அறிமுகமில்லாத மென்பொருள்களை பதிவிறக்குவது, இணைய லிங்க்குகளைக் கிளிக் செய்வது, பணப் பரிவர்த்தனை தொடர்பான பயன்பாடுகளை மேற்கொள்வது போன்ற எந்த ஒரு ஆன்லைன் செயல்பாடுகளும் வைரஸ், ஹேக்கிங் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும்.
விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு அப்டேட் வழங்குவதை கடந்த ஜனவரி 15, 2020 அன்றுடன் நிறுத்திவிட்டது மைக்ரோசாப்ட். இனி விண்டோஸ் 7 பயனாளர்கள் அனைவரும் உடனடியாக விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கு மாறிக் கொள்ளவேண்டும் என்றும் அறிவித்துள்ளது. தொடர்ந்து விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், வைரஸ் பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் உடனடியாக இயங்குதளத்தை மாற்றாமல் தொடர்ந்து விண்டோஸ் 7 இயங்குதளத்தை பயன்படுத்த நினைப்பவர்கள் சில பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றலாம்.
அப்டேட் நிறுத்தவும்
உங்கள் கணினியில் விண்டோஸ் அப்டேட் ஆப்சன் இயக்கத்திலிருந்தால் அதனை உடனடியாக நிறுத்தவும். இது விண்டோஸ் 10 இயங்குதளத்திற்கான அப்டேட்களைப் பெற்று தன்னைப்புதுப்பித்துக் கொள்ளக்கூடும்.
எக்ஸ்புளோரர் வேண்டாம்
விண்டோஸ் 7 இயங்குதளத்தில் விண்டோஸ் எக்ஸ்புளோரர் பிரௌசரை இனிப் பயன்படுத்தாதீர்கள். அதை நீக்கிவிடுவது நல்லது. ஓபேரா, ஃபயர்பாக்ஸ், கூகுள் குரோம் போன்ற பிரௌசர்களைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் அவ்வப்போது அப்டேட் செய்து பயன்படுத்துங்கள். பிரௌசர்களை புதிதாக டவுன்லோட் செய்யும்போது உரிமையாளர் இணையதளங்களிலிருந்து டவுன்லோட் செய்யுங்கள். மூன்றாவது நபர் இணையதள இணைப்புகளிலிருந்து எந்த மென்பொருளையும் பதிவிறக்க வேண்டாம். கூகுள் குரோம் பிரௌசர் 2021 வரை விண்டோஸ் 7 கணினிக்கு ஆதரவை வழங்க உள்ளதாக அறிவித்திருப்பது மகிழ்ச்சியான விஷயம்.
இணையப் பயன்பாட்டை குறைக்கவும்
விண்டோஸ் 7 கணினிகளைப் பொறுத்தவரை இணைய இணைப்பைத் தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. பொழுதுபோக்காக பிரௌசிங் செய்வது, அறிமுகமில்லாத மென்பொருள்களை பதிவிறக்குவது, இணைய லிங்க்குகளைக் கிளிக் செய்வது, பணப் பரிவர்த்தனை தொடர்பான பயன்பாடுகளை மேற்கொள்வது போன்ற எந்த ஒரு ஆன்லைன் செயல்பாடுகளும் வைரஸ், ஹேக்கிங் தாக்குதல்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும். இணையத் தொடர்பையே துண்டித்துவிட்டால் 10 ஆண்டுகள்கூட விண்டோஸ் 7 இயங்குதளத்தைப் பயன்படுத்த முடியும்.
அதிக மென்பொருள்கள் வேண்டாம்
விண்டோஸ் 7 இயங்குதளத்திற்கு உரிய மென்பொருள்களை மட்டும் நிறுவவும். தேவையில்லாத மென்பொருள்களை நிறுவி சுமையைக் கூட்டவேண்டாம்.
போர்ட்டபிள் டிவைஸ் பயன்பாடு
மெமரி கார்டு, பென்டிரைவ் சாதனங்கள் வைரஸ்களைக் கடத்தும் என்பதால் ஆண்டி வைரஸ் மென்பொருளில் சோதித்துப் பயன்படுத்தவும். வெளி நபர்களின் மெமரி சாதனங்களைப் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
தரமான ஆண்டிவைரஸ் அவசியம்
இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் சரியான முறையில் செயல்படுவதில்லை. எனவே, கட்டண முறையில் கிடைக்கும் தரமான ஆண்டிவைரஸ் மென்பொருளை நிறுவிப் பயன்படுத்துவது அவசியம். வாரம் ஒரு முறை கணினியை முழு ஸ்கேனிங் செய்யவேண்டும். வாரம் ஒருமுறையாவது அப்டேட் செய்துகொள்வது அவசியம்.
இறுதியாக...
விண்டோஸ் 7 இயங்குதளத்தை தொடர்ந்து பயன்படுத்த விரும்புகிறவர்கள், மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிச்சயம் கடைப்பிடிக்க வேண்டும். இணையத்தையே பயன்படுத்தாமல், பிற கணினிகள் மற்றும் எந்தவொரு நெட்வொர்க் சாதனங்களுடன் இணைக்காமலும் பயன்படுத்தினால் இன்னும் 10 ஆண்டுகள் கூட பயன்படுத்தலாம். இதுபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் 10 ஆண்டுகளுக்கு முன் கைவிடப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை இன்றும்கூட பயன்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். எனவே, இதுபோல விண்டோஸ் 7 இயங்குதளத்தையும் சரியான பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு பல ஆண்டுகள் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
===என்.ராஜேந்திரன்===