india

காலத்திற்குப் பொருந்தாத தேசத்துரோகக் குற்றப்பிரிவை ரத்துசெய்க - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

புதுதில்லி, ஜூன் 3- காலத்திற்குப் பொருந்தாத தேசத் துரோகக் குற்றப்பிரிவை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

இந்தியத் தண்டனைச் சட்டத்தில் உள்ள தேசத்துரோகக் குற்றப்பிரிவு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்வறிக்கைகளை மறுதலித்தும், அவை முழுமையாக இல்லை என்றும் கூறி மேற்படி குற்றப்பிரிவை மேலும் முறுக்கி சட்ட ஆணையம் வெளியிட்டுள்ள பரிந்துரைகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு பரிசீலனை செய்தது.

உச்சநீதிமன்றம், காலத்திற்குப் பொருந்தாத இந்தச் சட்டப்பிரிவை சட்டப் புத்தகங்களிலிருந்தே நீக்க வேண்டும் என்றும் அதற்குத் தேவையான நாடாளுமன்ற நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் கோரி அதுவரையிலும் இந்தத் தேசத் துரோகக் குற்றப்பிரிவின் அமலாக்கத்தை நிறுத்தியும் வைத்திருந்தது.

ஆயினும், சட்ட ஆணையம், இந்த தேசத் துரோகக் குற்றப்பிரிவுக்குக் குறைந்தபட்ச தண்டனை முன்பு மூன்றாண்டுகள் என்றிருந்ததை இப்போது ஏழு ஆண்டுகள் என்று விரிவுபடுத்தியிருப்பதன் மூலம் இச்சட்டப்பிரிவின் ஷரத்துக்களை மேலும் வலுப்படுத்தி இருப்பதுபோல் தோன்றுகிறது.

எதிர்க்கட்சித் தலைவர்களைக் குறிவைத்து அமலாக்கத் துறையினரும், மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகமும் (சிபிஐ-யும்) மிகவும் வெட்கக்கேடான முறையில் ஏவப்பட்டுவரும் பின்னணியில், தேசத் துரோகக் குற்றப்பிரிவு குறித்து இதுபோன்ற பரிந்துரைகள் அளித்திருப்பது தீய அறிகுறிகளாகும்.

இந்தக் காலத்திற்குப் பொருந்தாத தேசத் துரோகக் குற்றப்பிரிவை ரத்து செய்யப்பட வேண்டும் என்றே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கோருகிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)

;