கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் விண்ணப்ப நிலையை அறிய, புதிய இணையதளத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கியுள்ளது.
தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டத்திற்கு விண்ணப்பித்து, மனு நிராகரிக்கப்பட்டவர்கள் இன்று முதல் இ-சேவை மையங்கள் வாயிலாக மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் விண்ணப்பதாரர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. குறுஞ்செய்தி கிடைத்த 30 நாட்களுக்குள் இணையதளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.
இந்த நிலையில், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்கள் குறித்த விவரம் அறிய, தமிழக அரசு புதிதாய் தொடங்கியுள்ள www.kmut.tn.gov.in என்ற இணையதளத்தில் குடும்ப அட்டை எண்ணைப் பதிவிட்டு விண்ணப்பத்தின் நிலையை விண்ணப்பதாரர்கள் அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாய் தொடங்கப்பட்ட இணையதளத்தை ஒரே சமயத்தில் பலரும் பயன்படுத்தியதால் சர்வர் முடங்கியது. இதனால், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப நிலையை அறிவதற்கான இணையதள சேவை பாதிக்கப்பட்டுள்ளது.