internet

img

கணினிக்கதிர் குழந்தைகளைக் கண்காணிக்கலாம் - கட்டுப்படுத்தலாம்

குழந்தைகளின் செல்பேசி பயன்பாட்டைத் தடுக்காமல், உபயோகமான தகவல்களை மட்டும் பெறுவதற்கும், அதனை நெறிப்படுத்தி பெற்றோர்கள் கண்காணிக்கவும் உதவும் வகையில் கூகுள் நிறுவனத்தின் ஃபேமிலி லிங்க் செயலி (Google Family Link for parents) பயன்படுகிறது. இந்த செயலியைப் பயன்படுத்தி குழந்தைகளின் செல்பேசி பயன்பாட்டை 24 மணி நேரமும் கண்காணிக்கலாம் - கட்டுப்படுத்தலாம். இதைப் பயன்படுத்த கூகுள் மின்னஞ்சல் கணக்கும், இணைய இணைப்பும் மட்டும் போதுமானது.


இவ்வசதி 13 வயதுக்குக் குறைவான குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தேவைக்கேற்ப பெரியவர்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ள வசதி உள்ளது. இரண்டு போன்களிலும் ‘ஃபேமிலி லிங்க் செயலி மூலமாக ஒப்புதல் பெற்று கட்டுப்படுத்தும் வசதியைப் பெறலாம். இதன்மூலம் இணையம் குறித்த புரிதல் குறைவானவர்கள் செல்பேசி பயன்படுத்தும்போது தவறான செயலிகளைப் பதிவிறக்குதல், போலி இணைய தளங்களுக்கு செல்வது போன்றவற்றைத் தடுக்கலாம்.


எப்படி செயல்படுத்துவது?

குழந்தைகள் பயன்படுத்தும் ஃபோனில் அவர்களுக்கென்று ஒரு கூகுள் கணக்கை உருவாக்கவும். பிறந்த ஆண்டு சரியாகக் குறிப்பிடும்போது அவர்கள் வயது 13-க்கு குறைவாக இருந்தால் பெற்றோர் அல்லது காப்பாளரின் மின்னஞ்சல் முகவரி கூடுதலாக கேட்கும். அதில் பெற்றோரின் செல்பேசியில் பதிந்து பயன்படுத்தி வரும் மின்னஞ்சல் கணக்கு முகவரி மற்றும் பாஸ்வேர்ட் வழங்க வேண்டும். இதனை உறுதிசெய்து முகவரி உருவாக்கப்பட்டதும் பெற்றோரின் செல்பேசியில் ஃபேமிலி லிங்க் செயலியை பதிவிறக்க அனுமதி கேட்கும். அனுமதியை வழங்கி பதிந்து கொள்ளவும்.


கட்டுப்படுத்துதல் மற்றும் கண்காணித்தல்

செயலி செயல்படத் தொடங்கியதும் பிளே ஸ்டோரிலிருந்து குழந்தைகளுக்கு வழங்கலாம் என்று பெற்றோர் அனுமதிக்கும் ஆப்கள் மட்டுமே பதிவிறக்கம் செய்யமுடியும். புதிய ஆப்கள் பதிவிறக்க முயன்றால் அதுகுறித்த அனுமதி பெற்றோரின் செல்பேசியில் அல்லது மின்னஞ்சல் கணக்கில் அனுமதி கேட்கப்படும். செல்பேசிகளை வெளியிடங்களுக்கு செல்லும்போது குழந்தைகள் எடுத்துச் சென்றால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதை கூகுள் மேப் மூலம் கண்காணிக்கும் வசதியும் இந்த செயலியில் உள்ளது. குழந்தைகள் போன் பயன்படுத்திய நேரம், பயன்படுத்திய செயலிகள், ஒவ்வொரு செயலியிலும் செலவிட்ட நேரம் எனப் பல்வேறு தகவல்களைப் பெறலாம். குறிப்பிட்ட நேரம் மட்டுமே செல்பேசியைப் பயன்படுத்துவதற்கு நம்முடைய செல்பேசி வழியாகவே கால அளவை மாற்றி அமைக்கலாம்.

===என்.ராஜேந்திரன்===