக்காலைதனியார்மயத்திற்கு எதிராகத் தொழிற்சங்கங் கள், அரசியல் கட்சிகள் பெரும் போராட்டத்தைநடத்தியுள்ளன. வரும் நாட்களில் அரசு வளத்தைச் சூறையாடும் நடவடிக்கைகள் மேலும் தீவிரமாகும். இந்த நிறுவனங்கள் அனைத்தும் மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்டவையாகும். இந்நிறுவனங்களை இந்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அடிமாட்டு விலைக்கு விற்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது.
சிதம்பரத்தில் நடைபெற்ற மக்கள் கோரிக்கை மாநாட்டில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசியதிலிருந்து...