தேர்தல் பிரச்சாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி திருப்பூருக்கு வந்ததை முன்னிட்டு அதிமுகவினர் செய்த விளம்பரம், ஏற்பாட்டு பணிகள் அத்துமீறலில் புதிய உயரத்தைத் தொட்டது.
அவிநாசி, பூண்டி வழியாக திருப்பூர் பாண்டியன் நகர், வளர்மதி பாலம்,காங்கேயம் கிராஸ் ரோடு வழியாககாங்கேயம் என முதல்வர் பழனிசாமிசென்ற வழி நெடுகிலும் பத்து, பதினைந்து அடி தூரத்துக்கு ஒன்று எனபிளக்ஸ் பதாகைகளை இரும்பு பிரேம்களில் பொருத்தி வைத்திருந்தனர். ரயில்வே மேம்பாலம், நொய்யல்பாலம் மட்டுமின்றி, வெளியூர் செல்லும் திசை காட்டும் பலகைகள் அனைத்தையும் மறைத்து அடைத்துதட்டிகள் கட்டி வைத்தனர். நொய்யல் பாலத்தின் மையப் பகுதியிலேயே மேடை அமைத்திருந்தனர். அதைவிட எம்ஜிபி பஸ் நிறுத்தத்தில் போக்குவரத்து பரபரப்பு மிக்க சாலையின் நடுவிலேயே முதல்வர் வேனில் நின்று பேசுவதற்காக தகரத்தில் பந்தல் அமைத்திருந்தனர். திருப்பூரைப் பொறுத்தவரை நகரின் தெற்கு, வடக்கு பகுதியை இணைப்பதில் பார்க் ரோடு, குமரன் சாலை, ரயில்வே மேம்பாலம் முக்கிய வழித்தடமாகும். இந்த பகுதியை முழுமையாக ஆளும் கட்சியினர் ஆக்கிரமித்து ஒட்டுமொத்த மாநகரையும் வியாழக்கிழமை திண்டாட வைத்தனர். காவல் துறையினர் ஆளும் கட்சியினரின் தேவைக்கு ஏற்ப முழுமையாக வசதி செய்து கொடுத்தனர். மக்களைப் பற்றியும், போக்குவரத்து வசதி பற்றியும் அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை.
சொல்லப் போனால், போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தி அதிமுக நிகழ்ச்சிக்கு கூட்டம் இருப்பதை போல தோற்றத்தை ஏற்படுத்தினர். முதல்வர் நிகழ்ச்சிக்கு மாநகரின் எல்லா வார்டுகளிலும் தனியார் மற்றும் அரசுப் பேருந்துகளை அனுப்பி ஆட்களை அள்ளிப் போட்டு வந்திருந்தனர். ஏற்கெனவே ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளால் மாநகர மக்கள் கடுமையான நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில் அதிமுகவினரின் ஒரு நாள் கூத்துமேலும் மூச்சு முட்ட வைப்பதாக இருந்தது. இந்த நெருக்கடிக்கு இடையில் சிக்கி ஆம்புலன்ஸ் வாகனங்களும் கடந்து போக வேண்டியிருந்தது. வளர்மதி சந்திப்பில் முதல்வர் பேச வருவதற்கு ஒன்றரை மணி நேரத்துக்கு உள்ளாக மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் அந்த பகுதியை கடந்து போனது. ஆனால் கடும் போக்குவரத்து நெருக்கடியில் காலதாமதத்துடன், திணறித் திண்டாடி அந்த வாகனங்கள் கடந்து சென்றன.
முதல்வர் பழனிசாமி வளர்மதி பகுதியில் பேசியபோது கூட்டி வந்தகூட்டத்தில் பெண்கள் ஒரு பகுதியினர்கலைந்து சென்றனர். காங்கேயம்கிராஸ் பகுதியில் மிகக் குறைவானவர்கள் மட்டுமே முதல்வர் நிகழ்ச்சியில் இருந்தனர்.இந்த அரை நாள் நிகழ்ச்சிக்காக ஒரு நாள் முழுவதும் திருப்பூர் போக்குவரத்து கடும் நெருக்கடி நிலையில்சிக்கியது. பேருந்துகளில் வெவ்வேறுஇடங்களுக்கு செல்ல வேண்டிய மக்கள் பல கிலோமீட்டர் தூரம் கொளுத்தும் வெயிலில் பரிதாபத்துடன் நடந்து சென்றனர்.