politics

img

ரங்கசாமி காங்கிரசையும் விழுங்கும் பாஜக....

புதுச்சேரி:
புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்பு வேலையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே துவக்கியது பாஜக. இதற்கானஅசைன்மென்ட் ‘துக்ளக்’ குருமூர்த்தியிடம் ஒப்படைக்கப்பட்டது.

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களான நெட்டப்பாக்கம் தனித் தொகுதி விஜயவேணி, ஊசுடு தீபாஞ்சான்,பாகூர் தனவேலு, ராஜ் பவன் லட்சுமி நாராயணன் ஆகியோருக்கு வலை வீசப்பட்டது. தமிழக பகுதியான ஆரோவில் அருகில் அமைந்துள்ள பண்ணை வீட்டில் இருந்துகொண்டு இதற்கான காய்களை நகர்த்திய குருமூர்த்தியின் சதித் திட்டம் முதலமைச்சர் நாராயணசாமியால் முறியடிக்கப்பட்டது.ஆட்சிக்கு எதிராக  சதி திட்டம் திட்டியது குறித்து அன்றைக்கே முதல்வர் நாராயணசாமிக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து,  அதிமுக உறுப்பினர் வையாபுரி மணிகண்டன், என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால் ஆகியோர் மீது அரசு கொறடா அனந்தராமன் மூலம் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்துவிடம் புகார் அளிக்கப்பட்டதால் அன்றைக்கு ஆட்சிக் கவிழ்ப்பு தடுக்கப்பட்டது. 

கிரண் பேடி நடத்திய ‘போட்டி அரசு’
அடுத்ததாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆளுநர் மூலம், நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்வதில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்வது, புதிய பணி நியமனங்கள், நலத்திட்டங்கள் அறிவிப்பு வரை அனைத்து விவகாரங்களிலும் ‘போட்டி ஆட்சி’ நடத்தி, நாராயணசாமியின் ஆட்சியை கலைக்கும் பொறுப்பு துணை நிலைஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய பாஜக தலைமையால் வழங்கப்பட்டது. அவரது அனைத்து முயற்சிகளும் மக்கள்மன்றத்திலும் நீதிமன்றத்திலும் சென்று முறியடிக்கப்பட்டன.இந்நிலையில், காங்கிரஸின் சில எம்எல்ஏக்களை விலைபேசி வாங்கியது பாஜக.

நமச்சிவாயம்: கொரோனா காலத்தில்  மதுபானங்கள் மீதான அரசின் முத்திரை, ஆலோகிராம் ஸ்டிக்கர் அரசின் அனுமதிஇல்லாமல் தனியார் மதுபானகம்பெனிகளுக்கு ஒட்டியவழக்கில் சிக்கினார் நமச்சிவாயம். இந்த வழக்கை சிபிஐக்கு கிரண்பேடி அனுப்பியுள்ளார். இதுமட்டுமின்றி கணக்கில் காட்டப்படாத சொத்துக்கள் ஏராளமாக குவித்துள்ளார். இதுவும் பாஜகவிடம் கிடைக்க, ஏற்கனவே மேற்கொண்ட இரண்டு முயற்சிகளும் தொடர்ந்துபடு தோல்வியில் முடிய, அடுத்த அஸ்திரத்தை தொடுத்தது பாஜக. முதல் விக்கெட்டாக சிக்கிக் கொண்டார் நமச்சிவாயம்.

வில்லியனூர் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நமச்சிவாயம் முதலமைச்சர் நாராயணசாமிக்கு அடுத்த இடத்தில் இருந்தார். பொதுப்பணி, கலால், உள்ளாட்சி ஆகிய முக்கியதுறைகள் இவர் வசம் இருந்தது. தமது தீவிர ஆதரவாளரான ஊசுடு தீப்பாஞ்சானுடன் பாஜகவில் இணைந்துக்கொண்டார்.

