வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் நவம்பர் 13-ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தின் ரேபரேலி ஆகிய இரண்டு இடங்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதை தொடர்ந்து, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தி ரேபரேலி எம்.பி-யாக பதவியேற்றுக்கொண்டார். இந்த சூழலில், வயநாடு மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வயநாடு மக்களவைத் தொகுதியில், அக்டோபர் 25-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். அக்டோபர் 30-ஆம் தேதி வேட்புமனுவைத் திரும்பப் பெற கடைசி நாள். நவம்பர் 13-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், தேர்தல் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 23-ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.