internet

img

உங்களுக்கு இந்த ஆப்ஸ் உதவலாம் ஆப்களைக் கண்காணிக்க ஆப்ஸ்

ஸ் மார்ட்போன் பயனர்களின் தனிப்பட்ட விபரங்களைச் சேகரிக்கும் செயலிகளைப் பற்றி பிரபல ஆண்ட்டிவைரஸ் மென்பொருள் நிறுவனமான கேஸ்பர்ஸ்கை ஆய்வுக் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பல செயலிகள் தங்களுடைய பயன்பாட்டுக்குத் தொடர்பில்லாத, தேவையில்லாத விபரங்களையும்கூட பயனர்களிடமிருந்து சேகரித்துவிடுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நம்முடைய ஸ்மார்ட்போன்களில் உள்ள ஆப்கள் நம்முடைய அனுமதியுடன் இருப்பிடம், குறுஞ்செய்திகள், போன்புக் எனப் பல விபரங்களையும் சேகரிக்கின்றன. பொதுவாக. தங்கள் தரத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் தங்களுக்கு ஆதாயம் பெறவுமே செயலிகள் பயனர் விபரங்களை சேகரிக்கின்றன. உதாரணமாக கூகுள் மேப் செயலியைப் பயன்படுத்தி ஒரு வழித்தடத்தை நீங்கள் உருவாக்கிச் செல்லும்போது அதனை அதனைத் தன்னுடைய சர்வரில் சேமித்து வேறொருவர் அந்த வழித்தடத்தைப் பயன்படுத்து முற்படும்போது காட்டும். அதுபோலவே வாட்ஸ்அப், கூகுள் பே போன்ற செயலிகள் நம்முடைய ஃபோன்புக் விபரங்களை எடுத்துக்கொண்டு அதில் வாட்ஸ்ஆப் அல்லது கூகுள் பே பயனர்கள் யார் யார் என்பதைக் காட்டுகிறது. இதுபோன்ற அவசியமான வகையில் நம்முடைய விபரங்களைப் பயன்படுத்துவதில் நமக்கு பயன் உள்ளது. ஆனால், சில செயலிகள் பயனரை ஏமாற்றி தங்களுடைய செயலிக்கு முற்றிலும் தொடர்பில்லாத விபரங்களையும் சேகரிக்கின்றன. நம்மிடம் இருந்து எந்தெந்த தகவல்களை சேகரிக்கின்றன, அவற்றை யாருக்கு அனுப்புகின்றன போன்ற விபரங்களை அறிந்து கொள்ளவும் வழி உள்ளது. டைனமிக் அனாலசிஸ் எனும் வழிமுறையை பயன்படுத்தி செயல்படும் சில செயலிகள் இதற்கு உதவுகின்றன. இந்த செயலியை ஃபோனில் இன்ஸ்டால் செய்தால், ஃபோனில் உள்ள செயலிகளைக் கண்காணித்து அவை சேகரிக்கும் தகவல்களையும், யாருக்கு அனுப்புகின்றன என்பதையும, அந்தத் தகவல்கள் என்க்ரிப்ட் செய்யப்பட்டு இருக்கிறதா என்ற விபரங்களையும் கண்டறியும்.  இந்த வகையில் சிறந்த ஆப்களாக கூகுள் பிளேஸ்டோரில் கிடைப்பவை EAGLE Security FREE மற்றும் Exodus Privacy ஆகிய ஆப்களாகும். ஈகிள் செக்யூரிட்டி மற்றும் எக்சோடஸ் பிரைவசி செயலிகள் ஃபோனில் உள்ள பிற செயலிகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும். செயலி பயன்படுத்தக் கேட்கும் அனுமதி, டிராக்கர்கள், பயனரின் தகவல்களை சேகரிக்கும் மூன்றாம் தரப்பு நிரல்கள் போன்றவற்றை ஆய்வு செய்து நமக்குத் தகவல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றன.

மூளைக்கு வேலை
மூளைக்கு ஞாபக சக்தியையும், ஸ்மார்ட்டாக செயல்படும் திறனையும் அளிக்கும் விளையாட்டுக்களைக் கொண்ட ஸ்மார்ட்டர் (Smarter - Brain training & Mind games) ஆப் அனைத்து வயதினருக்கும் ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது. கூர்மைத் திறன், கணித அறிவு, நினைவாற்றல் எனப் பன்முக ஆளுமையை வெளிப்படுத்தும் விளையாட்டுக்கள், புதிர்கள், கணக்குகளால் நம்மைக் கட்டிப்போடுகிறது. பயன்படுத்திப் பார்க்கலாம்.

தூக்கத்தை நினைவூட்ட ஒரு ஆப்
பல்வேறு பணிகளுக்கிடையே தூக்கம் என்பது தற்போது குறைந்து வருகிறது. இதனை தவிர்க்க வேண்டும், சரியாகத் தூங்க வேண்டும் என்று எண்ணுபவர்களுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது SleepTown என்ற இந்த ஆப். இரவு கடந்தும் ஃபோனில் நேரத்தை செலவிடுபவர்கள், தினசரி தூக்கத்தை 4 முதல் 10 மணி நேரம் வரை தொடர விரும்புபவர்கள், குறிப்பிட்ட நேரத்தில் படுத்து குறித்த நேரத்தில் எழுந்துவிடவேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த ஆப் உதவும். உங்கள் அன்றாட தூக்கத்தைப் பற்றிய சர்வே ரிப்போர்களையும் தரக்கூடியது. இரவு நேரத்தில் நீல விளக்கொளியை உமிழும் வசதி இதில் உள்ளது. அலாரம் போல இதனை உருவாக்காமல் நகரத்தை உருவாக்கும் விளையாட்டாக உருவாக்கியிருப்பதால் ஒவ்வொரு நாளுக்குமான இலக்குகள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை முடித்துவிட்டு தூங்குவதும், குறித்த நேரத்தில் எழுந்தால் அடுத்த இலக்குகளை அடைய வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. புதுமையாக உருவாக்கப்பட்ட ஒரு ஆப்.