india

img

தங்கத்தின் விலை தண்ணீரின் விலையைவிட மலிவாகிப் போனது - மாநிலங்களவையில் டி.கே. ரெங்கராஜன் வேதனை

தங்கத்தின் விலை தண்ணீரின் விலையை விட மலிவாகிப்போனது என்று வேடிக்கையுடன் அதேசமயத்தில் வேதனையுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் டி.கே. ரெங்கராஜன் கூறினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் இன்று (புதன்கிழமை) குடிதண்ணீர் நெருக்கடி குறித்து குறைந்தகால விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும்போதே டி.கே.ரெங்கராஜன் இவ்வாறு கூறினார். மேலும் அவர் இது குறித்துக் கூறியதாவது:

நாட்டில் குடிதண்ணீர் பற்றாக்குறைக்கு மிகவும் ஆளாகியுள்ள இந்தியப் பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது. சென்னையில், தங்கத்தின் விலை தண்ணீரின் விலையைவிட மலிவாகிப் போனது. பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் ஐ.டி. ஊழியர்கள் தண்ணீர் நெருக்கடி தீரும் வரையிலும் தங்கள் இல்லங்களிலிருந்தே பணியாற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். உணவுவிடுதிகள் நீரின்மை காரணமாக மூடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்குக் காரணம் என்னவெனில் நகரைச் சுற்றி ஓடும் ஆறுகள் அனைத்தும் சாக்கடைகளாக மாறிவிட்டன.

சென்னையில் நிலவும் குடிதண்ணீர்ப் பிரச்சனையை சரி செய்திட மத்திய அரசு உடனடியாகத் தலையிட வேண்டும். மற்ற மாநிலங்களில் உள்ள தண்ணீர் பிரச்சனையைப் போக்குவதும் மத்திய அரசின் பொறுப்புதான். எனினும் சென்னை ஒரு பெருநகரமாக இருப்பதால் (காஸ்மாபாலிடன் சிட்டியாக இருப்பதால்) சென்னையைக் காப்பாற்ற முன்வர வேண்டும்.

இவ்வாறு டி.கே.ரெங்கராஜன் கூறினார்

து. ராஜா

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் து. ராஜா பேசியதாவது:

மாநிலங்களுக்கிடையே நிலவும் நதிநீர் தாவாக்களை சரி செய்திட மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும். தமிழ்நாட்டில் ஓடும் ஆறுகள் அனைத்துமே மற்ற மாநிலங்களில் உற்பத்தியாகி தமிழகத்திற்கு வருபவைகளாகும். எனவே தண்ணீர் பிரச்சனையாக மாறியுள்ள சூழலில் மேற்படி மாநிலங்கள் போதிய அளவிற்குத் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்குத் தருவதற்குத் தயக்கம் காட்டுகின்றன. எனவே இப்பிரச்சனையைத் தீர்த்திட நாடு தழுவிய அளவில் ஒரு கருத்தொற்றுமை உருவாக வேண்டும். நீரைத் தேக்கிப் பாதுகாக்கும் அமைப்புகளை முன்னுரிமை அடிப்படையில் உருவாக்கிட வேண்டும். நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்திடும் கார்ப்பரேட்டுகள் மற்றும் நிலக் கொள்ளைக் கும்பல்கள் மீது உறுதியுடன் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

இவ்வாறு து. ராஜா கேட்டுக் கொண்டார்.

;