politics

img

பின்னலாடை தலைநகரை சீர்குலைத்த பாஜக-அதிமுகவை விடலாமா? திருப்பூர் பொதுக் கூட்டத்தில் சீத்தாராம் யெச்சூரி எழுச்சிமிகு உரை...

திருப்பூர்:
மோடிக்கு ஜால்ரா தட்டும் ஓபிஎஸ்,இபிஎஸ் கூட்டணியை வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் வலுவாகத் தோற்கடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

திருப்பூரில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றிய சீத்தாராம் யெச்சூரி கூறியதாவது:

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதாஅரசு இந்தியாவின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் அடித்தளத்தை அழித்து, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது பெரும் தாக்குதல் தொடுத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு உறுதுணையாக எடப்பாடி அரசு செயல்பட்டு வருகிறது. எனவே வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியை வலுவாகத் தோற்கடிக்க வேண்டும். மொத்த இந்தியாவுக்கும் தமிழகம் வழங்கும் செய்தி பாஜக கூட்டணிக்கு படுதோல்வி என்பதாக இருக்க வேண்டும். அந்த வரலாற்றுப் பொறுப்பை தமிழக மக்கள் நிறைவேற்ற வேண்டும்.

அடித்தளத்தை தகர்க்கும் மோடி அரசு
கடந்த ஆறாண்டு கால மோடி ஆட்சியில் நம் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டுத் தொழில்களும், சிறு, குறு தொழில்களும் பேரழிவுக்குத் தள்ளப்பட்டுள்ளன. உலகின் பட்டினிப்பட்டியலில் மோசமான கடைசி ஐந்துநாடுகளில் ஒன்றாக இந்தியா தள்ளப்பட்டுவிட்டது. எதிர்கால சந்ததியை உருவாக்கும் நம் தாய்மார்களும்,குழந்தைகளும் ஊட்டச்சத்து இல்லாதவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். வேலையில்லா திண்டாட்டம் மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் 15 கோடிப் பேர் வேலையிழந்துள்ளனர்.நமக்கு உணவளிக்கும் விவசாயிகள் மோசமான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைநகரில் மூன்று மாதங்களுக்கு மேலாகப் போராடி வருகின்றனர். அதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தொழிலாளர்கள் போராடிப் பெற்ற உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தொழிற்சங்க உரிமை, வேலைநிறுத்த உரிமை பறிக்கப்படுகிறது. நெய்வேலி, பெல், விசாகப்பட்டினம் உருக்காலை என அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியாருக்குத் தாரைவார்க்கப்படுகின்றன. தேசியமய வங்கிகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுகின்றன. இந்திய மக்கள் உழைத்து ஈட்டிய பணம் கார்ப்பரேட் பெரு முதலாளிகளுக்குத் தாரை வார்க்கப்படுகிறது.இந்தியாவில் பின்னலாடைத் தலைநகரம் என அறியப்பட்ட திருப்பூர்,உலகளவில் புகழ்பெற்ற இந்த நகரின் பின்னலாடை தொழில் பாஜகவின் ஆறு ஆண்டு கால ஆட்சியில் படுமோசமாக சீர்குலைக்கப்பட்டுள்ளது. ஏராளமான ஆலைகள் மூடப்பட்டுள்ளன. 

திசை திருப்பும் மோசடி
இவர்களது மோசமான செயல்பாடு களைப் பற்றி யாராவது விமர்சனம் செய்து கேள்வி எழுப்பினால் அதை திசை திருப்புவதற்காக இந்து - முஸ்லிம் பிரிவினையைத் தூண்டி விடுகின்றனர். பாஜக ஆளும் மாநிலங்களில் லவ் ஜிகாத் தடைச் சட்டம் எனக் கொண்டு வந்துள்ளனர். இந்திய அரசியல் சட்டம் வயது வந்த ஆண், பெண்கள் எந்த மத, சமூகப் பாகுபாடும் இல்லாமல், தங்கள் இணையரை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமையை வழங்கியுள்ளது. ஆனால் இந்த உரிமையைப் பறித்து யார் யாரைத் திருமணம் செய்யலாம், யாரைத் திருமணம் செய்யக் கூடாது என்று பாஜகமாநில அரசுகள் உத்தரவு போடு கின்றனர். சிறுபான்மையினர் மட்டுமல்ல, நம்சகோதரிகள், தாய்மார்களான பெண்கள், தலித்துகள், குறிப்பாக தலித்பெண்கள், சிறுமிகள் மீது கடும்தாக்குதல், ஒடுக்குமுறை ஏவப்படுகிறது. பி மாநிலத்தில் தலித் சிறுமியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துவிட்டனர். அந்தகுற்றவாளிகள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்த அந்த சிறுமியின் தந்தையையும் அதே குற்றவாளிகள் சுட்டுக் கொன்றுவிட்டனர். ஆனால் அந்த மாநிலத்தை ஆளும் பாஜக அரசு குற்றவாளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சுதந்திர இந்தியா காணாத கொடுமைகள்
இதுவரை சுதந்திர இந்தியாவில் இல்லாத அளவுக்கு பாஜக ஆட்சியில்ஒடுக்கப்பட்ட மக்கள், பெண்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குடிமக்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. இந்தியமக்களின் ஒற்றுமை சிதைக்கப்படுகிறது.இத்தகைய மோசமான பாரதிய ஜனதா ஆட்சிக்கு தமிழகத்தின் இபிஎஸ்,ஓபிஎஸ் ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கிறார்கள். ஆந்திராவில் ஒரு வழக்கம் உண்டு. கிராமங்களில் கதை சொல்லும் ஒருவருக்கு பின்பக்கமாக இருவர் உட்கார்ந்து கொண்டு அந்த கதைக்கு ஏற்ப தந்தனத்தா... தந்தனத்தா.. என சொல்லிக் கொண்டிருப்பார்கள். அது போல மோடி கதை சொல்வதற்கு எடப்பாடியும், ஒபிஎஸ்சும் தந்தனத்தா... தந்தனத்தா… சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஜால்ரா தட்டும் இவர்களைத் தோற்கடித்து பாடம் புகட்ட வேண்டும்.

