politics

img

ராஜஸ்தான் குடுமிபிடி சண்டை

ராஜஸ்தான் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலை வராகவும், மாநிலத் துணை முதல்வராகவும் இருந்த சச்சின் பைலட் கட்சிக்குள் கலகக் கொடி எழுப்பியதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் நாடகம் இன்னமும் முடியவில்லை.  எனினும் அதன் முக்கியமான அம்சங்கள் வெளிச்சத்திற்கு வரத்தொடங்கியிருக்கின்றன. காங்கிரஸ் கட்சிக்குள் நடைபெற்றுவரும் குடுமிபிடி சண்டையை, பாஜக அல்லாத மாநில அரசாங்கங்களை, குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் கீழ் இயங்கும் மாநில அரசாங்கங்களைப் பலவீனப்படுத்திட பாஜக மேற்கொள் ளும் முயற்சிகளிலிருந்து அவற்றைத் தனியே பிரித்துப் பார்த்திட முடியாது.

2019 மே மாதத்தில் மோடி அரசாங்கம் மீண்டும் ஆட்சி க்கு வந்தபின்னர், முதலில் கர்நாடகாவில் காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள அரசாங்கம் 2019 ஜூலையில் கவிழ்க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

பாஜக, தான் குறிவைத்திருக்கும் அரசாங்கங்களைப் பலவீனப்படுத்துவதற்கு, பல்வேறுவிதமான உத்திகளைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. கர்நாடகாவில், தான் விலைக்கு வாங்கிய சட்டமன்ற உறுப்பினர்களை, கட்சித் தாவல் சட்டத்தின் பிடியிலிருந்து தந்திரமானமுறையில் தப்பிப்பதற்காக, தங்கள் உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய வைக்கும் முறையைக் கையாண்டது. இவ்வாறு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள உறுப்பினர்கள் 15 பேர் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இதன்மூலம் அரசாங்கம் சட்ட மன்றத்தில் ஒரு சிறுபான்மை அரசாங்கமாக மாறியது. பின்னர் ராஜினாமா செய்த பேர்வழிகள், பின்னர் நடை பெற்ற இடைத்தேர்தலில் பாஜக உறுப்பினர்களாகப் போட்டி யிட்டு, வெற்றி பெற்றார்கள். இவர்களில் பலருக்கு வெகுமதி யாக எடியூரப்பா அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.

மத்தியப்பிரதேசத்தில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு விசுவாசமாகவுள்ள 22 காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்து, சட்டமன்றத்தில் கமல்நாத் அரசாங் கத்தை சிறுபான்மை அரசாங்கமாகக் குறைத்தனர். இவர்க ளிலும் பலருக்கு, இடைத்தேர்தல்களில் அவர்கள் போட்டியி டுவதற்கு முன்னமேயே, அமைச்சர் பதவிகளும் கார்ப்ப ரேஷன்களில் தலைவர் பதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

ராஜஸ்தானைப் பொறுத்தவரையில், இந்த உத்தி அவர்களுக்கு சாத்தியமான ஒன்றாகத் தெரியவில்லை. ஏனெனில் பைலட்டின் கீழ் உள்ள 19 எம்எல்ஏ-க்களும், தற்போதுள்ள பாஜக எம்எல்ஏ-க்களும் சேர்ந்தால்கூட தற்போதுள்ள அசோக் கெலாட் அரசாங்கத்தைக் கவிழ்த்தி டப் போதுமான எண்ணிக்கை கிடைக்கவில்லை. இவ்வாறு அங்கே குடுமிபிடி சண்டை நீடித்துக் கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர், பைலட்டின் ஆதரவாளர்களான 19 எம்எல்ஏ-க்களை தகுதியிழப்பு செய்வதற்காக அனுப்பியுள்ள நோட்டீஸ்கள் மீது உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஜூலை 24 அன்றைக்கு வெளிவந்தபின் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக இரு தரப்பினரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பாஜகவும் மத்திய அரசாங்கமும் மாநில அரசாங்கங்க ளைக் கவிழ்ப்பதற்காக பல்வேறுவிதமான உத்திகளில் ஈடு பட்டிருக்கின்றன. முதலில், எம்எல்ஏ-க்களைப் பணம் கொடுத்துப் பெரிய அளவில் வாங்குவது. இவ்வாறு அளிக்கப்படும் பணம் என்பது சட்டவிரோதமான பணமே யாகும். மற்றவர்களுக்கு, அமைச்சர் பதவி மற்றும் பணம் கொட்டும் பதவிகளை வெகுமதியாக வழங்குவது. மேலும், இவற்றுக்குத் தயக்கம் காட்டுகிற அல்லது முகம் சுழிக்கிற சட்டமன்ற உறுப்பினர்களை, வருமான வரி மற்றும் அம லாக்கத்துறை அதிகாரிகளைக் கொண்டு அவர்களின் இடங்களிலும், அவர்களுடைய உறவினர்களின் இடங்களிலும் சோதனைகள் மேற்கொண்டு மிரட்டிப் பணிய வைக்க முயற்சிப்பது. இந்த முகமைகள் பதவியிலி ருப்பவர்கள் எதிர் நடவடிக்கை எடுக்காது இருக்கும் விதத்தில் மத்தியஸ்தம் செய்திடும் வேலைகளுக்கும் பயன்படுத்தப் படுகின்றன.  இறுதியாக, மாநிலத்தில் உள்ள தங்கள் கட்ட ளைகளுக்கு வளைந்துகொடுக்கும் ஆளுநரைக் கொண்டு, பாஜக முகாமுக்கு ஆதரவாக மத்தியஸ்தம் செய்ய வைப்பது.

