politics

img

எரிமலை எப்படிப் பொறுக்கும்?

சி.பி.ராதாகிருஷ்ணன் கோயம்புத்தூர் தொகுதி எம்.பி.யாக இருந்த போதுதான் 82 மில்கள் இழுத்து மூடப்பட்டன; இந்த மில்களில் பல ஆண்டு காலம் வேலைபார்த்த நாங்கள் எல்லாம் வீதியில் வீசப் பட்டோம்; இன்று வரை வாங்கிய கடனை கட்ட முடியாமல் குடும்பத்துடன் கஷ்டப்படுகிறோம்... அப்போதும் சரி இப்போதும் சரி, மூடப்பட்ட மில்களை திறப்பதற்காக போராடியது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான். களத்தில் நின்றது பி.ஆர்.நடராஜன்தான். ஆகவே அவருக்குத்தான் எங்கள் ஓட்டு.- கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதி கிராமங்களில் பெண்கள் மத்தியில் எதிரொலிக்கும் குரல் இது.பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி பிரச்சனையால் கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங் களில் தொழில்கள் மிக மிகக் கடுமையான அடியை வாங்கியிருக்கின்றன என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அதற்கு முன்பிருந்தே - குறிப்பாக பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக சி.பி.ராதாகிருஷ்ணன் இருந்த காலத்திலேயே கோவை யின் தொழில்கள் - குறிப்பாக பஞ்சாலைகள் மிகக்கடுமையான துயரத்திற்குள் சிக்கி, அதில் வேலைபார்த்த தொழிலாளர்கள் வேலை பறிக்கப்பட்டு நிர்கதியாக விடப்பட்டனர் என்பதை இந்தப் பெண்களின் குரலிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது.


அடிப்படையில் சிறு-குறு நடுத்தர தொழில்கள் அனைத்திற்கும் விரோதி பாரதிய ஜனதா கட்சி என்பதை உணர்த்துவதற்கு இந்தப் பெண்களின் வார்த்தைகளே சாட்சி. அப்படிப்பட்ட பாஜகவுடன் - மோடியுடன் தமிழகத்தில் கூட்டுசேர்ந்து வருகிற அதிமுகவையும் ஓட ஓட விரட்டுவோம் என்று உள்ளக் கொதிப்பை கொட்டுகிறார்கள் பெண்கள். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோயம்புத்தூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்கு சேகரித்து கிராமங்கள் தோறும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க பெண்கள் பல்வேறு குழுக்களாக களத்தில் இறங்கி மக்களை சந்தித்த போது கிடைத்த எண்ணற்ற அனுபவங்களில் ஒன்றுதான் மேலே குறிப்பிட்டது.“மோடியின் ஆட்சி இனிமேல் வரக்கூடாது.எங்களது மருத்துவக் கனவை அழித்தவர் அவர், நாங்கள் முதன்முதலாக வாக்களிக்கப் போகிறோம், அது மோடிக்கு எதிரான வாக்கு”என்று பல்வேறு பகுதிகளில் இளம்பெண்கள் உறுதியோடு கூறினார்கள், கண்களில் தெரிந்த ஆவேசத்தோடு.80வயது மூதாட்டி ராஜம்மாள், மாதர் சங்க பெண்கள் கொடுத்த நோட்டீசை வாங்கு வதற்காக மாடியிலிருந்து தட்டுத் தடுமாறி இறங்கி வந்தார். பி.ஆர்.நடராஜனுக்கு வாக்குகேட்கும் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னம்பொறித்த நோட்டீசை கையில் வாங்கிக் கொண்டு ஆவேசத்துடன் குமுறினார் : “பொள்ளாச்சியில் நடந்த சம்பவம் பயங்கரமானது. மோடி - எடப்பாடி ஆட்சியில்தான் இப்படிப்பட்ட பயங்கரங்கள் அரங்கேறியிருக்கின்றன. மதிகெட்ட எடப்பாடி பொய்யாகப் பேசி ஓட்டு கேட்கிறார். ஜெயலலிதா இருந்திருந்தால் இந்தப் பிரச்சனையில் இவர்கள் தப்பித்திருக்க முடியுமா? நான் என்னுடைய வயதுக்கு பல தேர்தல்களில் ஓட்டுப் போட்டுள்ளேன். இந்தத் தேர்தலில் கூட்டுச் சேர்ந்திருக்கும் மோடி - எடப்பாடி கூட்டத்தைப் போல நான் மோசமான நபர்களைப் பார்த்ததில்லை. மோடியை விரட்டியே ஆக வேண்டும்”.


