politics

பிரதமர் ஹெலிகாப்டரில் சோதனை செய்த தேர்தல் பார்வையாளர் இடைநீக்கம்

புவனேஸ்வரம், ஏப். 18-ஒடிஸா மாநிலம், சம்பல்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்த ஹெலிகாப்டரில் சோதனை நடத்தியதற்காக, தேர்தல் பார்வையாளர் ஒருவரை தேர்தல் ஆணையம் புதன்கிழமை பணியிடைநீக்கம் செய்தது.“சம்பல்பூரில் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கடந்த செவ்வாய்க்கிழமை ஹெலிகாப்டரில் சென்று பிரதமர் மோடி இறங்கினார். அப்போது, தேர்தல் பார்வையாளரான முகமது மோசின், அந்த ஹெலிகாப்டரில் திடீர் சோதனை நடத்தினார். இதனால், சுமார் 15 நிமிடங்கள் பிரதமர் மோடி அந்த இடத்திலேயே இருக்க நேரிட்டது.இந்த விவகாரத்தில், சம்பல்பூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை டிஐஜி அளித்த அறிக்கையின் அடிப்படையில் முகமது மோசின் மீது பணியிடைநீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவர், கடந்த 1999-ஆம் ஆண்டைய கர்நாடகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆணையில், எஸ்பிஜி பாதுகாப்பில் இருப்பவர்கள் தொடர்பான தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் களை முகமது மோசின் பின்பற்ற தவறிவிட்டார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பல்பூரில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பயணம் செய்த ஹெலிகாப்டரிலும் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தப்பட்டது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறின.முன்னதாக, கர்நாடகத்தில் பிரதமர் மோடி அண்மையில் பயணித்த ஹெலிகாப்டரில் சந்தேகத்துக்கு இடமான வகையில் கருப்பு நிற பெட்டி ஒன்று கொண்டுவரப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுதொடர்பாக விசாரணை நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்தில் அக்கட்சி சார்பில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.