தனியார் விமான நிறுவனமான ஜெட்ஏர்வேஸ், நிதி நெருக்கடியால் செயல்பாடுகளை நிறுத்திவிட்டது. 50 மாதங்களுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக இரண்டு இலக்க வளர்ச்சியை அடைந்துவருவதும், உலகின் மூன்றாவது பெரியதும், 2020இல் இரண்டாவது பெரியதாக வளர்ந்துவிடும் என்று கணிக்கப்பட்டிருப்பதுமான இந்திய விமானப் பயணச் சந்தையில் இரண்டாவது பெரியதும், இந்தியாவின் பன்னாட்டு வழித்தடங்களில் முதல் பெரியதுமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். இந்தியாவில் தனியார் விமான நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்டவுடன் தொடங்கப்பட்ட, இந்தியாவின் மிகப்பழைய தனியார் விமான நிறுவனம், வெள்ளி விழாவைக் கொண்டாடிய ஓராண்டுக்குள் இந்த மூடுவிழாவைச் சந்தித்திருக்கிறது.1992-93இல் ஒரு நாளைக்கு ரூ.1 கோடி லாபமீட்டி, உலகின் ஆறாவது அதிக லாபமீட்டும் விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்திற்குப் போட்டியாகத் தனியார் நிறுவனங்களை அனுமதித்துவிட்டு, இன்று இழப்புகளைக் காட்டித் தனியார் மயமாக்க அரசு முயற்சித்துக்கொண்டிருக்கும் வேளையில், தனியார்மயம் தீர்வல்ல என்பதை இந்த மூடுவிழா கோடிட்டுக் காட்டியிருக்கிறது. இந்தியச் சந்தையிலுள்ள பெரும்பாலான தனியார் விமான நிறுவனங்கள் இழப்பில்தான் இயங்கிக் கொண்டிருக்கின்றன. வளர்ந்துகொண்டிருக்கும் சந்தையில் லாபமீட்டுவது சிரமம் என்றுதான் இத்துறையின் நிபுணர்கள்அதற்குக் காரணம் கூறுகிறார்கள். ஏர் இந்தியா மட்டும் சிக்கலில் உள்ளதாக அரசு கூறுவது உண்மையல்ல என்பதை, ஜெட் ஏர்வேஸ் வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கிறது.ஸ்டேட் வங்கி தலைமையிலான இந்திய வங்கிகளிலும், அந்நிய வங்கிகளிலும் சேர்த்து ரூ.11,261 கோடி கடன் இந்நிறுவனத்திற்கு உள்ளது.
இந்த நிறுவனத்தை வாங்க விரும்புபவர்களை வங்கிகள் தேடிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இந்தக் கடன்களுடன் வாங்க அவர்கள் தயாராக இல்லை. அதனால், இதில்கணிசமான பகுதியையோ, அல்லது மல்லையாவிடம் விட்டதுபோல முழுமையாகவோ வங்கிகள் இழக்கப்போவது தெரிகிறது.இதைத் தாண்டி, விற்பனையாளர்கள், விமானத்தில் உணவு வழங்குபவர்கள், விடுதிகள்ஆகியோருக்கு ரூ.3,500 கோடியை இந்நிறுவனம் நிலுவை வைத்துள்ளது. முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு பயணம் ரத்தானது மட்டுமல்ல, பதிவை ரத்து செய்து பணத்தைத் திரும்பப் பெறும் வசதியும் முடக்கப்பட்டதால், அவர்களுக்குரிய தொகையும் நிலுவையாக உள்ளது. எரிபொருளுக்கு, குத்தகை விமானங்களுக்கு என்று அனைத்தையும் சேர்த்தால் ரூ.28,000 கோடி அளவுக்குக் கடன் இருக்கலாம்என்று மதிப்பிடப்படுகிறது. அது மட்டுமின்றி, இந்தியாவின் மிகப்பெரிய சரக்கு கையாளும் திறன் கொண்ட விமான நிறுவனம் இதுதான். மும்பையிலிருந்து லண்டனுக்குச் சென்ற ஏற்றுமதியில் பாதி இந்நிறுவனத்தின் விமானங்களில்தான் சென்றது. ஐரோப்பிய நாடுகளுக்கு ஒரு நாளைக்கு 50 டன் காய்கறிகளை இந்நிறுவனத்தின் விமானங்கள் ஏற்றிச் சென்றன. இவையும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளன.பாதிக்கப்பட்டுள்ள ஊழியர்கள், ஊதியத்திற்கும், நடைமுறை செலவுகளுக்கும் நிதியைஅளித்து நிறுவனம் செயல்பட உதவ வங்கிகளுக்கு உத்தரவிடுமாறு அரசைக் கோரியுள்ளனர். ஏற்கெனவே, செயல்பட முடியாத நிலையில் உள்ள நிறுவனத்திற்கு, இன்னும் எப்படி வங்கிகள் நிதியளிக்கும் என்பது, நிச்சயம் சரியான கேள்விதான்!
