india

img

மல்யுத்த வீராங்கனைகள் மீது தாக்குதல் இந்திய ஜனநாயகத்தின் கருப்பு தினம் - வெகுஜன அமைப்புகள் கண்டனம்

புதுதில்லி, மே 29- பேரணியாகச் சென்ற மல்யுத்த வீராங்கனைகள் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டிருப்பதற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஞாயிறு அன்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த இருப்பதாக போராடிக்கொண்டிருக்கும் மல்யுத்த வீராங்கனைகள் அறிவித்திருந்தனர். இதற்கு சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் பல அமைப்புகள் ஆதரவு அளித்தன. இதனைத் தொடர்ந்து நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசாங்கம் கோழைத்தனமான முறையில் தில்லியின் எல்லைகளை மூடியது, சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரைக் கைது செய்தது,  புதிய நாடாளுமன்றம் திறக்கப்படும் தினமான அன்று மோடி அரசாங்கம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு காவல்துறையினர் மூலம் போராடுகிறவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளது.

பாலியல் தொந்தரவுகளைப் புரிந்திட்ட பிரிஜ் பூஷன் சரண் சிங்கை கைது செய்ய வலியுறுத்தி போராடிக்கொண்டிருக்கும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு நாட்டில் உள்ள பல்வேறு விளையாட்டு வீரர்களும், பெண்களும், விவசாயிகளும் ஆதரவு அளித்து வருகின்றனர். எனினும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாது, காவல்துறையினர் போராடும் மல்யுத்த வீராங்கனைகளை அவர்கள் ஏந்தி வந்த தேசியக்கொடிக்கும்கூட மரியாதை செலுத்தாது தரதர என்று இழுத்துச் சென்றனர், பல காவல்நிலையங்களுக்குக் கொண்டு சென்றனர்.

நாட்டிற்காக பதக்கங்களை வென்ற வினேஷ் போகாத், சக்ஷி மாலிக், பஜ்ரங் பூனியா மற்றும் பலர் தாக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை எங்கே வைத்திருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்கள் போராடிவந்த முகாமின் கூரை பிய்த்தெறியப்பட்டிருக்கிறது. இவர்களுடன், இவர்களுக்கு ஆதரவாகப் போராடிய மகளிர் அமைப்புகள் பலவற்றின் தலைவர்களான சுபாஷினி அலி, ஜக்மதி சங்வான், அணிராஜா, பூனம் கௌசிக், மைமூனா முல்லா மற்றும் விவசாய சங்கத் தலைவர்கள் சரஞ்சித் கௌர் துரியான், தாவிந்தர் கவுர் ஹர்டாஸ்புரா முதலானவர்களும் கைது  செய்யப்பட்டிருக்கின்றனர். இந்த சம்பவமானது, பாஜக ஒரு பெண்களுக்கு எதிரான, ஜனநாயக விரோத சிந்தனை கொண்ட ஒரு கட்சி என்பதையும், பெண்களுக்கு எதிராகப் பாலியல் குற்றங்களைப் புரிந்தவர்களைப் பாதுகாத்திடும் ஒரு கட்சி என்பதையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்திருக்கிறது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா கருதுகிறது. பிரதமர் கூறும் பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்கிற கோஷமும் எவ்வளவு போலித்தனமானது என்பதையும் காட்டியிருக்கிறது.

இதேபோன்று போராடும் மல்யுத்த வீராங்கனைகளுக்கு ஆதரவு தெரிவித்து நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்ற போராட்டங்கள் மீதும் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. ரோஹ்டாக், ஹிசார், பிவானி, ஜிந்த், ஃபடேஹாபாத், சம்ப்ளா, பல்வால், குர்கான் முதலான இடங்களில் போராடியவர்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. போராடியவர்களுக்கு ஆதரவாக பஞ்சாப் மாநிலத்திலிருந்து வந்த பெண்களும், விவசாயிகளும் நர்வானா அருகில்  பஞ்சாப்-ஹர்யானா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் தேசிய நெடுஞ்சாலையில் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள். அம்பாலா சிட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் அங்குள்ள குருத்வாரா மஞ்சில் சாகிப்பில் இருத்தி வைக்கப்பட்டுள்ளார்கள். இதேபோல் பல இடங்களிலும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். சம்யுக்த கிசான் மோர்ச்சா தலைவர் ராகேஷ் திகாய்த் மற்றும் 2000 விவசாயிகள் காசிபூர் எல்லையை அடைந்தனர். அங்கே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். விவசாயிகள் ரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

இவ்வாறு ஆட்சியாளர்களின் ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் கிளர்ந்தெழ வேண்டும் என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா அறைகூவி அழைக்கிறது. பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொண்ட நபர்கள் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்படும் வரை போராட்டங்கள் தீவிரமாகும் என்றும் எஸ்கேஎம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம்

இதேபோன்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மோடி அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள அடக்குமுறையை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடுமையாகக் கண்டிக்கிறது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத் தலைவர் சுபாஷினி அலி, ஜக்மதி சங்வான், மைமூனா முல்லா, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தலைவர் அணி ராஜா, பிஎம்எஸ்-ஐச் சேர்ந்த பூணம் கௌசிக் முதலானவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

இவர்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளின் வாலிபர்களும், மாணவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். பேருந்துகளில் வந்த அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் விவசாயிகள், பேருந்துகளில் வந்தவர்கள், தில்லிக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.

நீதி கோரி போராடிக்கொண்டிருக்கும் மல்யுத்த வீராங்கனைகள், வீரர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்துக் கொள்கிறது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கோருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

;