internet

img

அரசியல் விளம்பரங்களுக்கு தடை விதித்த டிவிட்டர்!

டிவிட்டரில், அரசியல் தொடர்பான விளம்பரங்களை அடுத்த மாதம் முதல் தடை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஃபேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் தங்கள் தளத்தில் அரசியல் விளம்பரங்கள் வெளியிட்டு வருவாய் ஈட்டு வருகின்றன. இந்நிலையில், டிவிட்டரில் அரசியல் தொடர்பான விளம்பரங்களை தடை செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டிவிட்டரில் இந்த தடை வரும் நவம்பர் 22 முதல் அமலுக்கு வருகிறது. மேலும் இது குறித்த முழு தகவல்கள் நவம்பர் 15-ஆம் தேதியன்று வெளியிடப்படுகிறது.

இது குறித்து டிவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்ஸே தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். அதில், ”அரசியல் விளம்பரங்களின் தாக்கம் என்பதை சம்பாதிக்க வேண்டும், விலைகொடுத்து வாங்கக்கூடாது. எனவே, சர்வதேச அளவில் டிவிட்டர் பக்கத்தில், அரசியல் விளம்பரங்களை வெளியிட தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். சமூக வலைத்தளங்களில் செய்யப்படும் விளம்பரங்களுக்கு பெரும் பலம் உள்ளது. வணிக ரீதியிலான விளம்பரதாரர்களுக்கு பெரும் ஆதாயம் உள்ளது. ஆனால் அதேவேளையில் இந்த அரசியல் விளம்பரங்கள் அரசியல் களத்துக்கு ஆபத்தை விளைவிக்கிறது'' என்று  தெரிவித்திருந்தார்.