india

img

வருமான வரி படிவம் 16-ல் புதிய மாற்றங்கள்!

மத்திய நேரடி வரிகள் வாரியம் தனிநபர்கள் வருமான வரி தாக்கல் செய்ய பயன்படுத்தும் படிவம் 16-ல் (Form 16) புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது. 

மாதாந்திர ஊதியம் பெறும் தனிநபர்கள் வருமான வரி செலுத்த பயன்படுவது படிவம் 16 (Form 16). இதை வருமான வரி தாக்கல் செய்பவர் பணிபுரியும் நிறுவனமே வழங்கும். இதில் பணியாளரின் ஊதியம் மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட வரி ஆகியவை பற்றிய அனைத்து விபரங்களும் இடம்பெற்றிருக்கும். 

இந்தப் படிவத்தில் இருக்க வேண்டியவை குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் சில புதிய விதிகளை அறிவித்துள்ளது. இவை வரும் மே 12-ஆம் தேதி முதல் அமலாகின்றன. இந்த நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வர்கள் புதுப்பிக்கப்பட்ட படிவத்தையே பயன்படுத்த வேண்டும்.

இந்த புதுப்பிக்கப்பட்ட படிவம் 16-ல், வருமானம் மற்றும் வீடு ஆகியவை பற்றிய தகவல்கள் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் 5 மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. 

வீட்டு வாடகை படி (HRA), விடுப்பு மற்றும் பயணப் படி (LTA) போன்ற வரி விலக்குள்ள படிகள் (allowances) பற்றிய விரிவான தகவல் இருக்க வேண்டும். 80சி மற்றும் 80யு ஆகிய பிரிவுகளின் கீழ் பெறும் வரி விலக்குகள், இதற்கு முன் வேலை பார்த்த நிறுவனத்தில் வழங்கப்பட்ட சம்பளம் தொகை, 2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி நிலையான கழித்தல் (Standard deduction) மூலம் கிடைக்கும் வரிச் சலுகை, மாதச் சம்பளம் தவிர வேறு ஏதேனும் வருமானம் பெற்றிருந்தால் அதைப் பற்றிய விவரங்களை அளிக்க வேண்டும். 

இது தவிர மற்றவர்களிடமிருந்து அல்லது வேறு வழிகளில் கிடைத்த படிகள், சொத்து போன்ற ஆதாயங்கள், சேமிப்பு கணக்கில் டெபாசிட் செய்தது பெற்ற வட்டி மற்றும் சலுகைகள் என பல்வேறு தகவல்கள் படிவம் 16-ல் இருக்க வேண்டும். 

மேலும், ஒருவர் பணியாற்றும் நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட இந்தப் படிவத்தில் குறிப்பிடும் தகவல்கள் அந்த நபர் தாக்கல் செய்யும் வருமான வரி விவரங்களுடன் ஒப்பீடு செய்யப்படும். இதன் மூலம் வருமான வரி ஏய்ப்பை பெருமளவு தடுக்க முடியும் என கருதப்படுகிறது. 

இந்த படிவம் 16 தவிர காலாண்டு தோறும் நிறுவனங்கள் வருமான விவரத்தை தாக்கல் செய்ய பயன்படும் படிவம் 24கியூ என்ற படிவத்திலும் மத்திய நேரடி வரிகள் வாரியம் மாற்றம் செய்துள்ளது. 


;