india

img

கடந்த 2018-ல் சாலை விபத்துகளில் சிக்கி 1.51 லட்சம் பேர் பலி - உ.பி முதலிடம்

இந்தியாவில், கடந்த 2018-ம் ஆண்டு, சாலை விபத்துகளில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1.51 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த பலி எண்ணிக்கையில் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

கடந்த 2018ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த சாலை விபத்துகள் குறித்த புள்ளி விவரங்களை சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், சாலை விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை கடந்த 2018ம் ஆண்டு 1.51 லட்சமாக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையை கடந்த 2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 3,500 உயிரிழப்புகள் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்று தெரிகிறது. அதாவது, 2.4 சதவீதம் அதிகமாகும். 

கடந்த ஆண்டில் மட்டும் 4,67,044 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், ஒரு நாளுக்கு சுமார் 1,280 விபத்துகள் நடைபெறுவதாகவும், அதில் சராசரியாக 415 பேர் உயிரிழப்பதாகவும், ஒரு மணி நேரத்துக்கு 53 விபத்துகள் நடைபெறுவதாகவும், அதில் சராசரியாக 17 பேர் உயிரிழப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அதேபோல், கடந்த 2018-ல் அதிகபட்சமாக 35.2 சதவீதம் பேர் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்துகளில் அதிவேகத்தில் சென்றதில் 64.4 சதவீதம் பேரும், தவறான திசையில் வாகனத்தை ஓட்டியவர்கள் 5.8 சதவீதம் பேரும், ஹெல்மெட் அணியாததால் 29 சதவீதம் பேரும், கார்களில் சீட் பெல்ட் அணியாததால் 16 சதவீதம் பேரும், தொலைபேசியை உபயோகிப்பதால் 2.4 சதவீதம் பேரும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதால் 2.8 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.

இது போன்று விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கையில் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது. அடுத்து மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திலும், தமிழகம் மூன்றாமிடத்திலும் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
 

;