internet

img

இந்நாள் ஜுன் 14 இதற்கு முன்னால்

1822 - கணினியின் தந்தை என்றழைக்கப்படும் சார்லஸ் பாபேஜ், தனது வித்தியாசப்பொறி(டிஃபரன்ஷியல் என்ஜின்) என்னும் எந்திரவியல் கணக்கிடும் கருவியை அரச வானியல் கழகத்தில் அறிமுகப்படுத்தினார். கணிதவியலாளர், மெய்யிலாளர், எந்திரவியல் பொறியாளர், கண்டுபிடிப்பாளர் என்று பல்துறை விற்பன்னராகத் திகழ்ந்த பாபேஜ் உருவாக்கிய இந்த வித்தியாசப்பொறி, பின்னர் முயற்சித்த பகுப்பாய்வுப்பொறி(அனாலிட்டிக்கல் என்ஜின்) ஆகியவையே முதல் எந்திரவியல் கணினிகள் என்பதுடன், நவீன கணினிகளுக்கான அடிப்படைகளாகவும் அமைந்தன. மடக்கை(லாக்), முக்கோணவியல் உள்ளிட்ட, பொறியாளர்கள், அறிவியலாளர்கள் பயன்படுத்தும் பெரும்பாலான கணிதச் சார்புகள், பல்லுறுப்புக் கோவைகளைப் பயன்படுத்திக் கணக்கிடப்பட்டு, கணித அட்டவணைகள் உருவாக்கப்பட்டன. சிக்கலான இந்தக் கணக்கீடுகளைச் செய்து, பிழையில்லாத அட்டவணைகளை உருவாக்குவதில் தொடர்ந்து இருந்துவந்த சிரமங்களைக் களையும் முயற்சியாகவே பாபேஜ் இதனை வடிவமைத்தார். தொடர்ந்து வகுத்துக்கொண்டே சென்று, கிடைக்கும் வித்தியாசத்தைப் பயன்படுத்திக் கணக்கிடும் முறையைப் பயன்படுத்தியதால் வித்தியாசப்பொறி என்றழைக்கப்பட்ட இதில் முதலாவதை(வித்தியாசப்பொறி-0) 1819இல் உருவாக்கத் தொடங்கி, 1822இல் முடித்தபின்னர்தான் அறிமுகப்படுத்தினார். அட்டவணைகளை உருவாக்குவதில் பேருதவியாக இருக்கும் என்பதால், இத்திட்டத்திற்கு 1700 பவுண்டுகளை(தற்போது சுமார் ஒன்றேமுக்கால் கோடி ரூபாய்) இங்கிலாந்து அரசு கொடுத்தது. 1832இல் சிறியதான வித்தியாசப்பொறி-1ஐ உருவாக்கினாலும், 1842இல் பதினேழாயிரம் பவுண்டுகள்(பதினாறேமுக்கால் கோடி ரூபாய்!) செலவாகியும் முழுமையான வித்தியாசப்பொறி நிறைவுறவில்லை. இதற்கிடையில் பகுப்பாய்வுப்பொறியைநோக்கி அவர் கவனம் திரும்பிவிட, அட்டவணைகள் உருவாக்குவதில் எவ்வளவு செலவு மிச்சமாகும் என்பதைமட்டுமே கணக்கிட்ட அரசு, இச்செலவு விரயம் என்று கைவிட்டது. பகுப்பாய்வுப்பொறிக்கான அடிப்படைகளையும் இணைத்து, 31 இலக்க எண்களையும் எளிதாகக் கணக்கிடும் வித்தியாசப்பொறி-2க்கான வடிவமைப்பை 1849இல் உருவாக்கினார். நிதிப்பற்றாக்குறையால் உருவாக்கப்படாமலே நின்றுபோன இதனை, 1791இல் பிறந்த பாபேஜின் 200ஆம் ஆண்டையொட்டி, லண்டன் அறிவியல் அருங்காட்சியகம் உருவாக்கியபோது, அது முழுமையாகச் செயல்பட்டு, பாபேஜின் வடிவமைப்பு சரியென்று நிரூபித்தது. 1940களுக்குப்பின்தான் கணினிகள் உருவானாலும், அவற்றுக்கான அடிப்படைகளைக்கொண்ட பகுப்பாய்வுப்பொறிக்கான வடிவமைப்பை நூறாண்டுகளுக்கு முன்பாக, 1837இலேயே பாபேஜ் உருவாக்கிவிட்டார்!