கச்சா எண்ணெய் பரிவர்த்தனையில் இந்திய ரூபாயை பயன்படுத்துவதற்காக முறை யான ஒப்பந்தம் எதையும் கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனமும், இந்திய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் ஏற்படுத்தவில்லை என நாடாளுமன்றத்தில் எண்ணெய் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சர்வதேச வணிகத்தில் அமெரிக்காவின் டாலர் பயன்பாட்டை குறைத்து சொந்த நாணய பயன்பாட்டை பல நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. இந்நிலையில் இந்தியாவும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு ரூபாயைப் பயன்படுத்தி வருகிறது.
உலகளவில் அதிகளவு எரிசக்தி நுகர்வு செய்யும் மூன்றாவது நாடாக உள்ள இந்தியா அதிகளவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. இந்திய நாணயத்தை சர்வதேசமயமாக்கும் முயற்சியில், ஜூலை 11, 2022 அன்று, இந்திய ரிசர்வ் வங்கி, கச்சா எண்ணெய் இறக்குமதி ஏற்றுமதி செய்பவர்கள் இந்திய ரூபாயில் ஏற்றுமதி செய்ய அனுமதித்தது.
2022-23 (ஏப்ரல் 2022 முதல் மார்ச் 2023 வரை) நிதியாண்டில், 23.27 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா 15,750 கோடி அமெரிக்க டாலர்களை செலவிட்டுள்ளது. இராக், சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியாளர்களாக இருக்கின்றன. இதில், 14.12 கோடி டன்கள் அளவிற்கு கச்சா எண்ணெய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாகும்.அதாவது 58 சதவீதம்.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் நவம்பர் வரை 11,340 கோடி அமெரிக்க டாலர்களுக்கு 15.26 கோடி டன் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
இந்தியாவின் நுகர்வு ஒரு நாளைக்கு சுமார் 55-56 லட்சம் பீப்பாய்களாக உள்ளது. இதில் சுமார் 46 லட்சம் பீப்பாய்களை இறக்குமதி செய்கிறது, இது உலகின் ஒட்டுமொத்த எண்ணெய் வர்த்தகத்தில் 10 சதவீதமாகும்”.
எண்ணெய் வர்த்தகத்தில் இந்திய நாணயத்தை பயன்படுத்துவதால் உருவாகும் அதிக பரிவர்த்தனைச் செலவுகள் மற்றும் ரூபாய் வர்த்தகத்தில் போதுமான லாபத்தை பெற முடியாத சூழல் உருவாவதால் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் நிறுவனங்கள் ரூபாய் பரிவர்த்தனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன என்றும் இந்திய நாணயத்தை பெற்றுக்கொள்ள முன் வருவதில்லை என்றும் எனவே அமெரிக்க டாலரிலேயே பரிவர்த்தனை செய்ய வேண்டியுள்ளது என்றும் எண்ணெய் அமைச்சகம் நாடாளுமன்றத்தில் பொறுப்பற்ற முறையில் பதில் தெரிவித்துள்ளது. (சில நாடுகளுடன் பிற வர்த்தக உறவில் இந்த முறைக்கு சில வெற்றிகள் கிடைத்தாலும், இந்தியாவிற்கு எண்ணெய் ஏற்றுமதி செய்பவர்கள் ரூபாயை தற்போது தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்)
பாஜக தலைமையிலான ஆட்சியில் 2022-23 ஆம் நிதியாண்டில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களே கச்சா எண்ணெய் இறக்குமதியை முன்னெடுக்கவில்லை. அதற்கு பதிலாக அமெரிக்க டாலரிலேயே இந்த பரிவர்த்தனையை மேற்கொண்டன.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின்படி இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் கூடுதல் பரிவர்த்தனை செலவுகளில் ஒரு பகுதியை இந்திய நிறுவனங்களை ஏற்கச் சொல்வதாக காரணம் கூறியுள்ளது.
மேலும் தற்போது வரை அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்திய நாணயத்தில் கொள்முதல் செய்வதற்கு எந்தவொரு கச்சா எண்ணெய் ஏற்றுமதியாளர்களுடனும் ஒப்பந்தம் செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.