india

img

அயோத்தி தீர்ப்பும் எதிர்கால சூழல்களும்!

பாபர் மசூதி- இராம ஜென்மபூமி பிரச்சனை குறித்து உச்சநீதி மன்றத்தின் அரசியல் சட்ட அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு பல்வேறு தாக்கங்களை உருவாக்கியுள்ளது.  எளிய இந்து மக்கள் இந்த தீர்ப்பு நியாயமான ஒன்று என எண்ணுகின்றனர். குறிப்பாக முஸ்லீம்களுக்கு மசூதி கட்ட தனியாக 5 ஏக்கர் நிலம் தரவேண்டும் எனும் தீர்ப்பு நியாயத் தன்மை கொண்டது என அவர்கள் எண்ணுகின்றனர். இதற்கு மாறாக முஸ்லீம் அமைப்புகள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தீர்ப்பை மதிப்பதாகவும் ஆனால் தங்களுக்கு முழு திருப்தி இல்லை எனவும் அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் உட்பட பல அமைப்புகள் கூறியுள்ளன. எளிய முஸ்லீம் மக்களிடையே இந்த தீர்ப்பு பெரும்பாலும் ஏமாற்றத்தையும் சிறிது கோபத்தை யும் உருவாக்கியுள்ளது. எனினும் இதற்கு மேல் என்ன செய்ய முடியும் எனும் ஆதங்கமும் அவர்களி டையே உள்ளது. இந்த தீர்ப்பின் சில அம்சங்களை விமர்ச னத்திற்கு உள்ளாக்கியிருப்பது மார்க்சிஸ்ட் கட்சியும் ஏனைய இடதுசாரிகள் மட்டுமே! பெரும்பாலான அரசி யல் கட்சிகள் ஒட்டு மொத்தமாக இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளன.

முஸ்லீம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சுட்டிக்காட்டும் தீர்ப்பு

இந்த தீர்ப்பு, முஸ்லீம் மக்களுக்கு இழைக்கப் பட்ட சில அநீதிகளை சுட்டிக்காட்டுகிறது. 1949ம் ஆண்டு டிசம்பர் 22 மற்றும் 23 தேதிகளின் இரவில் கள்ளத்தனமாக பாபர் மசூதியில் இராமர் சிலைகள் வைக்கப்பட்டதன் மூலம் முஸ்லீம்கள் தொழுகை நடத்துவது தடுக்கப்பட்டது. இது முஸ்லீம்களின் வழிபாட்டு உரிமையை பறிப்பதற்கான திட்டமிட்ட செயல் என தீர்ப்பு கூறுகிறது. இந்த செயல் குறித்த வழக்கு நிலுவையில் உள்ள பொழுதே மசூதியின் ஒட்டு மொத்த கட்டிடமும் தகர்க்கப்பட்டது. இது ஒரு பொது வழிபாட்டு தலத்தை திட்டமிட்டு அழித்த செயல் எனவும் 450 ஆண்டு களுக்கு முன்பு கட்டப்பட்ட ஒரு மசூதி முஸ்லீம்களி டமிருந்து தவறான முறையில் பறிக்கப்பட்டதாகவும் தீர்ப்பு கூறுகிறது.

இந்த இரண்டு செயல்களுமே சங் பரிவாரத்தி னரால் அரங்கேற்றப்பட்டது என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்திய சமூகத்தில் நிலவிய மத ஒற்றுமையின் மீது தொடுக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் மற்றும்  மிகப்பெரிய அநீதி இந்த செயல் கள் என்பதில் இரு வேறு கருத்துகளுக்கு இட மில்லை. இவற்றை தவறு மற்றும் அநீதி என தீர்ப்பு சுட்டிக்காட்டுவது சரியானதே! 1991ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இந்திய அரசாங்கம் ஒரு சட்டம் இயற்றியது. 1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ம் நாள் வழிபாட்டு தலங்கள் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலை தொடர வேண்டும்; அதாவது கோவில் அல்லது மசூதி அல்லது மாதா கோவில் அல்லது குருத்துவாராவின் கடந்த கால வரலாறு எதுவாக இருப்பினும் 1947 ஆகஸ்டு மாதம் 15ம் நாள் அது எப்படி உள்ளதோ அப்படியே தொடர வேண்டும் என இந்த சட்டம் கூறு கிறது. இந்த சட்டத்தின் நியாயத் தன்மையையும் இந்த தீர்ப்பு சுட்டிக்காட்டுகிறது. இந்த சட்டம் முக்கி யத்துவம் வாய்ந்தது. ஏனெனில் காசி மற்றும் மதுரா மசூதிகளையும் தகர்ப்போம் என சங் பரிவாரம் கூக்குரலிடுகின்றனர்.

தீர்ப்பின் முரண்பாடுகள்

இந்த தீர்ப்பு பல முரண்பாடுகளை கொண்டதாக வும் உள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மை. பிரச்சனைக்கு உட்பட்ட 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு உரிமை படைத்தது என இந்த தீர்ப்பு கூறுகிறது? வி.எச்.பி அமைப்புக்கு! அதாவது மசூதி இடிப்பில் யார் முதன்மை குற்றவாளியோ அவர்களுக்கே அந்த இடத்தின் உரிமை அளிக்கப்படுகிறது.  ஒரு அறங்காவலர் குழுவிடம்தான் கோவில் கட்டும் பொறுப்பை தீர்ப்பு தருகிறது என சிலர் கூற லாம். ஆனால் மத்தியில் மோடி அரசாங்கமும் உ.பி. யில் யோகி அரசாங்கமும் இருக்கும் பொழுது இந்த குழுவில் இடம் பெறுவது யார் என்பதை ஊகிக்க ஆழ்ந்த ஆராய்ச்சி தேவை இல்லை. குறைந்த பட்சம் மசூதி இடிப்பில் தொடர்பு உடையவர்கள் இந்த குழுவில் இடம்பெறக் கூடாது என்பதைக் கூட இந்த தீர்ப்பு குறிப்பிடவில்லை.