அம்மாபாளையம் என்ற கிராமம். தலித் குடியிருப்புப் பகுதி. 15க்கும் மேற்பட்ட இளம்பெண்கள், மாதர் சங்கத் தோழர்களைப் பார்த்து சூழ்ந்து கொண்டு பேசினார்கள்: “அக்கா, பொள்ளாச்சி சம்பவம் எங்களது குடும்பங்களையெல்லாம் அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. படிப்பதற்கு வெளியில்அனுப்ப மாட்டேங்கறாங்க. எங்கள் படிப்பெல்லாம் வீணாகுமோ என பயமாக இருக்கிறது. இப்படி ஒரு சூழலை உருவாக்கியஎடப்பாடிக்கும் மோடிக்கும் எதிராக ஒட்டுமொத்த குடும்பங்களும் ஓட்டுப்போடப்போகிறோம். பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கேட்டது மாதர் சங்கமும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்தான். எனவே எங்கள் ஓட்டு பி.ஆர்.நடராஜனுக்கே”. அப்படிச் சொல்லும் போது அவர்களின் கண்களில் உற்சாகம் பொங்கியது.வரிசையாக 25க்கும் மேற்பட்ட கிராமங்களில்- குறிப்பாக தலித் குடியிருப்புப் பகுதிகளில் குடிநீர் பிரச்சனை தலைவிரித்தாடுகிறது. சாலை வசதி இல்லை. சமுதாயக் கூடம் இல்லை. அதிமுக எம்.பி. நாகராஜ் ஐந்தாண்டுகளாக இந்தப் பக்கம் தலையே காட்டவில்லை. கடந்த பிரச்சாரத்தில் அவர் ஓட்டுக்கேட்டு கூட வந்ததில்லை. இருந்தாலும் அம்மாவின் வேட்பாளர் என்பதால் ஓட்டுப் போட்டோம். அம்மாவையே சாகடித்துவிட்டார்கள். நாங்கள்ஏனம்மா அவர்களுக்கு ஓட்டுப்போடப் போறோம். இந்த முறை மார்க்சிஸ்ட்டுக்கே ஓட்டு... - இந்தப் பகுதி கிராமங்கள் முழுவதிலும் எதிரொலித்த வார்த்தைகள் இவை.“ரேசன் கடைகளில் உளுந்தம்பருப்பு உள்பட ஏதோ சில பொருட்கள் போட்டார்கள். எடப்பாடி என்றைக்கு ஆட்சிக்கு வந்தாரோ அப்போதே அந்தப் பொருட்கள் காணாமல் போய்விட்டன. எந்த சலுகையும் இல்லை. ஏற்கெனவே இருந்த எல்லா சலுகையும் போச்சு. அம்மா உயிரோடு இருக்கும்போது மோடியோடு சேரக்கூடாது என்று சொன்னாங்க. இப்ப என்னடா மோடியோடு சேர்ந்துகிட்டு ஆட்டம் போடுறீங்க”


- கொதித்துப் போய் வார்த்தைகளைக் கொட்டினார்கள் கிராமத்து மக்கள்.


