புதுதில்லி, ஏப்.18-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு,மேற்குத் திரிபுரா மக்களவைத் தொகுதி சிபிஎம்வேட்பாளர் சங்கர் பிரசாத் தத்தா ஆகியோரடங்கிய தூதுக்குழுவினர், தேர்தல் ஆணையர்களைச் சந்தித்தார்கள். மேற்குத் திரிபுரா தொகுதியில் 464 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப் பதிவு நடத்திட வேண்டும், கிழக்குத் திரிபுரா தொகுதியிலும் மற்றும் மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள தேர்தல்களிலும் நேர்மையாகவும் நியாயமாகவும் தேர்தல் நடப்பதை உத்தரவாதப்படுத்திட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினார்கள்.தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:மேற்குத் திரிபுரா தொகுதியில் தேர்தல் நடைபெற்ற ஏப்ரல் 11 அன்று ஒட்டுமொத்த முறைகேடுகள் குறித்தும் தங்களின் கவனத்திற்குக் மிகுந்த வேதனையுடன் கொண்டு வருகிறோம்.இயல்பான வாக்குப்பதிவினைப் பாதிக்கும்விதத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்த விவரங்களை இத்துடன் இணைத்திருக்கிறோம். நாங்கள் இதற்கு முன் மார்ச் 6 அன்று தங்களைச் சந்தித்தபோது தேர்தல் ஆணையத்தின்சார்பில் துணை ராணுவப் படையினர் மூலமாக வாக்குச்சாவடிகள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்றும், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களுக்கும் உரியபாதுகாப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளித்தீர்கள். ஆனால் அவை எதுவுமே நடைபெறவில்லை. அதுமட்டுமல்ல தேர்தலில் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றவர்களுக்கும்கூட உரிய பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.திரிபுராவில் நடைபெற்ற அத்துமீறல்கள் பற்றி எங்கள் கட்சி வேட்பாளர் சங்கர் பிரசாத்தத்தா அளித்துள்ள மனுவை இத்துடன் இணைத்திருக்கிறோம். அதேபோன்று எங்கள் கட்சி வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடிகளில் அனுமதிக்கப்படாதது குறித்து அவர்கள் அளித்துள்ள புகார் கடிதங்களையும் இத்துடன்இணைத்திருக்கிறோம்.
வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற ரவுடித்தனங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரக்கூடாது என்பதற்காக பல வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் ரவுடிகளால் செயலற்றவைகளாக மாற்றப்பட்டன என்றும் செய்திகள் வந்துள்ளன.எல்லாவற்றிற்கும் மேலாக, தேர்தலை நியாயமாகவும் நேர்மையாகவும் நடத்தவேண்டும் என்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த துணை ராணுவப் படையினர், தேர்தல் நாளன்று முழுமையாக வாக்குச் சாவடிகளுக்கு வரவில்லை என்பதாகும். எனவே,மோசடிகள் நடைபெற்றுள்ள 464 வாக்குச்சாவடிகளில் மீண்டும் வாக்குப் பதிவு நடத்திட உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தைவலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.தேர்தலை நேர்மையாகவும் நியாயமாகவும் நடத்திட நாங்கள் முன்வைத்த ஆலோசனைகள் எதையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள முன்வராததிலிருந்து, தேர்தல்ஆணையமே ஆளும் கட்சியினர் மற்றும்குண்டர்களின் ரவுடித்தனமான நடவடிக்கைகளை வசதி செய்து கொடுத்திருக்கிறதோ என்று சந்தேகிக்கின்றோம்.11ஆம் தேதி நடைபெற்ற அத்துமீறல் நடவடிக்கைகளின் காரணமாக, தற்போது ஏப்ரல் 23க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. திரிபுரா கிழக்கு தொகுதியில் நடைபெறவிருக்கும் தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடந்திட கீழ்க்கண்ட ஆலோசனைகளை தேர்தல் ஆணையத்திற்கு எங்கள் கட்சியின் வேட்பாளர் ஜிதேந்திர சௌத்ரி அளித்துள்ளார். அதனையும் இத்துடன் இணைத்திருக்கிறோம். அதில் அவர் கோரியிருப்பதாவது:(1) தேர்தல் வரையிலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் அனைத்திலும் பெரிய அளவில் துணை ராணுவப் படையினரின் அணிவகுப்பு நடைபெறவேண்டும்.(2) தேர்தல் சமயங்களில் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து முதல்தகவல் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
(3) அனைத்து காவல் நிலையங்களும் மத்திய துணை ராணுவப் படையினரால் நிர்வகிக்கப்பட வேண்டும். இவர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை ஏழுக்கும் கீழானதாக இருக்கக் கூடாது.(4) பதற்றமான இடங்களில் மத்திய பாதுகாப்புப் படையினரின் குறைந்தது மூன்று ரோந்து வாகனங்கள் சுற்றி வர வேண்டும்.(5) எக்காரணம் கொண்டும் 11ஆம் தேதிநடந்ததைப்போல வாக்குச்சாவடிக்கு சம்பந்தம்இல்லாத நபர்களோ அல்லது வாக்காளர்களோ வரிசையில் நிற்க அனுமதிக்கக்கூடாது.(6) போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச்சாவடி முகவர்கள் பாதுகாப்பு கோரினால், அந்த இடத்திற்கு தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் விரைந்திட வேண்டும்.(7) வாக்காளர்கள் அல்லாத நபர்கள் வாக்குச்சாவடிக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது.(8) 2 மோட்டார் வாகனங்களுக்கு மேல் வருபவர்கள் கண்காணிக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் 5 மணிக்கு மேல் வெளியாட்கள் அனுமதிக்கப்படக் கூடாது.கடந்த காலங்களில் தேர்தல் ஆணையம், அரசமைப்புச்சட்டத்தின் கீழ் பொறிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக கொள்கை ரீதியாக சிறப்பான முறையில் செயல்பட்டு வந்திருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இத்தகைய சுதந்திரமான செயல்பாடு இப்போதும் தொடர வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம்.இவ்வாறு சீத்தாராம் யெச்சூரியும், நிலோத்பால் பாசுவும் வலியுறுத்தியுள்ளனர். (ந.நி)