ஜான்குமார்: பொதுத் தேர்தலின்போது நெல்லித்தோப்பு தொகுதியில் வெற்றி பெற்ற ஜான் குமார், முதல்வர் நாராயணசாமிக்காக தனது தொகுதியை விட்டுக்கொடுத்து ராஜினாமா செய்து, நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வைத்தியலிங்கம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, காமராஜர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.கேபிள் நெட்வொர்க் தொழிலை நடத்திவரும் ஜான்குமார் தனியார் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். அதன் கணக்கு வழக்குகளை முறையாக காட்டவில்லை என்கிற புகார் மத்திய வருமான வரி துறைக்கு பறக்கிறது. இதன் மூலம் மிரட்டப்பட்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறார்.

மல்லாடி கிருஷ்ணாராவ்: ஆந்திராவில்  உள்ளது ஏனாம் சட்டமன்ற தொகுதி. இது புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்டதாகும். இந்த தொகுதியில் இருந்து கால்நூற்றாண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதோடு தொடர்ந்து அமைச்சராகவும் இருந்து வந்தார் மல்லாடி.இதற்காக அண்மையில் அந்த ஊரில் பாராட்டுவிழாவும் எடுக்கப்பட்டது. விழாவின் ஏற்புரையில், இனி தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் அறிவித்தார். இவர் மீது ஏனாம்,கோதாவரி ஆற்றில் அணை கட்டிய ஊழல்வழக்கு ஒன்றும்  நிலுவை உள்ளது. இந்தவழக்கை கொண்டு சிபிஐ மூலம் மிரட்டப்பட்டார். அதனால் மல்லாடி கிருஷ்ணாராவ் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.

லட்சுமிநாராயணன்: முதல்வரின் நாடாளுமன்ற செயலராக இருந்தவர். புதுவை ராஜ்பவன் சட்டமன்ற தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். தான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பேரவைத் தலைவர் பதவியை தனக்கு வழங்காததால் முதலமைச்சர் நாராயணசாமி மீது கடும் அதிருப்தியில் இருந்து வந்தார். மேலும், தமக்கு கிடைக்க வேண்டியபேரவை தலைவர் பதவியை பறித்து கொண்டுசென்ற முன்னாள் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து சகோதரர் ராமலிங்கம் தனதுதொகுதியில்  போட்டியிடுவதை தடுக்கவும்  காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கு போட வைத்தனர்.

சிவக்கொழுந்து: சப்தகிரி என்ற பெயரில் ரியல் எஸ்டேட் வணிக வியாபாரம் செய்து வருகிறார் முன்னாள் பேரவைத் தலைவர் சிவக்கொழுந்து. இவர் 2000 பிளாட்டுக்கு மேல் விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்யப்பட்ட மனைகளுக்கு அரசின் உரிய அனுமதி பெறவில்லை என்ற குற்றச்சாட்டு சுமத்தி அவரையும் பாஜக தனது பக்கம் இழுத்துள்ளது. இவரது சகோதரர் ராமலிங்கம், மகன் ரமேஷ் ஆகியோரும் பாஜகவில் கரைந்து விட்டனர்.

இலவு காத்த கிளி
இந்த பின்னணியில் நாராயணசாமியின் ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் சதி திட்டம்  முடிந்தது. இந்த நிலையில் தான்எப்படியும் முதல்வர் நாற்காலியை தமக்குஇரண்டாவது முறையாக கொடுத்துவிடுவார்கள் என “இலவு காத்தகிளியாக” காத்துக் கொண்டிருந்தார் என்.ஆர். காங்கிரஸ் தலைவர் என்.ரங்கசாமி. ஆனால் இடைக்காலம் மட்டுமல்ல, இனி எப்போதும் முதலமைச்சர் பதவி கொடுக்க மாட்டோம்என்று அண்மையில் காரைக்காலில் நடந்த தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா , புதுவையில் பாஜக தலைமையில்தான்  ஆட்சி அமைக்கப்படும் என ‘அல்வா’ கொடுக்க, ரங்கசாமி மட்டுமன்றி அந்தக் கட்சி தொண்டர்களும் உறைந்து போயுள்ளனர்.

