india

img

மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுதில்லி, ஆக. 7-  புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப் பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் மாதம் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 26-ஆம் தேதி யுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.  இந்நிலையில், கூட்டத் தொடரை ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை  நீட்டிப்பதாக மத்திய அரசு அறிவித்தது.  ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு  அந்தஸ்து அளிக்கும் அரசியலமைப்புச்  சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்கு வதற்கான தீர்மானம், ஜம்மு-காஷ்மீரை இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா-2019, சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத் திருத்த (யுஏபிஏ) மசோதா, முத்தலாக் தடை மசோதா, திருநங்கைகள் உரிமைகள் பாதுகாப்பு மசோதா-2019, தேசிய மருத்துவ ஆணைய மசோதா, மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதா, உச்சநீதிமன்ற நீதிபதி பணி யிடங்களின் எண்ணிக்கையை 30-லிருந்து, 33-ஆக அதிகரிக்க வகை செய்யும் மசோதா, வாடகைத் தாய்  முறையை ஒழுங்குபடுத்தும் மசோதா,  தொழிலாளர் சட்டத்திருத்த மசோதா,  ஜாலியன் வாலாபாக் தேசிய நினைவுச் சின்னம் மசோதா, ஊதியங்கள் சட்ட  மசோதா, அணை பாதுகாப்பு மசோதா,  ஆர்டிஐ சட்டத்திருத்த மசோதா, போக்ஸோ சட்டத்திருத்த மசோதா உள்ளிட்ட 32 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன.  

இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவில் 35 அமர்வுகளில் 32 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டுள்ளதாக மாநிலங் களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு ‘பெருமிதம்’ தெரிவித்தார்.  பின்னர் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மறைவுக்கு மாநிலங்களவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அனைவரும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர். சுஷ்மா சுவராஜ் மறைவால் சிறந்த நாடாளுமன்ற வாதியையும், மக்களின் உண்மையான குரலையும் இந்த தேசம் இழந்துள்ளது என மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசினார். இதையடுத்து மாநிலங்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவ தாக அறிவித்தார்.

;