india

img

ரயில்கள், ரயில் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்க்க குழு

புதுதில்லி,அக்.10- 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களின் செயல்பாடுகளை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கான உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழுவை அமைக்கும்  பணியில் மத்திய பாஜக அரசு  தீவிரமாக ஈடுபட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை சரிசெய்ய முடியாமல் மோடி தலைமை யிலான மத்திய பாஜக அரசு திணறி வருகிறது. உருப்படியான நடவடிக்கை எடுக்கா மல் பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.இதனை தொழிற்சங்கங்களும் அரசியல் கட்சியினரும் கண்டித்து வருகின்றனர்.  பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தில்லி - லக்னோ வழித்தடத்தில் இயங்கும் தேஜாஸ் அதிவேக ரயில் தனியார் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டது. தற்போது மேலும் 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்பந்த முறையில் ஒப்படைக்க உள்ளது.  இந்த பணிகளை மேற்கொள்வதற்காக உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது தொடர்பாக நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரி யான அமிதாப் காண்ட், இந்திய ரயில்வே வாரிய தலைவரான வி.கே. யாதவிற்கு கடிதம் அனுப்பியிருந்தார்.  

இந்த சிறப்பு குழுவில் யாதவ் மற்றும் அமிதாப் தவிர பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை  செயலாளர் ஆகியோரும் இடம்பெறுவர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து நிதி ஆயோக் குழும தலைமை அதிகாரி அமிதாப் காண்ட் கூறுகை யில்,  ஆறு விமான நிலையங்களை தனியார் மயமாக்கும் பணிகளை மேற்கொள்ள சிறப்பு குழு அமைப்பது போன்றே இந்த விஷ யத்திலும் காலவரையறை முறையில் பணி களை மேற்கொள்ள குழு அமைக்கப்படும். முதல் கட்டமாக 150 பயணிகள் ரயில்களை இயக்க தனியார் ரயில் பணியாளர்களை அமர்த்த ரயில்வே முடிவு செய்துள்ளது.ரயில்வே பொறியியல் வாரியம் மற்றும் ரயில்வே போக்குவரத்து வாரியம் உறுப்பினர்களும் இந்த குழுவில் இடம்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.

;