politics

img

மாண்டவர் மீண்டும் வருவார்…!

விடுதலை பெற்று எழுபது ஆண்டுகள்

வீணாய்ப் போனது!-நாட்டில

கெடுதலை சாதியும் மதமும்

மோதிக் கெட்டுப் போனது!

ஆலைகள் சாலைகள் எல்லாம் இங்கே

தனியார் ஆனது!-நாட்டில்

நாளைய இளைஞர் கூட்டம்

கெட்டு வீதியில் நிற்குது!


கோலை ஏந்திய ஆட்சி மதுவைக்

குடுவையில் விற்குது!-நாட்டில்

சோலைக் காற்று நன்னீர்

உணவில் நஞ்சு கலக்குது!

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்

பாலை ஆனது!-அட

உறிஞ்சியே அவற்றின் இயற்கைத்

தன்மை ஒழிந்து போனது!


நச்சுக் காற்றால் நாங்கள் இறக்கிறோம்

ஆலையை மூடென்றால்-மக்கள்

உச்சந் தலைமுதல் உடலெல்லாம்

பிய்ந்திட சுட்டுத் தள்ளுகின்றார்!

ஆறுதல் சொல்லிட வந்தொரு நடிகர்

உளறிக் கொட்டுகிறார்!-அவர்

போரிடும் வன்முறைத் தீவிர 

வாதியாம் தேளாய்க் கொட்டுகிறார்!


பகுத்த றிந்து உண்மையைச் சொன்ன

தபோல்கர் பன்சாரே!-நாட்டில்

உகுத்த செந்நீர் கல்புர்கி

லங்கேஷ்கர் உயிர்கள் குடித்தது!

தொகுத்து அறியும் அவரின் நெஞ்சைத் 

தோட்டா துளைத்தது!-அட

பகுத்த அறிவினை மதவெறி  

போக்கிட நாளும் குலைக்குது!


உண்பதில் உடுப்பதில் கூட இங்கே

தடைகள் விதிக்குது!-நாட்டில்

திணிக்கும் ஒற்றைக் கலாச்சார

இந்துத்வாக் கொள்கை குதிக்குது!

இயற்கை வளங்கள் எல்லாம் இங்கே

சுரண்டப் படுகிறது!-நாட்டில்

வியக்கும் விவசாயத் தொழிலை 

அழிக்கும் விளைவைத் தொடுகிறது!   


கிழவியும் சிறுமியும் கூட யிங்கெ

கதறித் துடிக்குது!-நாட்டில்

அழுகிய காமத் தீயோர்

செயலால் அழிவில் வெடிக்குது!

பாலியல் சாமியார்க் கெல்லாம் பாஜக  

பலமாய் இருக்குது!-அட

கூலியாக அவருக்கு நாள்தோறும்

கோடிகள் கொட்டிக் கொடுக்குது!


நான்கு ஆண்டுகள் பாஜக ஆட்சியில்

நாடே கெட்டது!-அட

இங்கும் மாநில ஆட்சியர் 

கையால் தமிழகம் பட்டது!

பணத்தின் மதிப்பை இழக்கச் செய்து

பலரைக் கொன்றார்கள்!-அட

பிணத்தின் மீது ஆட்சி  

நடத்தும் பிழப்பைக் கொண்டவர்கள்!


வரியை ஜிஎஸ்டி என்றே

தலையில் வைத்தார்கள்!-அட

நரியைப் போல நாட்டை 

முதலாளித் தீக்குள் திணித்தார்கள்!

நாளும் பெட்ரோல் டீசல் எரிவாயு

விலையை உயர்த்துகிறார்!-அட

தோளும் துவண்டிட ஏழையர் 

வாழ்வில் சுமையை அழுத்துகிறார்!


ஆண்டுக்கு மூன்று கோடி பேருக்கு

வேலை என்றார்கள்!-அந்த

மண்ணாளும் மோடி பக்கோடா

விற்கப் பரிந்துரை பண்ணுகிறார்!

கருப்புப் பணத்தை மீட்டு வங்கியில்

போடுவேன் என்றார்!-நீங்கள்

விருப்பம் போலச் செலவுகள்

செய்து மகிழலா மென்றார்!


ஆண்டுகள் ஐந்து ஆகியும் பைசா

வந்திட வில்லையே!-அட

அண்டப் புளுகர் அவரின்

நாக்கு அழுகிட வில்லையே!

மனதோடு பேசுவார், வெளிநாட்டில் பேசுவார்

தோசையும் கேட்பார்!-இங்கே

தினந்தோறும் போராடும் விவசாயி 

தொழிலாளி மக்களிடம் பேசார்!

  

நாடு நாடாகச் சுற்றி நாளைப்

போக்கியே விட்டார்!-அட

தேடி வந்தது ஒன்றுமே 

இல்லை கோடிகள் செலவழித்தார்!

தாழ்த்தப் பட்டோர் மீது எங்கும்

தாக்குதல் நடக்குது!-அட

வீழ்ந்தவர் உடலில் பாஜக 

ஆனந்தத் தாண்டவம் நடத்துது! 


வீழ்ந்தது உடலன்று விதைகள் அவைகள்

விரைவில் மரமாகும்!-அட

சூழ்ந்திடும் பகைகளைத் தூக்கி

எறிகின்ற வீரிய உரமாகும்!

மாண்டவர் மீண்டும் வருவது நிச்சயம்

சத்தியம் செய்கின்றேன்!-அட

மீண்டும் நாளை உயிர்த்து எழுவார்

நடப்பது மெய்யென்பேன்!

;