இந்த அல்லாதவர் ஒருவர் உணவு கொண்டு வந்ததால், சொமேட்டோ வாடிக்கையாளர் ஒருவர் உணவு ஆர்டரை ரத்து செய்து, இது குறித்து டுவிட்டரில் பதிவிட்டார். இதற்கு பதில் அளித்த சொமேட்டோ நிறுவனம், உணவுக்கு மதம் கிடையாது என பதில் அளித்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், ஜபல்பூரைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர், ஆன்லைன் மூலம் சொமேட்டோ செயலியில் உணவு ஆர்டர் செய்துள்ளார். உணவை டெலிவரி செய்யும் சொமேட்டோ ஊழியர் குறித்த விவரங்கள் வாடிக்கையாளருக்கு வந்த நிலையில், ஊழியரை மாற்ற சொல்லி சொமேட்டோ நிறுவனத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்ததால், இந்த வாடிக்கையாளர் ஆர்டரை ரத்து செய்துள்ளார்.
இதை அடுத்து, உணவு ஆர்டர் செய்த இந்த வாடிக்கையாளர் சொமேட்டோ நிறுவனத்தின் டுவிட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதில் " நான் சொமேட்டோவில் ஆர்டர் செய்திருந்திருந்ததை ரத்து செய்கிறேன். நான் ஆர்டர் செய்திருந்த உணவை இந்து அல்லாத ஒருவர் எனக்கு டெலிவரி செய்யச் சொல்லி இருக்கிறார்கள். நான் உணவு டெலிவரி செய்பவரை மாற்றுங்கள் என்று கூறியும் அவர்கள் மாற்ற முடியாது, பணத்தையும் திரும்பத் தரமுடியாது என்று தெரிவித்துவிட்டார்கள். என்னை உணவை ஏற்றுக்கொள்ளச் சொல்லி நீங்கள் கட்டாயப்படுத்த முடியாது. எனக்கு உணவும் வேண்டாம், பணமும் வேண்டாம், ஆர்டரை ரத்து செய்கிறேன்" எனத் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் இந்த உரையாடலை அந்த வாடிக்கையாளர் செல்போனில் ஸ்க்ரீன்ஷாட் எடுத்து வழக்கறிஞர் மூலம் இதைக் கொண்டு செல்வேன் எனவும், இந்து அல்லாதவர் மூலம் எடுத்துவரப்படும் உணவை விரும்பவில்லை எனவும் சொமேட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திடம் தெரிவித்துள்ளார். இதற்கு சொமேட்டோ நிறுவனம், "உணவுக்கு மதம் கிடையாது. உணவே ஒரு மதம் தான்" என்று அந்த வாடிக்கையாளர் பதிவுக்கு பதில் அளித்துள்ளது.