india

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடிய இஷ்ரத் ஜகானுக்கு நீதி வழங்குக.... மகளிர் அமைப்புகள் தில்லி உள்துறை அமைச்சருக்குக் கடிதம்....

புதுதில்லி:
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய வீராங்கனை இஷ்ரத் ஜகான் மண்டோலி சிறையில் அடித்து நொறுக்கப்பட்டதைக் கண்டித்தும், அவரை மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு மாற்றிட நடவடிக்கைகள் எடுக்க வலியுறுத்தியும் தில்லி மாநில உள்துறை அமைச்சருக்கும், தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கும் மற்றும் தில்லி மகளிர் ஆணையத்திற்கும் மகளிர் அமைப்புகளும் மற்றும் பலரும் கடிதங்கள் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பதாவது:

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய இஷ்ரத் ஜகான் மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின்கீழ் வழக்கு  தொடுக்கப்பட்டு மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவர் சிறையில் உள்ள மற்ற சிறைவாசிகளால் அடித்துநொறுக்கப்பட்டிருக்கிறார். அவர் துணிகள்கிழிக்கப்பட்டிருக்கின்றன. இதுமிகவும்   அதிர்ச்சியளிக்கக்கூடியதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.

இஷ்ரத் ஜகான் மற்றும் பலரைப் போன்றே, தில்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் நின்ற ஊழியர்களில் ஒருவராவார். அரசமைப்புச்சட்டத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி அமைதியான முறையில் போராட்டங்களை நடத்தி வந்தார்கள். இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் முஸ்லிம் பெண்கள் பெருவாரியாகக் கலந்துகொண்டார்கள். இவர்கள்நாட்டின் ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் உயர்த்திப்பிடித்தே போராட்டத்தில் ஈடுபட்டார்கள். இதுபோன்ற போராட்டங்கள் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றாகும்.மாறாக, அவர்கள் தேச விரோதிகள் என முத்திரை குத்தப்பட்டிருக்கிறார்கள். இதுவும் பயனளிக்காததால், ‘கலவரம்’ ஒன்று திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.   இவ்வாறு கிளர்ச்சிப்போராட்டங்களில் ஈடுபட்ட அனைவரும் கைதுசெய்யப்பட்டார்கள். அநேகமாக அவர்களில் எவருக்கும் பிணை வழங்கப்படவில்லை.அவர்கள் அரசியல் கைதிகள். அவர்கள் அதுபோன்றே நடத்தப்பட வேண்டும். ஆயினும் அவர்களுடைய அரசியல், ஆட்சியாளர்களுடைய அரசியலுடன் ஒத்துப்போகவில்லையாதலால், அவர்கள் பல்வேறு வடிவங்களில் சித்ரவதைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.எனவே, இவற்றைச் சரிசெய்திடுவதற்காக உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கை களை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள் கிறோம்.

1.   இஷ்ரத் ஜகான், மண்டோலி சிறையிலிருந்து திகார் சிறைக்கு மாற்றப்படவேண்டும்.

2.   இஷ்ரத் ஜகானுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.

3.    மக்களை மதத்தின் அடிப்படையிலும், சாதியின் அடிப்படையிலும் முத்திரை குத்தி, பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தாதுஇருப்பதை நீதிமன்றங்கள் உத்தரவாதப் படுத்த வேண்டும்.

மேலும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்குஎதிராகப் போராடி சிறையில் அடைக்கப் பட்டிருப்போரை பிணையில் விடுவித்திட வேண்டும். சட்டவிரோத தடைச் சட்டத்தை ரத்து செய்திட அரசாங்கம் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.இப்பிரச்சனைகளில் தில்லி அரசாங்கம் உரிய முறையில் தலையிட்டு, இஷ்ரத் ஜகான் மற்றும் குடியுரிமைத்திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களுக்கு நீதி வழங்கப்படுவதை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் கோரியுள்ளனர்.இக்கடிதத்தில் தில்லி, மகளிர் அமைப்புகளைச் சேர்ந்த ஏ.ஜே. ஜாபத், ஆர்த்தி எம், அபா தேவ் ஹபிப் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கையொப்பமிட்டுள்ளனர். (ந.நி.)

;