மும்பை:
தில்லி வன்முறை சம்பவத்தின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காணாமல் போய் விட்டதாக சிவசேனா குற்றம்சாட்டியுள்ளது.மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) திரும்பப்பெறக் கோரி தில்லியில் போராடியவர்கள் மீது, அச்சட்டத்தை ஆதரிக்கும் ஆர்எஸ்எஸ்-பாஜக மதவெறிக்கும்பல் தாக்குதல் நடத்தி,வன்முறையில் ஈடுபட்டனர்.
தில்லி வன்முறை சம்பவம் தொடர்பாக சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடானசாம்னாவின் தலையங்கத்தில் கூறியிருப்பதாவது: தில்லியில் சட்டசபை தேர்தல் நடந்தபோது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாபிரச்சாரத்துக்கு நீண்டநேரம் ஒதுக்கினார். வீடு, வீடாகச் சென்று பாஜக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்தார். ஆனால் தில்லியில் நடந்த வன்முறையில் பல உயிர்கள் பறிபோனபோதும், பொதுச்சொத்துகள், தனியார் சொத்துகள் நாசப்படுத்தப்பட்ட போதும் அமித்ஷாவை எங்கும் காண முடியவில்லை.இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சியோ அல்லது வேறு எந்த கட்சியோ மத்தியில் ஆட்சியில் இருந்து எதிர்க்கட்சியாக பாஜக இருந்திருந்தால் உள்துறை அமைச்சர் பதவி விலகக் கோரி பெரியளவில் கண்டனபேரணியை நடத்தியிருக்கும். வன்முறை நடந்து 3 நாட்களுக்கு பின்னர் தான் பிரதமர் மோடி அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தில்லி வன்முறை குறித்துநாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினால், அது தேசவிரோதம் என்று அழைக்கப்படுமா? தில்லியில் நடந்த வன்முறை சம்பவங்கள் அனைத்தும் கவலைக்குரியது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.