இத்தகைய உத்திகள் பாஜகவிற்கு முன்பு கோவா விலும், மணிப்பூரிலும் அரசாங்கங்கள் அமைக்க உதவின. ராஜஸ்தானில் இந்த உத்தி முழுமையாக வெற்றி பெற வில்லை. இவ்வாறு அங்கே இரு தரப்பினருக்கும் இடையே குடுமிபிடி சண்டை தொடர்கிறது. ராஜஸ்தானில் தற்போதைய நெருக்கடியின் பிரதான அம்சம், காங்கிரஸ் கட்சி அரசாங்கங்களைப் பலவீனப் படுத்த பாஜக மேற்கொள்ளும் சூழ்ச்சித் திட்டம் ஒரு காரண மாக உள்ள அதே சமயத்தில், சித்திரத்தின் மறுபக்கத்தை யும் பார்க்க வேண்டியது அவசியமாகும். அதாவது, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் காங்கிரஸ் கட்சியின் பலவீனமான நிலையையும் பார்க்க வேண்டி இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்குள் எண்ணற்ற கோஷ்டி சண்டைகள்,  தங்களை முன்னிறுத்தி அதிகாரப் பசியுடன் அலையும் வம்சாவளி அரசியல் தலைவர்கள் (dynastic political leaders) ஆகிய காரணிகளும் இவற்றிற்குக் காரணங்க ளாகும். ராஜஸ்தானில் உள்ள நெருக்கடி, காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் இத்தகைய உள்கட்சி சண்டைகளை மிகவும் அசிங்கமான முறையில் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது.

2018இல் காங்கிரஸ் கட்சியின் அரசாங்கம் அமைக்கப் பட்டதிலிருந்தே, முதல்வர் கெலாட் மற்றும் துணை முதல்வர் பைலட் ஆகிய இருவரும் ஒருவர்க்கொருவர் மோதிக்கொண்டுதான் இருந்தார்கள். மேலும் சச்சின் பைலட், அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக சதி செய்ததாகக் கூறப்பட்ட வழக்கு சம்பந்தமாக விசாரணைக்கு, காவல் துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழுவிடமிருந்து, நோட்டீசைப் பெற்றபோது, இவர்களுக்கிடையேயான மோதல் எவராலும் தடுத்துநிறுத்தப்பட முடியாத போராட்ட மாக மாறியது. இவ்வாறு இவர்களுக்குள் நடந்துவந்த சண்டை, பாஜக-வின் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளுக்கு வசதி செய்து கொடுத்திருக்கிறது.  கெலாட் அமைச்சரவை இந்த மோதலில் அநேக மாக மீண்டுவிடும். ஆனாலும், காங்கிரஸ் கட்சியானது பாஜக-வின் சவாலை அரசியல்ரீதியாகவும், தத்து வார்த்தரீதியாகவும், ஸ்தாபனரீதியாகவும் எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இப்போது இல்லாமல் இருக்கிறது.

தேர்தல் அரசியலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் இன்றையதினம் மிகவும் தரம் தாழ்ந்து சென்றிருப்பதென்பது நாட்டின் அரசியல் அமைப்பு முறையில் மிகப்பெரிய அளவிற்கு பணம் கொட்டப் பட்டிருப்பதுடனும், நவீன தாராளமய முதலாளித்து வத்தின் அனைத்துவகையான இழிவான செல்வாக்கு கள் ஊடுருவியிருப்பதுடனும் நேரடியாகத் தொடர்புடைய னவாகும். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிற மக்கள் பிரதிநிதிகளிடம் அரசிய லும் வர்த்தகமும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. இத்தகைய மக்கள் பிரதிநிதிகளைத்தான் தங்கள் இரையாக, பாஜக குறி வைத்திருக்கிறது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள், மாநில உரிமைகள் மீதான தாக்குதல்கள், நாடு முழுவதும் ஒரே கட்சி ஆட்சியைக் கொண்டுவர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் ஆகிய அனைத்தும் இந்துத்துவா எதேச்சதிகார ஆட்சியின் அனைத்துவிதமான வெளிப்பாடுகளாகும். அவர்களை வெல்வதற்கு, அவர்களின் உத்திகளை அப்படியே பிரதியெடுப்பதால் மட்டும் முடியாது.

(ஜூலை 22, 2020), 
தமிழில்: ச.வீரமணி

;