அசானி புயல் எதிரொலியால் சென்னை உட்பட 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16 கி. மீ வேகத்தில் நகரும் இந்த புயல், விசாகப்பட்டினத்திலிருந்து 970 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை, தூத்துக்குடி, நாகை, புதுச்சேரி, கடலூர், காரைக்கால், பாம்பன், எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய 9 துறைமுகங்களில் நேற்று 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அசானி புயல் உருவானதால், தற்போது இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.