“கேபிள் டி.வி. இலவசமாக கொடுப்பேன்னு அம்மா சொன்னாங்க. எடப்பாடி வந்ததும் செட் டாப் பாக்ஸ் 400 ரூபாய், மாதந்தோறும் 250 ரூபாய் கட்டினால்தான் டிவி தெரியுமா? இது என்ன அநியாயம்”- சென்ற இடமெல்லாம் இந்தப் பிரச்சனை மக்களின் உள்ளங்களில் கொந்தளிப்பை உருவாக்கியிருப்பதை வெளிப்படுத்தியது.நூறுக்கும் மேற்பட்ட மகளிர் சுயஉதவிக்குழுக்களை இயக்கிக் கொண்டிருக்கும் பிரபாவதியும், சகுந்தலா தேவியும் படபடவென பொரிந்து தள்ளினார்கள்: “எங்கள்குழுவில் உள்ள எல்லோரும் அம்மாவின் விசுவாசிகள்தான். அம்மாவையே கொன்னுட்டாங்க. நாங்கள் எதற்கு எடப்பாடிக்கும் மோடிக்கும் ஓட்டுப் போட வேண்டும்? இந்த முறை எங்கள் ஓட்டு அரிவாள் சுத்தியலுக்குத்தான்”. - இப்படி மாதர் சங்கப் பெண்கள் வாக்குகேட்டு சென்ற இடமெல்லாம் மோடி - எடப்பாடிகூட்டணிக்கு எதிராக மக்கள் மனதில் ஒரு எரிமலையே தகித்துக் கொண்டிருப்பதை உணர முடிந்தது.விவசாயிகள் உச்சக்கட்டக் கோபத்தில் இருக்கிறார்கள். உயர் மின் அழுத்த கோபுரங்களை விளைநிலங்கள் வழியாக கொண்டு செல்லும் மோசமான திட்டம் வந்தபோது தங்களுக்காக போராடியது - களத்தில் நின்றதுமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் என்பதைவிவசாயிகள் மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். கரும்பு விவசாயிகள், தென்னை விவசாயிகள்உள்ளிட்ட அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் மோடி அரசும், எடப்பாடி அரசும் துரோகம் இழைத்ததை மறந்துவிட்டு அவர்களுக்கு ஓட்டு போட்டுவிட முடியுமா என்று எதிர்க்கேள்வி கேட்கிறார்கள். 


மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்கு கேட்டு சென்ற மாதர்சங்கப் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாகனப் பிரச்சாரம், தெருமுனைப் பிரச்சாரம், வீடு வீடாக வாக்காளர் சந்திப்பு என முழு வீச்சில் களத்தில் நின்றார்கள். அப்படிச்செல்கிற போது சில இடங்களில் ஆத்திரமடைந்தபாஜக கும்பல்களின் மிரட்டலையும் கூட எதிர்கொள்ள நேர்ந்தது. அப்படி ஒரு சம்பவம் பல்லடம் தொகுதி மஞ்சப்பூர் கிராமத்தில் காலனிப் பகுதியில் நடந்தது. மாதர் சங்க பெண்கள் பி.ஆர்.நடராஜனுக்கு வாக்கு கேட்டுவீடு வீடாக மக்களைச் சந்தித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த பாஜக - அதிமுக அணியினர், பெண்களை வாக்கு கேட்கவிடாமல்தகராறு செய்தனர். தகவல் அறிந்து அந்த கிராமத்திலிருந்த அனைத்துப் பொதுமக்களும் ஒன்று திரண்டு பாஜக - அதிமுக கும்பலை விரட்டினர். அம்மாவைக் கொன்ற நீங்கள் இந்தப் பக்கம் ஓட்டு கேட்டு வரக்கூடாது என்று அவர்களை எச்சரித்து வெளியேற்றினர். மாதர் சங்கப் பெண்களை அரண் போல நின்று அழைத்துச் சென்று வீடு வீடாக வாக்கு கேட்க வைத்தனர்.இப்படி கோவை தொகுதி முழுவதும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மாநிலத் தலைவர்கள் என்.அமிர்தம், ராதிகா, வி.பிரமிளா மற்றும் எஸ்.ராணி, கீதா, ஜெயா, பவானி, மோகனா, பரமேஸ்வரி, லலிதா மற்றும் கோவை, திருப்பூர் மாவட்டத் தலைவர்கள் அமுதா, ராஜலட்சுமி, சி.ஜோதிமணி, வனஜா பி.ஆர்.என்., சுதா ராமன், சாந்தா, பங்கஜ வள்ளி, சாமுண்டீஸ்வரி, ரேவதி, விஜயலட்சுமி, பவித்ரா, சகிலா, மைதிலி, தனலட்சுமி உள்பட ஏராளமான பெண்களுக்கு எண்ணற்ற அனுபவங்கள் கிடைத்தன.அந்த அனுபவங்களின் ஒட்டுமொத்த சுருக்கம், ஏப்ரல் 18 அன்று மோடி - எடப்பாடி ஆட்சிகளுக்கு எதிராக தமிழக மக்களின் நெஞ்சங்களில் கனன்று கொண்டிருக்கும் எரிமலை வெடிக்கும் என்பதுதான்.


- ஜி.ராணி

மாநில செயற்குழு உறுப்பினர், 

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்.