india

img

காஷ்மீர் மக்கள் மீதான மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் கைது, 144 தடை உத்தரவு மற்றும் தொலைத்தொடர்பு துண்டிப்பு போன்ற மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதிபதிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். 

கடந்த 5-ஆம் தேதி நாடாளுமன்றத்தில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 மற்றும் 35-ஏ ஆகியவற்றை நீக்கப்பட்டு, காஷ்மீரை 2 யூனியன் பிரதேசமாக மாற்றுவதற்குமான தீர்மானம், காஷ்மீர் மறுவரையறை சட்ட மசோதா மற்றும் காஷ்மீரில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா ஆகியவை தாக்கல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, நாடாளுமன்ற இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து 370-வது பிரிவை ரத்து செய்ததற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். நேற்று காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370வது சட்டப்பிரிவு நீக்கம் தொடர்பான அரசாணையை மத்திய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

மோடி அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீரில் எதிர்ப்பு கிளம்பலாம் என்ற காரணத்துக்காக 100-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஜம்மு காஷ்மீர் பகுதி முழுவதும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ,இன்டர்நெட் முடக்கம், செல்போன் இணைப்பு துண்டிப்பு, கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை என பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தெஹ்சீன் பூனவல்லா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரியிருந்தார்.

ஆனால், இந்த மனுவை அவசர வழக்கான விசாரிக்க என்.வி.ரமணா அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், தலைமை நீதிபதி பட்டியலிடுவதை பொருத்து வழக்கு விசாரணைக்கு வரும் என்று நீதிபதி விளக்கம் அளித்துள்ளார். இதையடுத்து, காஷ்மீர் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. 

;