உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளை நியமிக்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு மீது உச்சநீதிமன்றம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நீதிபதிகள் நியமன விவகாரத்தில் கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்பட்ட பலர் ஒன்றிய அரசின் அமைதி மற்றும் பாகுபாடு காரணமாக நீதிபதிகளாக நியமிக்கப்படாமல் இருப்பதாகவும், இதனால் இளம் நீதிபதிகளை நீதித்துறை இழக்கிறது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
நீதிபதிகள் நியமனம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் சுதான்ஷூ துலியா அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தாதர் மற்றும் வழக்கறிஞர் அமித்பாய் ஆகியோர், கொலீஜியம் பரிந்துரைத்த பெயர்களில் இருந்து பல பெயர்களை ஒன்றிய அரசு பிரிப்பதாகவும், இது சங்கடத்தை ஏற்படுத்துகிறது என்றும் வாதிட்டனர். மற்றொரு வழக்கறிஞரான பிரசாந்த் பூஷண், கொலீஜியம் பரிந்துரைக்கும் நபர்களை நியமிக்க மறுப்பதை நீதிமன்ற அவமதிப்பாகக் கருத வேண்டும் என்றும், இது இப்படியே தொடர முடியாது என்றும் கூறினார்.
"உயர்நீதிமன்ற கொலீஜியம் உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களுக்காக 70 பெயர்களை பரிந்துரைத்தது. அந்தப் பரிந்துரைகளின் மீது நிர்வாக ரீதியிலான சில அடிப்படை நடவடிக்கைகளை எடுத்து அவற்றை அரசு, உச்ச நீதிமன்ற கொலீஜியத்துக்கு அனுப்ப வேண்டும். ஆனால், அதைக்கூட அரசு செய்யவில்லை. அவர்கள் பற்றிய அரசின் பார்வை என்ன என்று தெரிந்தாலாவது அடுத்து செய்ய வேண்டியது என்ன என்பதை நாங்கள் முடிவு செய்ய முடியும். ஆனால், ஒன்றிய அரசு அமைதியாக இருக்கிறது. கால வரையறை என்று ஒன்று இருக்கிறது. தோராயமாக 4 அல்லது 5 மாதங்களை இதற்காக அரசு எடுத்துக்கொள்ளலாம்.
நீதிபதிகளை பணியிட மாற்றுவது தொடர்பாக 26 பரிந்துரைகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதோடு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு புதிதாக 9 பேர் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். ஆனால், அந்தப் பெயர்களை அரசு ஏற்கவும் இல்லை; திருப்பி அனுப்பவும் இல்லை. கொலீஜியத்தால் பரிந்துரைக்கப்படும் பெயர்களை அரசு ஏற்க காலவரையறை இருக்கும்படியாக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். மிகவும் நெருக்கடியான ஓர் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயரும் இன்னும் கிடப்பிலேயே இருக்கிறது.
எனவே, இந்த விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இனி, இந்த வழக்கில் 10 நாட்களுக்கு ஒருமுறை பரிந்துரைத்த பெயர்களின் நிலை குறித்து நாங்கள் தொடர்ந்து அரசுக்கு கேள்வி எழுப்புவோம்" என்று இந்த வழக்கு விசாரணையின்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணியிடம் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக விசாரித்து நீதிமன்றத்துக்கு பதில் அளிப்பதாகவும், ஒரு வார கால அவகாசம் அளிக்குமாறும் வெங்கட்ரமணி தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கு அக்டோபர் 9-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அப்போது, ஒன்றிய அரசின் பதிலை தெரிவிக்குமாறு நீதிபதிகள் அட்டர்னி ஜெனரலிடம் தெரிவித்தனர்.