india

img

வருமானவரி ரெய்டு நடத்தி எம்.பி.க்களை வளைத்த பாஜக!

புதுதில்லி:
தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேர் திடீரென பாஜக-வுக்குத் தாவியுள்ள நிலையில், வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத் துறையை ஏவி, பாஜக இவர்களை வளைத்துப் போட்டது தெரிய வந்துள்ளது.பாஜகவுக்கு தாவிய தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் 4 பேரும் தொழி லதிபர்கள் ஆவர். இவர்களில் 2 பேர் சிபிஐ, அமலாக்கப் பிரிவு, வருமான வரித் துறை சோதனைகளில் சிக்கியவர்கள். 

பாஜக எம்.பி.யும் செய்தித் தொடர்பாளருமான ஜி.வி.எல். நர சிம்ம ராவ் கடந்த நவம்பர் மாதம், மாநிலங்களவையின் நடவடிக்கை கமிட்டிக்கு கடிதம் ஒன்றை  எழுதியிருந்தார்.அதில், தெலுங்கு தேசம் எம்.பி.க்களான சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சவுத்ரி இருவரும் ‘ஆந்திராவின் விஜய் மல்லையாக்கள்..’ என்றும், ‘இவர்கள் இருவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றும் வலியுறுத்தி இருந்தார். 
அந்த சி.எம். ரமேஷையும், ஒய்.எஸ். சவுத்ரியையும்தான் பாஜக தற்போது தங்கள் கட்சியில் சேர்ந்து, ‘புனிதவான்களாக’ மாற்றியுள்ளது.இவர்களில் சி.எம். ரமேஷ், ஒய்.எஸ். சவுத்ரி ஆகியோர் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கப்பிரிவு ரெய்டு மூலம், விசாரணையில் சிக்கியிருப்பவர்கள். 

சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானி இடையேயான மோதலிலும் சி.எம்.ரமேஷ் பெயர் அடிபட்டது. வங்கிக் கடன் மோசடிகள் தொடர்பாக ஒய்.எஸ். சவுத்ரி 
ஏற்கெனவே சிபிஐ, அமலாக்கப் பிரிவு விசாரணை வளையத்துக்குள் இருப்பவர் ஆவார். இந்நிலை யிலேயே அவர்களை வழக்குகளைக் காட்டி அச்சுறுத்தி பாஜக தன்பக்கம்இழுந்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.இவ்வாறு தெலுங்குதேசம் கட்சி எம்.பி.க்களை வளைத்ததன் மூலம், அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவையும் பாஜக பழிவாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில், கடந்த ஆட்சியின்போது, மோடிக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்த கட்சி தெலுங்குதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
 

;