புதுதில்லி, டிச. 20- என்டிசி பஞ்சாலைகள் தொடர்ந்து இயக்கப்படாமல் உள்ளதால், இதனை நம்பிய 10 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. உடனடியாக தலையிட்டு என்டிசி பஞ்சாலைகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயலை, கோவை, ஈரோடு எம்பிக்கள்., மற்றும் தொழிற்சங்க தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர்.
இதுகுறித்து சிஐடியு கோவை மாவட்ட மில்தொழிலாளர் சங்க செயலாளர் சி.பத்மநாபன் கூறுகையில், மத்திய ஜவுளித் துறை அமைச்சகத்தின் கீழ் பொதுத் துறை நிறு வனமாக என்டிசி பஞ்சாலைகள் செயல்படு கின்றன. நாடு முழுவதும் 23 பஞ்சாலைகள் செயல்படுகின்றன. தென்னிந்தியாவில் 15 ஆலைகள் இயங்குகின்றன. தமிழகத்தில், பங்கஜா மில்ஸ், கம்போடியா மில்ஸ், கோய முத்தூர் ஸ்பின்னிங் அண்டு வீவிங் மில்ஸ், ஸ்ரீ ரங்கவிலாஸ் மில்ஸ், முருகன் மில்ஸ் என 5 ஆலைகள் கோவையிலும், சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் காளீஸ்வரா மில்ஸ், ராமநாதபுரம் மாவட்டம், கமுதக்குடியில் பயனீர் ஸ்பின்னர்ஸ் ஆகிய 2 மில்கள் என தமிழகத்தில் 7 பஞ்சாலைகள் இயங்கி வந்தன.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், ஊரடங்கு அறிவித்தபோது, மார்ச் 2020ம் ஆண்டு முதல் என்டிசி பஞ்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன. அப்போது மூடப்பட்ட இந்த ஆலைகள் தற்போது வரையிலும் திறக்கப்படவில்லை. நான்கு ஆண்டுகள் கடந்த பின்னும் இந்த ஆலைகள் திறக்கப்படாததால், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆலைகளை திறக்க வேண்டும் என்கிற ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து என்டிசி பஞ்சாலை தொழிலாளர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். மேலும், என்டிசி பஞ்சாலை தொழிற்சங்க தலை வர்கள் தொடர்ந்து ஒன்றிய அலுவலகங்களி லும், ஒன்றிய அமைச்சர்களிடமும் நேரில் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கை களை முன்வைத்து மேற்கு மாவட்ட எம்பிக்கள்., ஒன்றிணைந்து ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனிடையே, 11 ஆலைகளை இயக்கு வதாகவும், மற்ற ஆலைகள் இயக்குவதற்கு ஒரு குழு அமைக்க உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ்கோயல் உறுதியளித்திருந் தார். இந்த இரண்டு கோரிக்கைகளும் இதுநாள் வரையில் நிறைவேற்றப்படவில்லை. எனவே, மீண்டும் இக்கோரிக்கைகளை ஒன்றிய ஜவு ளித்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, பத்தாயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளோம் என்றார்.
முன்னதாக, இந்த கோரிக்கை மனுவை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் தலைமையில், மதிமுகவின் ஈரோடு நாடாளு மன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன், என்டிசி தொழிற்சங்க தலைவர்களில் ஒருவரான ஏஐ டியுசி எம்.ஆறுமுகம், ஐஎன்டியுசி பாலசுப்பிர மணியம் உள்ளிட்டோர் ஒன்றிய ஜவுளித்துறை அமைச்சர் பியூஸ் கோயலிடம் அளித்தனர்.