ஆனால், 2014 டிசம்பரில் இவ்வாறு நின்றுபோன ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு, வங்கிகளை ரூ.600 கோடி வழங்குமாறும், எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருள் வழங்குமாறும், விமான நிலையங்கள் மேலும் 15 நாட்களுக்கு கடன் வசதியளிக்குமாறும் மோடி அரசு உத்தரவிட்டு அந்நிறுவனத்தை காப்பாற்றியது. அப்போது, ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் சுமார் ரூ.6,000 கோடி கடன் வராக்கடனாக மாறியிருந்தது. ஆனால், தற்போது ஜெட் ஏர்வேசின் கடன் எதுவும் வராக்கடன் அல்ல. ஆம்! டிசம்பரில் கடன் தவணை செலுத்த முடியாத அந்த நிறுவனம், ஜனவரி, பிப்ரவரியில் தவணைகளைச் செலுத்திச் சரிசெய்துவிட்டது. 90 நாட்களுக்கும்மேல் தவணை தவறியவைதான் வராக்கடன் என்பதால், ஜெட் ஏர்வேசின் கடன்கள்கூட நடப்பில்தான் உள்ளன. ஜெட் ஏர்வேசின் நிறுவனரான நரேஷ் கோயலும், அவர் மனைவிஅனிதாவும் ஜெட் ஏர்வேசின் நிர்வாகக்குழுவிலிருந்து விலகினால்தான் கடன் உதவியளிக்க முடியும் என்று ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிகள் கட்டுப்பாடு விதித்ததைத் தொடர்ந்து, மார்ச் 25இல் அவர்களிருவரும் விலகிவிட்டனர். ஆனாலும் வங்கிகள் உதவவில்லை.கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பாஜகவின் அஜய் சிங் என்பவரால் தொடங்கப்பட்டது. 2010இல் அவரது பங்குகளை ரூ.750 கோடிக்குக் கலாநிதிமாறன் வாங்கியிருந்தாலும்கூட, இந்தச் சிக்கலில் அஜய் சிங் தலையிட்டு, அரசை உதவச் செய்ததுடன், அந்த 58.64 சதவீத பங்குகள்மொத்தத்தையும் அஜய் சிங் திரும்பவும் வாங்கிக்கொண்டார்.
அந்தப் பின்னணியில்தான், வராக்கடன் வைத்திருந்த ஸ்பைஸ்ஜெட்டுக்கு வழங்கப்பட்ட உதவி வராக்கடனே இல்லாத ஜெட் ஏர்வேசுக்குமறுக்கப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இவ்வாறு நடைமுறை செலவுகளுக்காகக் கூடுதல் கடன் வழங்குவது வழக்கமான நடைமுறைதான். அதனால்தான், ஜெட் ஏர்வேசுக்கு அது மறுக்கப்பட்டதில் சதி இருப்பதாக விமானிகள் குற்றம் சாட்டுகிறார்கள். பணியிழந்த விமானிகளுக்கு உதவுவதாகக் கூறிக்கொண்டு, அவசர அவசரமாக அவர்களை ஸ்பைஸ்ஜெட் பணிக்கு எடுத்துக்கொள்கிற நிலையிலும் இந்தக் குற்றச்சாட்டை விமானிகள் கூறுகின்றனர்.ஜெட் ஏர்வேஸ் நின்றுபோயிருக்கிற நிலையில், அதன் வழித்தடங்கள் அவசர அவசரமாக ஸ்பைஸ்ஜெட்டுக்கு வழங்கப்படுகின்றன. உண்மையில் விதிமுறைகளின்படி, இந்த வழித்தடங்களை அதிகம் பெற வேண்டிய நிறுவனம் இண்டிகோ ஏர்தான். அல்லது, அரசின் நிறுவனம் என்ற அடிப்படையில் ஏர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு ஏற்றவாறு தகுதி நிர்ணயிக்கப்பட்டு, அந்நிறுவனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக, இண்டிகோ நிறுவனமும், ஏர் ஆசிய இந்தியா, விஸ்டாரா ஆகியவற்றை நடத்தும் டாடா குழுமமும் குற்றம் சாட்டியுள்ளன. ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு, ஜெட் ஏர்வேஸ் சேவைகளை நிறுத்திய நாளிலிருந்து 44 சதவீதமும், நரேஷ் கோயல் விலகிய நாளிலிருந்து 73 சதவீதமும் உயர்ந்துள்ளது என்பதிலிருந்து அந்நிறுவனம் அடைந்துள்ள பலன்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன.மொத்தத்தில், பாஜகவின் அஜய்சிங்குக்கு உதவுவதற்காக, வங்கிகளுக்கும் பிற நிறுவனங்களுக்கும் நெருக்கடி கொடுத்து, ஒரு தனியார் நிறுவனம் அழிவுப்பாதைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அத்துடன், எங்கு, எப்படி ஊழல் நடந்துள்ளது என்றே தெரிந்துவிடாமல் ஊழல் செய்வதில் மோடி அரசுக்கு நிகரில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது!