===என்.ராஜேந்திரன்===
மொழிகளைக் கற்பது எளிது...
புதிய மொழியைக் கற்றுக் கொள்வதற்கு பலருக்கும் தயக்கம் ஏற்படுகிறது. கூடுதலாக மொழிகளைக் கற்றுக்கொள்வது அவசியம். பல மொழிகளைக் கற்றுக்கொள்வது, புதிய பல வாய்ப்புகளைப் பெறுவதற்கும் முன்னேறுவதற்கும் காரணமாக அமையலாம். நம்முடைய செல்பேசி மற்றும் கணினி மூலமாகவே பல மொழிகளைக் கற்றுக்கொள்ளும் வசதிகள் எளிதாக கிடைக்கிறது. அந்த வகையில் இலவசமாக பல்வேறு மொழிகளையும் கற்க டூலிங்கோ (www.duolingo.com) என்ற ஆன்லைன் வலைத்தளம் உதவும்.
மொழி கற்றலை ஒரு வீடியோ விளையாட்டுப் போல உணரும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தத் தளம். இத்தளத்தில் கற்க விரும்பினால், பயனர் கணக்கு ஒன்றைத் தொடங்கி, கற்க விரும்பும் மொழியைத் தேர்வு செய்யவேண்டும். தனித் தனித் தொகுப்புகளாக கொடுக்கப்பட்டுள்ள பாடங்களை வரிசையாக ஒவ்வொரு நிலையாகத் தேர்வு செய்து கற்றுக் கொள்ளலாம். கற்பதற்கு ஒதுக்க முடிந்த நேரம் 5 நிமிடமாகக் கூட வரையறை செய்து கொள்ளலாம் என்கிறது இந்தத்தளம். பாயிண்ட்ஸ் அடிப்படையில் கற்றல் மதிப்பிடப்படுகிறது.
இதில் கொடுக்கப்படும் விளையாட்டுக்கள் நாம் கற்றுக்கொள்கிறோம் என்பதையே மறந்துவிடும் வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.ஆங்கிலம், பிரெஞ்ச், இத்தாலி, ஸ்பானிஷ், ஜெர்மன், ஜாப்பனீஷ், கொரியன், சீனம், இந்தி, ரஷ்யன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளை இத்தளத்தின் மூலம் கற்றுக்கொள்ள முடியும்.
இத்தளத்தின் வழியாக பள்ளிகளை இணைத்துக்கொண்டு மாணவர்கள், ஆசிரியர்களின் துணையோடு மொழிகளைக் கற்றுக்கொள்ளவும், வழிகாட்டவும் சிறப்பு வசதிகள் உள்ளன.
மென்பொருள் அறிமுகம் கணினியில் ஓவியம் வரைய..
கணினியில் சாதாரணமாக படங்கள் வரைய MSPaint மென்பொருளையோ, போட்டோஷாப் மென்பொருளையோ பயன்படுத்துவது வழக்கம். இவற்றிற்கு மாற்றாக அதிகமான வசதிகளுடன் தொழில்முறை ஓவியர்களுக்கும் உதவும் இலவச மென்பொருள் கிரிட்டா. ஓப்பன்சோர்ஸ் முறையில் உருவாக்கப்பட்ட இம்மென்பொருள் விண்டோஸ், லினக்ஸ், ஆப்பிள் கணினிகளுக்கு இலவசமாகக் கிடைக்கிறது. ஓவியம் வரைவதில் உங்கள் குழந்தைகளுக்கு ஆர்வம் இருந்தால் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் பதிவிறக்கிக் கொடுத்து கற்க உதவலாம். இம்மென்பொருள் பதிவிறக்கவும், செயல்முறைகளை அறிந்துகொள்ளவும் https://krita.org என்ற தளத்தைப் பார்க்கவும்.