நமது மதிப்பிற்குரிய விஞ்ஞானிகளுக்கும், இஸ்ரோவுக்கும் இதயப்பூர்வமான பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம் (ஆகஸ்ட் 20), சந்திரயான் 2, வெற்றிகரமாக திட்டமிட்டபடி, சந்திரனின் சுற்று வட்டப் பாதைக்குள் நுழைந்திருக்கிறது. இன்றைய தினம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் தினமாகும். இத்தகைய தினத்தில் இந்த மகத்தான சாதனை நிகழ்த்தப்பட்டிருப்பதன் மூலம், நமது அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது, அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, ஒவ்வொரு செயலுக்குமான காரணம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கான கேள்வி கேட்கும் மனப்பான்மையை - ஆர்வத்தை உருவாக்குவது என்ற அடிப்படையான அம்சங்கள் மேலும் மேலும் உறுதி செய்யப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. அறிவியலின் மீதும், அறிவியல் மனப்பான்மையின் மீதும் நாம் நம்பிக்கை கொள்கிறோம். அறிவியலை உறுதியாகப் பற்றிக் கொள்வதே எளிய இந்திய மக்களின் அன்றாட வாழ்வை மேம்படுத்துவதற்கு வழி செய்யும். அதன் மூலமாக இந்திய தேசம் மிகச்சிறந்த சாதனைகளை எட்டுவதற்கு உதவி செய்யும். அறிவியலை உறுதியாகப் பற்றி நிற்போம்.