பாபர் மசூதி தகர்க்கப்பட்டது கிரிமினல் குற்றம் என இந்த தீர்ப்பு கூறுகிறது. அப்படியானால் அந்த வழக்கு விரைவில் முடிக்கப்பட வேண்டும் என்பதை யும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையும் ஏன் இந்த தீர்ப்பு ஆணை இடவில்லை? இந்த வழக்கும் பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை நடத்துவது மத்திய புலனாய்வு கழகம். இந்த அமைப்பு எப்படி பகடைக்காயாக பயன்படுத்தப்படு கிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று! பிரச்சனைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் வி.எச்.பி.க்கு உரித்தானது என எப்படி நீதிமன்றம் முடிவு செய்கிறது? 1857 முதல் 1949 வரை மசூதியில் தொழுகை நடந்தது என்பதை தீர்ப்பு அங்கீகரிக்கிறது. ஆனால் 1857க்கு முன்பு அந்த இடம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது என்பதை முஸ்லீம் தரப்பு நிரூபிக்க தவறிவிட்டது என தீர்ப்பு கூறு கிறது. அப்படியானால் அந்த இடம் 1857க்கு முன்பு இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானதாக இருந்தது என்பதை வி.எச்.பி. தரப்பு நிரூ பித்துள்ளதா எனில் அதுவும் இல்லை. உண்மையில் அப்படி நிரூபிக்கும்படி வி.எச்.பி. தரப்பை நீதி மன்றம் பணிக்கவே இல்லை!

அப்படியானால் தீர்ப்புக்கு என்ன அடிப்படை?
பல்வேறு சாத்தியக்கூறுகளை தொகுத்து பார்த்ததில் 1857க்கு முன்பு இந்துக்கள் பிரச்ச னைக்குரிய வெளி மற்றும் உள் பகுதியில் வழிபட்டதும் 1857க்கு பின்பு வெளிப்பகுதியில் மட்டும் வழி பட்டதாகவும் தெரிகிறது. 1857க்கு பின்புதான் முஸ்லீம்கள் உள்பகுதியில் மட்டும் வழிபட்டது தெரி கிறது. சாத்தியக் கூறுகளின் அழுத்தம் கூடுதலாக இந்து தரப்புக்கு ஆதரவாக இருப்பதால் அந்த இடம் வி.எச்.பி.க்கு உரியது என தீர்ப்பு கூறுகிறது.  எந்த ஒரு நிரூபணம் அல்லது சாட்சியத்தின் அடிப்படையில் அல்ல; மாறாக ஒட்டு மொத்த சாத்தி யக்கூறுகளின் அடிப்படையில் (balance of probabilities எனும் வார்த்தைகளை தீர்ப்பு குறிப்பிடுகிறது) என தீர்ப்பு கூறுகிறது. “உலகிலேயே மிக முக்கியமான வழக்குகளில்” ஒன்று இது என குறிப்பிடும் தீர்ப்பு தனது முடிவை தான் எண்ணும் சாத்தியக் கூறு அடிப்படையில் முடிவு செய்வது விநோதமாக இருக்கிறது அல்லவா?

இந்த தீர்ப்பு சில அடிப்படை அம்சங்களில் முரண்பாடுகளை கொண்டதாகவே உள்ளது. இந்த தீர்ப்புக்கு பிறகாவது அனைவரின் கவன மும் வாழ்வியல் பிரச்சனைகளை நோக்கி திரும்ப வேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். இது நியாயமான விருப்பம்! எனினும் சங் பரிவாரம் அதனை அனுமதிக்குமா என்பது மிகப்பெரிய கேள்வியே! இந்த வழக்கின் ஒரு தரப்பான சன்னி வக்பு வாரியம் ஒரு சமரசத்திற்கு முன்வந்தது. காசி அல்லது மதுரா அல்லது வேறு மசூதிகள் பற்றிய பிரச்சனை எழுப்புவது இல்லை என எதிர்தரப்பு எழுத்து மூல மான உறுதி அளித்தால் இந்த வழக்கை திரும்ப பெறுவதாக வக்பு வாரியம் கூறியது. ஆனால் வி.எச்.பி. தரப்பு இதனை ஏற்கவில்லை. 

ராமர் கோவில் பிரச்சனையில் தேவையான அளவு அரசியல் லாபம் கொள்முதல் செய்த பிறகு சங்பரிவாரம் காசி மற்றும் மதுரா மசூதிகள் மீது தமது கவனத்தை திருப்புவர் என்பதே இதன் பொருளாகும்.  புலி சைவமாக மாறாது என்பது போல சங்பரி வாரம் தனது பாசிச போக்குகளை மாற்றிக் கொள்ளாது. வாழ்வியல் பிரச்சனைகளுக்கான இயக்கமும் மத அடிப்படைவாத எதிர்ப்பு இயக்கமும் இணை யாக நடத்த வேண்டிய தேவை உள்ளது. உழைக்கும் மக்களின் வாழ்வாதார பிரச்சனைகளில் வலுவான இயக்கங்களை நடத்தும் அதே சமயத்தில் மத அடிப்படைவாதத்தின் ஆபத்து குறித்தும் கவனம் கூர்மையாக இருப்பது மிக அவசியம் ஆகும்.

- அ.அன்வர் உசேன்

 

 

;