india

img

சோனம் வாங்சுக் கைது - சிபிஎம் கண்டனம்

லடாக்கை சேர்ந்த காலநிலை ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சிபிஎம் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

“லடாக்கிற்கு மாநில அந்தஸ்து கோரியும், அதை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கக் கோரியும் போராட்டத்தில் முன்னணியில் இருந்த சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. கடுமையான தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருப்பது, ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளது. லடாக் மக்களின் நேர்மையான விருப்பங்களை பாஜக அரசு அவமதித்துள்ளது.

லடாக்கு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, அங்குள்ள ஜனநாயக இயக்கத்தை அடக்க அரசாங்கம் அடக்குமுறைகளைத் தேர்ந்தெடுத்துள்ளது. இது, லடாக்கு மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்திரங்களுக்கு நேரிடையான கடுமையான தாக்குதலாகும். இப்படிப்பட்ட நடவடிக்கைகள், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கு மக்களின் அந்நியப்படுத்தலை மேலும் ஆழப்படுத்தும்.

சோனம் வாங்சுக்கை உடனடியாக விடுவிக்கவும், மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் நிபந்தனையின்றி திரும்பப் பெறவும், ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை முழுமையாகப் பாதுகாக்கவும், இயக்கத்தின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக ஏற்றுக்கொள்ளவும், எல்லாவற்றிற்கும் மேலாக லடாக்கை ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்கவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.