politics

img

மாநில அரசியல் கட்சிகளை வேட்டையாடி வரும் பாஜகவை வீழ்த்த திமுக - சிபிஎம் இணைந்து போராடும்..... ஏற்புரையில் டி.கே.ரங்கராஜன்.....

டி.கே.ரங்கராஜன் தனது ஏற்புரையில், நாடாளுமன்றத்தில் நான் கொறடாவாக சில காலம் இருந்தபோது, கோவாவில் ஒரு நாள் இரவு ஒருமணிக்கு பாஜக தலைவரும் அமைச்சருமான  வெங்கய்யாநாயுடு எனது அறைக்கு வந்து, மறுநாள் அவையில் பேசவேண்டிய தீர்மான குறிப்பை கொடுத்து விட்டு சென்றார். அதில் நாடாளுமன்றத்தில் போராடுகிற எம்பிக்கு அன்றைக்கு வழங்க வேண்டிய ஊதியம் வெட்டப்பட்டு ஆப்செண்ட் போட வேண்டும் என்று என்னை பேச அழைத்தனர். நான் அந்த தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டு இதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறிவிட்டேன். 1952,1957,1962 ஆகிய காலத்தில் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் நாடாளுமன்றம் வந்தனர். 1967க்கு பிறகு மாநிலக்கட்சிகள் ஆட்சிக்கு வருகின்றன. அதன் அபிலாசைகள் மன்றத்தில் வைக்கப்படுகிறது.  

கவலையளிக்கும் போக்கு
தமிழ்மொழிக்கு முக்கியத்துவம் மறுக்கும் போது நாடாளுமன்றத்தில் கலகம் ஏற்படுகிறது. இடஒதுக்கீடு மறுக்கும் போது அமளி ஏற்படுகிறது. குஜராத் மாணவர் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படும் போது குஜராத் எம்பிக்கள் போராட்டம் நடத்துகின்றனர். இது  மாநிலத்தின் பிரச்சனைகள் என்று ஆய்வு செய்து முடிவுகாணாமல் ஆளுங்கட்சிகள் பிரச்சனையை இன்னும் அதிகரிக்கின்றன. அவையை நடத்தத்தெரியாமல் ஆட்சியாளர்கள் சர்வாதிகாரம் செய்கின்றனர். மாநிலங்களின் உரிமைகள் குறித்து சரியான வாதங்கள் வைக்க வேண்டிய இடம் மேலவை மட்டுமே. ராஜ்யசபா இல்லை என்றால் இந்திய ஜனநாயகம் கேள்விக்குறியாகும். பாஜக அரசு மேலவை ஜனநாயகத்தை மதிப்பதில்லை. இது கவலையளிக்கிறது.

இந்திரா காந்தியை துணிச்சலாக எதிர்த்தவர்கள்
 அவசரகாலத்தில் திமுக தலைவர்கள்  தாக்கப்பட்டபோதும் பல தலைவர்கள் சிறையில் கொடுமைப்படுத்தப்பட்டபோதும் அதை கண்டித்து நாடாளுமன்றத்தில் உரையாற்றியவர்  சிபிஎம் தோழர் தினன் பட்டாச்சார்யா தான். இந்திராகாந்தியை விமர்சித்து பேசும் தைரியம் கம்யூனிஸ்டுகளுக்கு மட்டுமே இருந்தது. நாடாளுமன்ற குறிப்புகளை வைத்து மாணவர்கள் முனைவர் பட்டம் பயில முயற்சித்தால் இதுபோன்ற குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும், இந்தியாவில் மொழிக்காக, மாநில உரிமைக்காக, தேச நலனை பாதுகாக்க கம்யூனிஸ்டுகளை விட அதிகம் பணியாற்றியவர்கள் யாரும் இல்லை. ஆனால் இதற்கு பதிவுகள் இல்லை என்பது வருத்தத்திற்குரிய விசயமாகும். தமிழ்நாடு சட்டமன்றத்தில் 1937ல்  நாகிரெட்டி, தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட் போன்ற தலைவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இதன் பதிவுகளை மாணவர்கள் பயில வழிவகை செய்ய வேண்டும். கடந்த காலத்தில்  சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்களின்  உரைகளை அடுத்துவரும் மாணவர்கள் படித்து  அறிந்துகொள்ளச்செய்யவேண்டும்.  

அரசியல் அனுபவங்கள் பதிவு செய்யப்படும்
கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் புனிதர்கள் அல்ல; ஆனால், தவறுகளை உடனுக்குடன் திருத்திக்கொள்பவர்கள். அதற்காகத்தான் கட்சியில் நெறிப்படுத்தும் இயக்கம் வைக்கப்பட்டுள்ளது. ரஷ்ய யுத்தத்தில் ஸ்டாலின் மகன் சிறைப்பிடிக்கப்பட்டபோது ‘ஜெர்மானிய தளபதியை விடுதலைசெய்தால் உங்கள் மகனை விட்டுவிடுகிறோம்’ என்று பாசிச ராணுவம் கூறியபோது ‘என் மகன் சிப்பாய் தான். அதற்காக ஒரு தளபதியை விடமுடியாது’ என்று கூறி தன் மகனை இழந்தவர் ஸ்டாலின். அவர் தான் கம்யூனிஸ்ட். முடிவுக்கு கட்டுப்படுவதற்கு மனத்தின்மம் வேண்டும். அது கம்யூனிஸ்டுகளிடம் இருக்கிறது.மாநில அரசியல் கட்சிகளை வேட்டையாடிவரும் பாஜகவை வீழ்த்த  திமுக, சிபிஎம் இணைந்து போராடுகிறோம். அந்த பணியை செவ்வனே செய்ய வேண்டும். மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டது போல் எனது அரசியல் அனுபவங்களைப் பதிவு செய்வேன்.இவ்வாறு அவர் பேசினார்.