india

img

ரூ. 20 ஆயிரம் கோடிக்கு 70 ஆண்டு கட்டமைப்பை சிதைப்பதா? தேசிய பணமாக்கல் திட்டம் குறித்து மோடி அரசுக்கு ப. சிதம்பரம் கேள்வி....

மும்பை:
ஒன்றிய பாஜக அரசு தேசிய பணமாக்கல் திட்டத்தின் (National Monetisation Pipeline) நோக்கங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளில் வருவாயைப் பெருக்குவதுதான் உண்மையான நோக்கமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக மும்பையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அடுக்கடுக்கான கேள்விகளை அவர் எழுப்பியுள்ளார்.“அடுத்த 4 ஆண்டுகளில் குறிப்பிட்ட சில சொத்துகளில் இருந்து ரூ. 6 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்போவதாக அரசு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசு அடையாளம் கண்டுள்ள அந்தச் சொத்துகள் ஆண்டுதோறும் தவறாமல் வருவாய் ஈட்டக் கூடியதாக இருக்கின்றன. இந்நிலையில், வழக்கமாக அந்த சொத்துக்களில் இருந்து கிடைக்கும் வருவாய்க்கும், குத்தகைக்கு விடுவதன் மூலம் அடுத்த 4 ஆண்டுகளில் கிடைக்கும் ரூ. 6 லட்சம் கோடிக்கும் இடையிலான வித்தியாசம் எவ்வளவு என்பதை ஒன்றிய அரசு மதிப்பிட்டுள்ளதா?

தற்போது ரூ. 1.30 லட்சம் கோடி கிடைக்கிறது. தனியாருக்கு தருவதன் மூலம் ரூ. 20 ஆயிரம் கோடி கூடுதலாக ரூ. 1.50 லட்சம் கோடிதான் கிடைக்கும் என்றால், அதற்காக 70 ஆண்டுகளாகக் கட்டமைத்த நிறுவனங்களை விற்பது சரியாக இருக்குமா?
தேசிய உள்கட்டமைப்புத் திட்டத்துக்கு ரூ. 100 லட்சம் கோடி தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு, அடுத்த 4 ஆண்டுகளில் திரட்டப்படும் இந்த ரூ. 6 லட்சம் கோடி எவ்வாறு போதுமானதாக இருக்கும்?நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 5.5 லட்சம் கோடி நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்ய ரூ. 6 லட்சம் கோடி பயன்படுத்தப்படாதா?முதலில், ரூ. 6 லட்சம் கோடி கிடைக்கும் என அடையாளம் காணப்பட்டு குத்தகைக்கு விடுவதற்கு இருக்கும் சொத்துகளின் ஒட்டுமொத்த மூலதனத்தின் மதிப்புதான் என்ன? தனியாருக்கு விடப்படும் சொத்துக்கள், 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றிய அரசிடம் திரும்பும்போது, அதன் மதிப்பு என்னவாக இருக்கும்? 

ஒருவர் வீட்டு உரிமையாளராக இல்லாதபோது- குத்தகைதாரராக இருக்கும்போது அவர் அந்த வீட்டைப் பராமரிக்கவோ, பழுதுபார்க்கவோ அல்லது மேம்படுத்தவோ செய்வாரா? மாறாக, சொத்து அரசுக்கு சொந்தமானது என்பதால், 4 ஆண்டுகளும் அரசே பராமரிப்பு செய்யுமா?குத்தைக்கு விடப்படும் சொத்துக்கள் சார்ந்த துறைகளில் பணியாற்றுவோருக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படுமா, இட ஒதுக்கீடு முறை கடைப்பிடிக்கப்படுமா?” இவ்வாறு ப. சிதம்பரம் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

;