india

உக்ரைன் விவகாரத்தில் அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம்

புதுதில்லி,ஏப்.6-  உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் அமைதியின் பக்கம் இந்தியா நிற்கிறது என்று நாடாளுமன்றத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறினார். உக்ரைன் விவகாரம் குறித்து புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி எம்.பி., என்.கே.பிரேமசந்திரன், காங்கிரஸ் எம்.பி.,மணீஷ் திவாரி ஆகியோர் மக்களவையில் கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏப்ரல் 6 அன்று மக்களவையில் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-  உக்ரைனில் இருந்து பெரிய அளவில் இந்தியர்கள்  வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை யாரும் இவ்வளவு பெரிய அளவில் குடிமக்களை வெளியேற்றியதில்லை. இது இந்தியாவால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் சவாலான நடவடிக்கை. இது மற்ற நாடுகளுக்கு ஊக்கமளிப்பதாக இருந்தது.நான்கு இந்திய அமைச்சர்கள்  உக்ரைனின் அண்டை நாடுகளுக்குச் செல்லாமல் இருந்திருந்தால், இந்தியாவுக்கு அதே அளவிலான ஒத்துழைப்பு கிடைத்திருக்காது. பிரதமர் நரேந்திர மோடி தனிப்பட்ட முறையில் இந்த வெளியேற்றத்தில் அக்கறை செலுத்தினார். இந்த விவகாரத்தில் இந்தியா எந்தப் பக்கம் நிற்கிறது எனக் கேட்டால், அமைதியின் பக்கம் நிற்கிறது என்றே சொல்ல வேண்டும். வன்முறையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றே இந்தியா வலியுறுத்துகிறது. இதுதான் கொள்கை அடிப்படையிலான நமது நிலைப்பாடு. இதுதான் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச விவாதங்களில் நமது நிலைப்பாட்டைத் தொடர்ந்து வழி நடத்தி வருகிறது. புச்சா நகரில் நடைபெற்ற படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். இந்தச் சம்பவம் குறித்து சுயேட்சையான விசாரணை நடைபெற எழுந்திருக்கும் கோரிக்கையை இந்தியா ஆதரிக்கிறது. உக்ரைன் நிலைமைக்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூசுவது துரதிர்ஷ்டவசமானது. இரு தரப்புக்கும் இடையிலான பகை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.  இந்தியா வந்திருந்த ரஷ்ய வெளியுறவுத் அமைச்சர்  செர்ஜி  லாவ்ரோவிடம் இதையே வலியுறுத்தினோம் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

;