india

img

மக்களவையில் நிறைவேற்றப்படாத மோடி அரசின் உத்தரவாதங்கள் 300 சதவீதம் அதிகரிப்பு

மக்களவையில் நிறைவேற்றப்படாத மோடி அரசின் உத்தரவாதங்களின் எண்ணிக்கை, முந்தைய காங்கிரஸ் அரசை விட 300 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்தியா ஸ்பெண்ட் பகுப்பாய்வில் தெரியவந்துள்ளது.

அரசு வாக்குறுதிகள் என்பது, மக்களவை மற்றும் மாநிலங்களவை ஆகிய இரு அவைகளிலும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவாதங்கள் ஆகும். ஒரு உத்தரவாதம் வழங்கப்பட்டால், அதை 3 மாதங்களுக்குள் செயல்படுத்தப்பட வேண்டும் என விதிகள் கூறுகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற தரவுகளை பற்றிய பகுப்பாய்வு ஒன்றை, இந்தியா ஸ்பெண்ட் மேற்கொண்டுள்ளது. அதன்படி, கடந்த 15வது மற்றும் 16 வது மக்களவைக்கு இடையில் அவையில் வழங்கப்பட்ட அரசு உத்தரவாத வாக்குறுதிகளின் எண்ணிக்கை 300% அதிகரித்துள்ளது. கடந்த 2014-2019 காலத்தில், மோடி தலைமையிலான பாஜக அரசு மக்களவையில் அளித்த வாக்குறுதிகளில், 1,540 (28.6%) வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இது கடந்த 2009-2014 காலத்தில், காங்கிரஸ் அரசால் நிறைவேற்றப்படாத 385 (6%) வாக்குறுதிகளுடன் ஒப்பிடுகையில் மிக அதிகம்.

கடந்த 2019 பொதுத்தேர்தல் நடந்த ஆண்டில், கடைசி மூன்று மக்களவை அமர்வுகளில், பாஜக அரசு வழங்கிய 582 உத்தரவாதங்களில் 443 (76%) நிலுவையில் உள்ளன. அதே போல், 2014-2018 முதல், உத்தரவாத வாக்குறுதிகளை கைவிட வேண்டும் என்ற அனைத்து கோரிக்கைகளிலும், 56.7 சதவீதத்தை  நாடாளுமன்றக் குழு நிராகரித்தது. 2018 ஆம் ஆண்டில், நான்கில் மூன்று பங்கு (76%) கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டன. இது ஐந்து ஆண்டுகளில் மிக அதிகபட்ச நிராகரிப்புகள் ஆகும். 

உதாரணமாக, மேகாலயாவின் கிழக்கு ஜெயந்தியா மலைப்பகுதியில் சட்டவிரோத சுரங்கத்தில் சிக்கி பலியான 15 தொழிலாளர்களின்  மீட்கப்பட்ட சடலங்கள் குறித்து கடந்த பிப்ரவரி 2019-ல் கேட்டபோது, மாநில அரசிடம் இருந்து தகவல் பெறப்படுகிறதாக பாஜக அரசு கூறியது. ஆனால் இது குறித்த தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை. அதேபோல், தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட லாகப் மரணங்கள் குறித்தும், அவற்றை தடுக்க ஏதேனும் வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளதா எனவும், 2016 நவம்பரில் அரசிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, தகவல் சேகரிக்கப்பட்டு வருகிறதாக தெரிவித்தது. ஆனால் இதுவும் நிலுவையில் உள்ளது.

மக்களவையில் கடந்த பிப்ரவரி 2019-ல், பணமதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்ட தாக்கம் குறித்தும், கறுப்புப்பணத்தின் மதிப்பு குறித்தும் நிதி அமைச்சகத்திடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை அல்லது ஜிஎஸ்டி பற்றி எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை, ஆனால் தகவல்களைச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது. அதேபோல், கருப்புப்பண மதிப்பு குறித்த தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக கூறியது. ஆனால், இதுவும் நிலுவையில் உள்ளது. 

இந்த வரிசையில், நாடாளுமன்றத்தில் மோடி அரசு அளித்த உத்தரவாதம் தொடர்பாக எழுப்படும் பல கேள்விகளுக்கு, பெரும்பாலும் “விஷயம் பரிசீலனையில் உள்ளது”, “நான் அதை கவனிக்கிறேன்”, “நான் அதைக் கருத்தில் கொள்வேன்”, “தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவையில் சமர்ப்பிக்கப்படும்” மற்றும் “மாண்புமிகு உறுப்பினருக்கு வழங்கப்படும்” போன்ற பதில்களே தந்து அமைச்சர்கள் சமாளித்து வருகின்றனர்.
 

;