india

img

ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியாரிடம் ஒப்படைத்திட அரசாங்கம் மேற்கொண்டுவரும் இழிநடவடிக்கைகள்

 

‘ஏர் இந்தியா’ நிறுவனத்தைப் பல்வேறு பகுதிகளாகப் பிரித்து தனியாரிடம் தாரை வார்த்திட அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் படுதோல்வியடைந்ததை அடுத்து, ஒட்டுமொத்தமாக அடிமாட்டு விலைக்கு தனிப்பட்ட ஒரு நபரிடம் தாரை வார்ப்பதற்கு, அரசாங்கம் மேற்கொண்டுவரும் இழி நடவடிக்கைகளுக்கு, சிஐடியு கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுப்பட்டிருப்பதாவது:

மத்திய அரசு, “எவ்வளவு விரைவாகமுடியுமோ அவ்வளவு விரைவாக” ஒரு குறிப்பிட்ட தனிநபரிடம் ஏர் இந்தியா நிறுவனத்தின் அனைத்துப் பங்குகளையும் தாரை வார்த்திட நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இவ்வாறு விற்பது என்பது நாட்டின் பொதுச் சொத்துக்கு மிகப்பெரிய அளவில் பேரிழப்பினை ஏற்படுத்திடும் என்பது தெளிவாகும்.

முந்தைய மோடி-1 ஆட்சிக்காலத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளைத் தனியாரிடம் தாரை வார்த்திட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவை படுதோல்வி அடைந்ததன் காரணமாக, இப்போது முழுமையாக ஒரு குறிப்பிட்ட தனிநபரிடம் விற்றுவிட அரசாங்கம் துடித்துக் கொண்டிருக்கிறது. இதற்காகப் பல்வேறு வடிவங்களில் மிகவும் மோசமான உத்திகளையும் கையாளத் தொடங்கி இருக்கிறது. தனிநபர் ஒருவரின் மிரட்டலுக்கு அடிபணிந்தே அரசாங்கம் இத்தகு இழிவான உத்திகளில் இறங்கியிருக்கிறது என்பதில் சந்தேகம் ஏதுமில்லை.

ஏர் இந்தியா நிறுவனம்  கடன் வலைக்குள் சிக்கியிருக்கிற ஒரு நிறுவனமாகும். இவ்வாறு இந்நிறுவனம் கடன் வலைக்குள் சிக்கியிருப்பதற்கு, ஆட்சியிலிருந்த வர்கள்,  பல விமான நிறுவனங்களை எவ்விதமான முன்தயாரிப்புமின்றி ஒன்றிணைத்ததும், ஆதாயம் அளித்திடுமா என்று ஆய்வு எதுவும் மேற்கொண்டிடாது ஏராளமான விமானங்களை  அந்நிய நிறுவனங்களிடமிருந்து கடனுக்கு விலைக்கு வாங்கியதும் முக்கிய காரணங்களாகும்.

இவற்றின் விளைவாகத்தான் ஏர் இந்தியா நிறுவனம் அதீத அளவில் கடன்வலைக்குள் சிக்கிக் கொண்டது. எனினும்கூட, ஏர் இந்தியா நிறுவனம் 2018-19ஆம் ஆண்டு வரையிலும் லாபம் ஈட்டும் நிறுவனமாகவே இருந்து வந்திருக்கிறது. தாங்கள் கடன் பெற்ற எந்த வங்கிகளுக்கும், தனியார் நிறுவனங்கள் பட்டை நாமம் சாத்துவதுபோல, ஏர் இந்தியா நிறுவனம் பணத்தைத் திருப்பிச் செலுத்தாது இருந்ததில்லை. இவ்வாறு வங்கிகளுக்குப் பணத்தைச் செலுத்தாது பட்டை நாமம் போட்ட தனியார் நிறுவனங்கள்தான் இப்போது முழுமையாக ஏர் இந்தியா நிறுவனத்தையும் கபளீகரம் செய்ய முன்வந்துள்ளன.

‘ஏர் இந்தியா நிறுவன’த்தைத் தனியாரிடம் “எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக”ஒப்படைப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்டிருக்கிற இழி உத்திகள் என்ன தெரியுமா? அநேகமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் கடன் தொகையில் பாதி அளவை (சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாயை) அரசாங்கமே எடுத்துக் கொண்டு ஏர் இந்தியா நிறுவனத்தின் கணக்குப் புத்தகங்களிலிருந்து அது திருப்பிச் செலுத்த வேண்டிய கடன் தொகையிலிருந்து கழித்துவிடுகிறது. அதேபோன்று அது எரிபொருள் நிரப்புவதில் பாக்கி வைத்திருக்கிற தொகையையும் அரசாங்கமே நிகரமதிப்பு ஆதரவுடன் (equity support) கட்டிவிடவும் திட்டமிட்டிருக்கிறது. இவை அனைத்தும் இந்நிறுவனத்தை தனியாரிடம்“எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக” விற்பதற்கான சூழ்ச்சியேயாகும்.

இதே வசதிகளை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு அரசாங்கம் வழங்கினால், ஏர் இந்தியா நிறுவனமே“எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக” கடன்வலையிலிருந்து மீண்டு, அரசாங்கத்திற்குக் கணிசமான அளவிற்கு லாபத்தை ஈட்டித்தரும். ஆனால் பாஜக அரசாங்கத்தின் நோக்கம் அதுவல்ல. நாட்டின் சொத்துக்களை எந்த அளவுக்கு விரைவாகத் தனியாரிடம் விற்க முடியுமோ அந்த அளவிற்கு விரைவாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டுத் தனியார்களிடம்  விற்க வேண்டும் என்பதே அதன் நோக்கமாகும்.

பாஜக அரசாங்கத்தின் இத்தகைய நாசகர முடிவுகளை சிஐடியு கண்டிக்கிறது. இத்தகைய படுபிற்போக்குத்தனமான முடிவுகளை மேற்கொள்வதிலிருந்து தன்னைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிஐடியு கோருகிறது.

மத்திய அரசின் இந்த நாசகர முடிவிற்கு எதிராக அனைத்துத் தொழிலாளர்களும் சங்க வித்தியாசமின்றி போராட முன்வர வேண்டும் என்றும் சிஐடியு அனைத்துத் தொழிலாளர்களையும் அறைகூவி அழைக்கிறது.

இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கோரியுள்ளார்.

(ந.நி.)

 

 

;