india

img

ஏர் இந்தியா விபத்து: முதற்கட்ட விசாரணை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

குஜராத் மாநிலத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்துக்கு என்ஜின்கள் செயலிழந்ததுதான் காரணம் என முதற்கட்ட விசாரணை அறிக்கையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 275 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விமான விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்களை முதற்கட்ட விசாரணை அறிக்கையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.
அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட 32 விநாடிகளில் ஏர் இந்தியா விமானத்தில் என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது தடைப்பட்டு, இரண்டு என்ஜின்களும் செயலிழந்ததே விபத்துக்குக்கான காரணம் என்று முதற்கட்ட விசாரணை அறிக்கையில் விமான விபத்து புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், 2 விமானிகளும் பேசிக்கொண்ட தகவல்களும் அறிக்கையில் வெளியாகியுள்ளன. விமானி ஒருவர், சக விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு நான் அந்த வால்வை அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதில் அளிக்கிறார். 2 என்ஜின்களும் செயலிழக்கும்போது RAT அமைப்பு மூலம் 2 எரிபொருள் சுவிட்சுகளை கொண்டு விமானத்தை அவசரமாக இயக்க விமானிகள் முயற்சித்த நிலையில், முதல் என்ஜினை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது, அதே சம்யம் இரண்டாவது என்ஜின் செயல்படாமல் இருந்துள்ளது. இதனால் விமானம் மேல் செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.