தமிழகத்தின் சிறப்பு
தமிழகத்தில் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. சுயமரியாதை, சமூக நீதி, உயர்சாதி ஆதிக்க எதிர்ப்பு, ஒடுக்குமுறை எதிர்ப்புப் போராட்டம் என அந்த வளமான பாரம்பரியம் கொண்ட திராவிட இயக்கத்தின் வழிவந்தவர்கள் என சொல்லிக் கொள்ளும் அதிமுக ஏன் பாஜகவுக்கு ஜால்ரா தட்டுகிறது? இவர்களது செயலால் தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் வரலாற்றுப் பாரம்பரிய சிறப்புகள் நிராகரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக மக்கள் இவர்களை முற்றிலும் நிராகரிக்க வேண்டும்.
பாஜக அரசு புதிய கல்விக் கொள்கைஎன்று ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்பதைத் திணிக்கின்றனர். இந்தியாவில் தமிழ், மலையாளம்,வங்கம், ஒடியா என பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ளன. ஆனால் ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என அவர்கள் திணிப்பதை அதிமுக எப்படி ஏற்றுக் கொள்கிறது? பன்முக இந்தியா என்பதை ஒற்றை இந்தியா என மாற்ற முயல்கின்றனர். தாய்மொழி என்பதுநம் உள்ளுணர்வு சார்ந்தது, நம் உணர்வை வெளிப்படுத்தக்கூடியது. ஆனால் தாய்மொழியை தவிர்த்து, இந்தியைத் திணித்து நம் பன்மைத்துவமான மொழிகளைச் சிதைக்கின்ற னர். இதை எப்படி அதிமுக ஏற்கிறது?இந்தியாவை சிதைக்க நினைக்கும் இவர்களைத் தோற்கடிக்க வேண்டியது மிக, மிக முக்கியம். எனவே பாஜக, அதிமுக அவர்களோடு கூட்டு சேர்ந்திருப்பவர்களை திட்டவட்டமாக, வலுவாகத் தோற்கடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

                                              **************

ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி வருமானம்

கடந்த ஓராண்டு காலத்தில் இந்திய மக்களின் மூன்றில் ஒரு பகுதி, அதாவது 40 கோடி பேர் மாதம் ரூ.3 ஆயிரம் மட்டுமே பெறக்கூடியவர்களாக வறுமை நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதேசமயம் இந்திய பில்லியனர்கள் என்று சொல்லக்கூடிய பெரும் பணக்காரர்களின் சொத்து மதிப்பு ஓராண்டு காலத்தில் 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் முதன்மையான பெரும் பணக்காரர், ஒரு மணி நேரத்துக்கு ரூ.90 கோடி வருமானம் ஈட்டுகிறார். இவ்வாறு ஒரு பக்கம் பட்டினி கிடக்கும் ஏழைகளின் இந்தியா, மற்றொருபுறம் பெரும் பணக்காரர்களின் இந்தியா என இரண்டு இந்தியாவைமோடி அரசு உருவாக்கியுள்ளது. ஏன் இந்திய மக்களை இப்படி துயரப்படுத்து கிறீர்கள் என்று மோடியிடம் கேட்டால், நான் புதிய இந்தியாவை உருவாக்குகிறேன் என்கிறார். புதிய சுயசார்பு இந்தியாவை உருவாக்குவதாகக் கூறிக் கொண்டு தன்னை முன்னிலைப்படுத்தி, சுய விளம்பரம் செய்து, தனது கூட்டுக்களவாணி நண்பர்களுக்கான இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் பெயரில் இருந்த கிரிக்கெட் மைதானத்துக்கு, அந்த பெயரை நீக்கிவிட்டு, நரேந்திர மோடி மைதானம் என தனது பெயரை சூட்டி இருக்கிறார். அங்கே ஒரு முனைக்கு அதானி முனை, மற்றொரு முனைக்கு ரிலையன்ஸ் அம்பானி முனை என வெளிப்படையாகவே பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படித்தான் அவர் சுயசார்பு இந்தியாவை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.

;