india

img

வங்க‌க்கடலில் உருவானது அசானி புயல்: ஒடிசா, ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை

தென்கிழக்கு வங்க‌க்கடல் பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் வலுவடைந்து இன்று புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் படி, தென்கிழக்கு வங்க‌க்கடல் பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 16 கி.மீ வேகத்தில் நகரும் இந்த புயல், விசாகப்பட்டினத்திலிருந்து 970 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளதாகவும் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் மே10 ஆம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், ஒடிசா மற்றும் ஆந்திரா கரையோர பகுதி மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் முன்னெச்சரிக்கையைத் தொடர்ந்து பேரிடர் மீட்பு மற்றும் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாக இரு மாநில அரசுகள் தெரிவித்துள்ளது. 

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் நகரும் திசையை கணக்கிட்டத்தில் செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஓடிசாவில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் மே 12 ஆம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் கடல் சீற்றத்தை கருத்தில் கொண்டு அடுத்த மூன்று நாட்களுக்கு அந்தமான் கடல் மற்றும் வங்க கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீனவ மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது 2022 இல் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் உருவான முதல் புயல் ஆகும்.

தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்று சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி, கரூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.