india

img

அடுப்பு மட்டுமல்ல; வயிறும் எரிந்ததை மறக்க முடியுமா

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சமையல் எரிவாயு உருளை விலையில் ரூ.100 குறைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் லட்சக்கணக்கான பெண்களின் நிதிச்சுமை குறையும் என்று அவர்  புளகாங்கிதம் அடைந்துள்ளதோடு குடும்பங்களில் நல்வாழ்வை ஆதரிப்பதோடு ஆரோக்கியமான சூழலை உறுதிசெய்வதையும் நோக்கமாக கொண்டுள்ளதாகவும்  பெண்களுக்கு அதிகார மளிப்பது என்ற கொள்கையில் உறுதிப்பாடு கொண்டுள்ளதாகவும் பிரதமர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கி வழிகிறது பாசம்
பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்று 10 ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஆண்டுகளில் மகளிர் தினத்தின்போது அவர் ஒருமுறை கூட சமையல் எரிவாயு விலையை குறைத்ததில்லை. மாறாக, உயர்த்திக் கொண்டேதான் இருந்தார். ஆனால் இந்த ஆண்டு மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ளதால் அவருக்கு சமூகத்தில் சரிபாதியாக உள்ள பெண்களின் மீது பாசம் பொங்கி வழிகிறது. சமையல் எரிவாயு விலை குறைப்பால் பெண்களின் நிதிச்சுமை  குறையும் என்று இப்போது நீட்டி முழக்குகிறார். அப்படியென்றால் கடந்த பத்தாண்டுகளில் விலையை உயர்த்தியதால் பெண்களின் நிதிச்சுமையை அதிகரித்ததற்கு தானே காரணம் என்பதை பிரதமர் ஏற்றுக் கொள்வாரா?

பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்த ஆண்டு ரக்சா பந்தன் விழாவின்போது சமையல் எரிவாயு விலையை ரூ.200 குறைப்பதாக அறிவித்தார். சகோதரிகளுக்கு எனது ரக்சா பந்தன் பரிசு என்றார்.  இப்போது ரூ.100 மட்டும் விலை குறைக்கப்பட்டி ருப்பதை தன்னுடைய தேர்தல் பரிசு என்று கூறாமல் மகளிர் தினப் பரிசு என்று மறைமுகமாக கூறியுள்ளார்.

இப்போது 818 ரூபாய்!
மோடி ஆட்சிக்கு வந்த 2014ஆம் ஆண்டு சமையல் எரிவாயு விலை ரூ.400 ஆக இருந்தது. அப்போது தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட மோடி 400 ரூபாய் என்று இருந்த கேஸ் விலையை ரூ.200ஆக குறைப்பேன் என்றார். ஆனால் ஆட்சிக்கு வந்த பிறகு தன்னுடைய வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாதது போலவே கேஸ் விலையையும் குறைக்கவில்லை. மாறாக, கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி ரூ.1200 வரை கேஸ் விலை உயர்ந்தது. அதில் ரக்சா பந்தனையொட்டி ரூ.200, மகளிர் தினத்தையொட்டி ரூ.100 என 300 ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. இப்போதும் கூட சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை ரூ.818.50 பைசாவுக்குத்தான் விற்கப்படும் நிலை உள்ளது. 

மர்மமான மானியம்
மோடி ஆட்சிக்கு வந்தவுடன் சமையல் எரிவாயுவுக்கு வழங்கப்பட்ட நேரடி மானியத்தை ரத்து செய்துவிட்டு, உங்கள் பணம் உங்கள் கையில் என்ற பெயரில் முழுத்தொகையையும் செலுத்தி சிலிண்டரைப் பெற வேண்டும். அதன்பிறகு மானியம் பயனாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மானியமும் குறைக்கப்பட்டது. இப்போது பயனாளரின் வங்கிக் கணக்கிற்கு மானியம் அனுப்பப்படுகிறதா என்பதே மர்மமாக உள்ளது. 

மொத்தப் பணமும் பறிப்பு
ஆனால் மறுபுறத்தில் சமையல் எரிவாயு மானியத்தை பெறுவதற்காக ஜன்தன் என்ற பெயரில் வங்கிக் கணக்குகள் துவக்கப்பட்டன. மானியம் வருகிறதோ இல்லையோ ஆனால் குறைந்தபட்ச இருப்பு இல்லை என்று அபராதம் விதிப்பதும் அந்த அபராதத்திற்கும் கூட ஜிஎஸ்டி வரி விதிப்பதும் கொடுமையிலும் கொடுமை. அண்மையில் தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகையை பெண்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிய போது குறைந்தபட்ச கையிருப்பு இல்லை என்று பல பெண்களின் வங்கிக் கணக்கிலிருந்து மொத்தப் பணமும் பறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதுதான் பிரதமர் மோடி இந்தியப் பெண்களுக்கு தரும் பரிசு. நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்தியாவின் முதல் குடிமகளான குடியரசுத் தலைவரையே அழைக்காதவர்தான் பிரதமர். ஆனால் பத்தாண்டுகள் மொத்தமாக வாரிச் சுருட்டிவிட்டு தேர்தல் வரும் ஆண்டில் மட்டும் ரூ.100 குறைப்பதை தன்னுடைய சாதனை என்று தம்பட்டம் அடிக்கிறார்  பிரதமர் மோடி.

இதனால் குடும்பப் பொருளாதாரம் குதூகலிக்கும் என்கிறார். கடந்த பத்தாண்டுகளாக வீட்டில் அடுப்பு மட்டும் எரியவில்லை; வயிறும் சேர்ந்து எரிந்ததை பெண்கள் மறந்துவிடுவார்கள் என்று அவர் கருதுகிறார் போலும்.