புதுதில்லி, டிச. 18 - டாக்டர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி, நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்
அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகை யில், மாநிலங்களவையில் டிசம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் 2 நாட்களாக விவா தம் நடைபெற்றது. இந்த விவாதத் திற்கு பதிலளிக்கும் வகையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா, செவ்வாயன்று மாநிலங்களவையில் பேசினார்.
அம்பேத்கருக்கு அவமதிப்பு
அப்போது, “பி.ஆர். அம்பேத்கரின் பெயரை பயன்படுத்துவது இப்போது ஒரு ‘பேஷன்’ ஆகிவிட்டது. எதற் கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத் கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று பேசு கிறார்கள். கடவுளின் பெயரை இவ்வாறு பலமுறை சொன்னாலாவது அவர்களுக்கு சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று எதிர்க்கட்சி எம்.பி.க்களை சாடியிருந்தார்.
அவரின் இந்த பேச்சு, அம்பேத்கர் பெயரை உச்சரிக்கும் எதிர்க்கட்சி எம்.பி.க்களை கேலி செய்வது மட்டு மன்றி, டாக்டர் அம்பேத்கரையும் அவ மதிக்கும் வகையில் இருந்தது. அவ ரின் இந்தப் பேச்சு கடும் கொந்த ளிப்பை ஏற்படுத்தியது.
எதிர்க்கட்சிகள் கண்டனம்
புதனன்று காலை மாநிலங்கள வையில் ஒன்றிய அமைச்சர்கள், நாடா ளுமன்ற குழுக்களின் தலைவர்களின் அறிக்கைகள் தாக்கலுக்குப் பிறகு, ஜீரோ ஹவர் தொடங்கும் நேரத்தில் காங்கிரஸ் உறுப்பினர் ஜெய்ராம் ரமேஷ் எழுந்து, டாக்டர் அம்பேத்க ரை அவமதித்து அமித்ஷா பேசியதற்கு தனது கண்டனத்தைத் தெரிவித்தார். நாட்டு மக்களிடம் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும் இதேபோல இருக் கைகளில் இருந்து எழுந்து, அம்பேத்கர் அவமதிக்கப்பட்டதை இந்தியா பொறுத்துகொள்ளாது என்று முழக்கங் களை எழுப்பினர். இதனால் மாநிலங்கள வையில் கடும் அமளி ஏற்பட்டது.
காங்கிரஸ் தலைவரும் மாநிலங் களவை எதிர்க்கட்சித் தலைவரு மான மல்லிகார்ஜூன கார்க்கே, அம் பேத்கர் படத்தைக் காட்டியபடி பேச முயற்சித்தார். அப்போது மாநிலங்கள வையை உணவு இடைவேளை வரை ஒத்தி வைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்தார்.
மக்களவையில் ஜெய்பீம் முழக்கம்
இந்தப் பிரச்சனை மக்களவை யிலும் எதிரொலித்தது. அம்பேத்கர் குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கூறிய கருத்துகள் தொடர்பாக மக்கள வையின் பிற அலுவல்களை ஒத்தி வைத்து விட்டு விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர் மாணிக் தாக்கூர் நோட்டீஸ் அளித்தார். ஆனால், அதற்கு சபாநாயகர் அனுமதி அளிக் காத நிலையில், எதிர்க்கட்சி உறுப் பினர்கள் அம்பேத்கரின் போஸ்டர்களை காட்டியபடி, உள் துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப் புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி னர். அம்பேத்கர் பெயரைக் குறிப் பிடத்தான் செய்வோம் என்று கூறி, ஜெய்பீம், ஜெய்பீம் என்று முழக்கங்க ளையும் எழுப்பினர். இதனால், மக்கள வையும் உணவு இடைவேளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம்
இதையடுத்து, இந்திய அரசிய லமைப்பின் சிற்பி அம்பேத்கரை அவமதித்ததற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலங்களவை எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் உள்பட ஏராளமானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அண்ணலின் பெயர் எங்களுக்கு
பேஷன் அல்ல; ஃபயர்!
சு. வெங்கடேசன் எம்.பி.,
“அம்பேத்கரின் பெயரை சொல்லுவது பேஷன் ஆகிவிட்டது” என்கிறார் அமித்ஷா. உங்களுக்கு இவ்வளவு எரிச்சலை கொடுக்கும் அண்ணலின் பெயர் எங்களுக்கு ஃபேஷன் அல்ல ஃபயர்” என்று சிபிஎம் நாடாளுமன்ற மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறியுள்ளார்.
“அம்பேத்கரின் பெயரைச் சொல்வதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தாலாவது, அவர்களுக்கு (எதிர்க்கட்சியினருக்கு) சொர்க்கத்தில் இடம் கிடைத்திருக்கும்” என்று அமித்ஷா கூறியிருக்கும் நிலையில், “ஏழு ஜென்மங்களுக்கு சொர்க்கத்திற்கு அனுப்பி வைக்கும் வலிமை கொண்ட கடவுள், மக்களவையில் வந்து “அதானி” என்ற பெயரை உச்சரிக்கும் வலிமையை இவர்களுக்கு (பாஜகவினருக்கு) ஏன் தர மறுக்கிறார்?” எனக் கேட்டும் சு. வெங்கடேசன் எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார். நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உள்ள அம்பேத்கர் படத்தின் முன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தமது ‘எக்ஸ்’ பக்கத்தில் அவர் பதிவேற்றியுள்ளார்.
அம்பேத்கர் பெயரைத் தான் சொல்வோம் : முதல்வர் பதிலடி
அம்பேத்கரை அவமதித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசி யிருப்பதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் சஞ்சய் சிங், அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். “அதிக பாவங்கள் செய்பவர்கள் தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத் தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்; சொல்ல வேண்டும்,” என தமிழ் நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.