நாங்கள் ஊழலுக்கு எதிரானவர்கள் என்று ‘அக்மார்க்’ குத்திக் கொள்ளும் பாஜகவினர், என்.ஆர்.காங்கிரஸின் முந்தைய ஆட்சியின் போது  பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த அசோக் ஆனந்த், வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை மத்திய புலனாய்வுத் துறை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் அவருக்குதண்டனை வழங்கப்பட்டதால் தட்டாஞ்சாவடிசட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார்.இவரும், என். ஆர். காங்கிரஸ் ஆட்சியில் காலாப்பட்டு தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கல்யாணசுந்தரம் (கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதில் சிக்கியதால் அமைச்சர் பதவியை இழந்தவர்) - இருவரையும் இப்போது என். ஆர்.காங்கிரசுக்கு எதிராக தேர்தலில் களமிறக்க விலைபேசிய பாஜக, தங்கள் கட்சிக்குள் விழுங்கிக் கொண்டது.

மிரட்டல் பேரம்
தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்எல்ஏ அசோக் ஆனந்த் மீது சிபிஐ குற்றச்சாட்டைப் பதிவு செய்ததை அடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட நிலையில்,  அத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெற்றது. தங்கம் நல்லெண்ணெய் வியாபாரியும், ரியல் எஸ்டேட் உரிமையாளருமான வெங்கடேசன் (திமுக) போட்டியிட்டு வெற்றிபெற்றார். நில வணிகத்தில் உரிய அங்கீகாரம் பெறாமல் விற்பனை செய்தது தொடர்பாக முறையாக கணக்கு காட்டவில்லை என்று மிரட்டப்பட்டு அவரையும் பதவியை ராஜினாமா செய்ய வைத்து தங்கள் கட்சிக்குள் ஐக்கியமாக்கி கொண்டனர் பாஜகவினர்.கதிர்காமம் தொகுதியின் காங்கிரஸ் கட்சி முக்கிய பிரமுகரான கே.எஸ்.பி. ரமேஷ்மீது மாணவி ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இது நிலுவையில் உள்ளது.இதை பயன்படுத்தி மிரட்டியதோடு அவர் உள்ளிட்ட சிலரையும் தரகு பேரத்தில் அடிபணிய வைத்துள்ளது பாஜக.

வருகிற சட்டமன்ற தேர்தலில் 30 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதற்கு ஆட்களை தேடி வரும் பாஜக தற்போது குறுக்கு வழியில் தனது கூட்டணிக்கட்சியையே விழுங்க நினைக்கிறது.மாற்றுக் கட்சிகளில் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கொடுப்போம் என்ற உறுதிமொழி கொடுத்து பாஜகவில் இணைத்து வருகின்றனர். இதனால், பாஜகவுக்கு கூஜா தூக்கி வந்த ரங்கசாமியின் கட்சியே காணாமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த சூழ்நிலையில் என் ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தனியார் ஓட்டலில் செவ்வாயன்று நள்ளிரவு வரைநீடித்தது. கூட்டத்தில் கட்சியின் நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில்பங்கேற்ற பெரும்பான்மையோர் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற கருத்தை முன்மொழிந்துள்ளனர். ஆனாலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவர் ரங்கசாமிக்கு வழங்கியிருக்கின்றனர். பாஜக - என் ஆர் காங்கிரஸ் உறவு மிக விரைவில் முறித்துக் கொள்ளப்படும் என்று அக்கட்சியினர் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.ரங்கசாமி தனது கட்சியை காப்பாற்றுவாரா, காவுகொடுப்பாரா என்பது விரைவில் தெரியும்.

குறிப்பு ;  இந்த அரசியல் செய்தி தொகுப்பு முதல் பக்கம் மற்றும் 5-ஆம் பக்கம் பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்தி தொகுப்பில் 2 பகுதியும் சேர்த்து தொகுக்கப்பட்டுள்ளது.  

 

;