politics

img

மக்கள் சாகும்போதும் பாஜக சித்தாந்த மோதல் நடத்துகிறது... ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றச்சாட்டு....

ராஞ்சி:
கொரோனா 2-ஆவது அலையைக் கையாள்வதில் மத்திய அரசுஅலட்சியம் காட்டுகிறது; மாநிலங்களைப் பாரபட்சமாக நடத்துகிறது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.‘தி சண்டே எக்ஸ்பிரஸ்’ ஏட்டிற்குஇதுதொடர்பாக ஹேமந்த் சோரன் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கொரோனா என்பது மாநிலங்களின் பிரச்சனை மட்டுமல்ல. அதுநாடு தழுவிய தேசியப் பிரச்சனை.மத்திய அரசு இந்த பிரச்சனையில் இருந்து நழுவவும் முடியாது. பொறுப்பைத் தட்டிக் கழிக்கவும் முடியாது. ஆனால், மத்திய அரசுஉரிய அனுமதி தராததால் எங்களால் போதுமான மருந்துகளை இறக்குமதி செய்ய இயலவில்லை. கொரோனா பேரிடர் தொடர்பானஅனைத்தையும் மத்திய அரசுதன்கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்கிறது. ஆக்சிஜன் ஒதுக்கீடு, மருத்துவ உபகரணங்கள், தடுப்பூசி ஒதுக்கீடுகளை மத்திய அரசுதான் செய்கிறது. ஆனால் எங்களுக்கு போதுமான தடுப்பூசிகள், மருந்துகள் கிடைக்கவில்லை. அது எங் களை விட்டு விலகவும் இல்லை, எங்களுக்கு ஆதரவளிக்கவும் இல்லை (நா சோரா ஹை, நா ராக்கா ஹை).ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு 3.5 கோடி முதல் 4 கோடி தடுப்பூசிகள் தேவை. ஆனால் வெறும் 40 லட்சம்தடுப்பூசிகளைத்தான் எங்களுக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள் ளது. நாங்களே ஆக்சிஜன் உற்பத்திஆலையை அமைத்து உற்பத்தி செய்தாலும், அதனைப் பயன்படுத்தமுடியவில்லை. மத்திய அரசின் அனுமதியைப் பெற வேண்டும் என்கின்றனர். இதனால், ஆக்சிஜன் எங்கள் கண்முன்பே, மாநிலத்திலிருந்து வெளியே போகிறது. அவர்களாக இரக்கப்பட்டதால் எதுவும் மாநிலங்களுக்கு கிடைக்கும் என்ற நிலை உள்ளது.நமது நாட்டைப் பொறுத்தவரை பல்வேறு கட்சிகள், தத்தமது சித்தாந்தங்களை முன்வைக்க உரிமை உண்டு. ஆனால் அதனை முன் வைத்து சண்டை போட்டுக் கொண்டிருக்கக் கூடிய நேரம் இது அல்ல. இப்போது நடுக்கடலில் மூழ்கும் நிலையில் படகு தத்தளித்துக் கொண்டிருக்கிற நிலைதான் இருக்கிறது. இப்போது ஒருவர் (பிரதமர்) நாட்டைப் பற்றி சிந்திக்காவிட்டால், பலர் உயிர் இழப்பார்கள். கொரோனாவைரஸ் காரணமாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இறக்க மாட்டார்கள். பாஜகவைச் சேர்ந்தவர்களும்தான் இறப்பார்கள். எனவே, முதலில் அனைவரும் கரைசேர வேண்டும். அதற்கு பின்னர் கட்சி, சித்தாந்தத் சண்டைகளை பார்த்துக் கொள்ளலாம்.ஆனால், பிரதமர் நரேந்திர மோடிமாநிலங்களுக்கு செவிசாய்ப்பதில்லை. மே 7 அன்று பிரதமர் மோடியை ஒரு மெய்நிகர் சந்திப்பில் சிலநிமிடங்கள் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், உண்மை என்னவென் றால், எனக்கு ஒருபோதும் பேச வாய்ப்பு கிடைக்கவில்லை. 

ஜார்க்கண்ட் மாநிலத்தை மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய பெரியமாநிலங்களுடன் ஒப்பிடவே முடியாது. எங்களின் பட்ஜெட் ஒதுக்கீடே மிக மிகக் குறைவானது. மும்பை மாநகராட்சி என்பது மிகப் பெரிய உள்ளாட்சி அமைப்பு. அதனால் கொரோனா தடுப்பூசிகளுக்கு சர்வதேச டெண்டர் கோர முடியும். ஆனால், ஜார்க்கண்ட் மாநிலத்தால் அதுகூட இயலாது. எங்களுக்குத் தேவையான தடுப்பூசிகளை வெளிநாடுகளில் இருந்துதான் வாங்க வேண்டும் என்றால், மாநிலமே திவாலாகி விடும்.கொரோனா 2-வது அலையை மத்திய அரசு சரியாக கையாளவில்லை. மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருந்தால், முழு ஆதரவு தருகிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சியெனில், மக்கள் சாகட்டும் என விட்டுவிடுகிறது. 

பிரதமர் நிவாரண (பி.எம்.கேர்ஸ்) நிதியின் கீழ் ஆயிரக்கணக் கான கோடி ரூபாய் நன்கொடை பெறப்பட்டது. அந்த நிதி என்ன ஆனது? என்று தெரியவில்லை. நிச்சயமாக இது தொடர்பாக வெளிப் படைத்தன்மை அவசியம் தேவை. பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பாக இந்ததேசத்தின் மக்களுக்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். மக்களும் இதுபற்றி மத்திய அரசிடம் கேள்வி எழுப்ப வேண்டும்.இவ்வாறு ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.