யுடியூப்
யுடியூப் தளத்தைப் பயன்படுத்துபவர்கள் எந்த மென்பொருளையும் பயன்படுத்தாமல் ஆன்லைன் தளங்கள் மூலமாகவே சில வேலைகளை செய்து கொள்ளலாம். அப்படிச் சில வசதிகளை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் யுடியூப் வீடியோவை பதிவிறக்கம் செய்வதற்கு, அட்ரஸ் பாரில் உள்ள யுடியூப் தள முகவரியில் “youtube” என்ற பெயருக்கு முன்பாக “ss” என்ற எழுத்துக்களை மட்டும் இணைக்கவும். “ssyoutube” என்பதாக அந்த முகவரி தொடங்கும். இப்போது எண்டர் தட்டவும். உடனடியாக https://en.savefrom.net என்ற தளம் திறந்து நீங்கள் பார்த்த வீடியோவை டவுன்லோட் செய்வதற்கான அளவுகள் காட்டப்படும். தேவையான அளவை தேர்வு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ மீண்டும் மீண்டும் மறுதொடக்கம் செய்யப்படவேண்டும் என்றால் இணைய முகவரியில் “youtube” என்ற எழுத்துக்களை நீக்கிவிட்டு “listenonrepeat”என்பதைத் சேர்த்து எண்டர் கொடுக்கவும். https://listenonrepeat.com என்ற தளத்தில் உங்கள் யுடியூப் வீடியோ ரிபீட் முறையில் இயங்கத் தொடங்கும்.யுடியூப்பில் பார்க்கும் வீடியோவை ஜிஃப் (Gif) படக் கோப்பாக மாற்றிக் கொள்ள “youtube” தள முகவரிக்கு முன்பாக “gif” என்பதை இணைத்து “gifyoutube” என முகவரியை மாற்றி எண்டர் கொடுத்தால் https://gifs.com/ என்ற தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தேவையான வீடியோ பகுதியை ‘GIF’ படக் கோப்பாக மாற்றிக் கொள்ளலாம். அளவை மாற்றுதல், எஃபெக்ட்கள் சேர்த்தல், வெட்டுதல் எனப் பல எடிட்டிங் வசதிகளும் இத்தளத்தில் உள்ளது.
டாஸ்க் மேனேஜரைத் திறக்க
விண்டோஸ் கணினியில் செயல்பாட்டிலுள்ள மென்பொருள்கள் குறித்த விபரத்தை அறிய டாஸ்க் மேனேஜர் விண்டோவைத் திறக்க Ctrl + Shift + Esc என்ற கீகளை சேர்த்து அழுத்திப் பெறுவோம். இதே போல குரோம் உலாவியில் பின்புலத்தில் இயங்கும் செயல்பாடுகளைக் கண்டறிந்து நீக்குவதற்கும் வசதி உள்ளது. அதற்கு குரோம் உலாவி திறந்திருக்கும் நிலையில் Shift + Esc கீகளை சேர்த்து அழுத்தினால் குரோமின் டாஸ்க் மேனேஜர் விண்டோ திறக்கும்.
கூகுள் தரும் ப்ராக்ஸி (Proxy) வசதி
இணையத்தில் நம்முடைய அடையாளம் என்பது ஐபி முகவரி மூலம் கண்டறியப்படுகிறது. நம்முடைய இணைய செயல்பாடுகளை கணினியிலும் இணையதளங்களிலும் பதிவாகாமல் இருக்க உதவும் வசதிதான் ப்ராக்ஸி (Proxy) சேவையாகும். இச்சேவையைப் பெற மென்பொருள்கள், இணையதளங்கள் மற்றும் பிரௌசர் செயலிகள் பல இருக்கின்றன. அத்தகைய வசதியை கூகுள் மூலமும் பயன்படுத்தலாம். https://translate.google.co.in/ என்ற கூகுளின் மொழி மாற்றி தளம் இதற்கு உதவும். மொழிமாற்றுவதற்கு காட்டப்படும் இரண்டு விண்டோக்களில் முதல் விண்டோவில் நாம் பார்க்க விரும்பும் இணையதள முகவரியை உள்ளிட்டு, ஏதேனும் ஒரு மொழியை கிளிக் செய்து கொள்ளவும். மறுபக்க விண்டோவில் ஆங்கிலம் தேர்வு செய்து கொள்ளவும். இந்த விண்டோவில் தோன்றும் முகவரியை நேரடியாக கிளிக் செய்தால் அது கூகுள் தளத்தின் வழியாக நமக்குத் திறக்கும்.
===என்.ராஜேந்திரன்====