india

img

‘டூல்கிட்’ விவகாரத்தில் மோடி அரசை பகைப்பதா? டுவிட்டர் நிறுவனங்களுக்குள் புகுந்த தில்லி காவல்துறை...

புதுதில்லி:
போலி ‘டூல்கிட்’ விவகாரத்தில், பாஜக தலைவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த பின்னணியில், ‘டுவிட்டர் இந்தியா’ நிறுவனத்தின் அலுவலகங்களுக்குள் புகுந்து தில்லி காவல்துறை சோதனை நடத்தியுள்ளது.

சர்வதேச அளவில் இந்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் மதிப்பைக் குறைக்க காங்கிரஸ் கட்சி சதி செய்வதாகவும், இதற்காக ‘டூல்கிட்’ (Toolkit) ஒன்றை வெளியிட்டு, கொரோனா வைரஸை ‘மோடி வைரஸ்’ என்று பிரச்சாரம் செய்யுங்கள்.. கும்பமேளாதான் கொரோனா 2-ஆவது அலைக்கு காரணம் என்று தொடர்ந்து கூறுங்கள்.. என்று தனது கட்சியினருக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதாகவும் பாஜக-வினர் அண்மையில் குற்றச்சாட்டு கிளப்பினர்.மேலும், காங்கிரஸ் வெளியிட்ட ‘டூல்கிட்’ இதுதான் என்று ஆவணம் ஒன்றையும் பாஜக தலைவர்கள் ஜே.பி. நட்டா, பி.எல். சந்தோஷ், சம்பித் பத்ரா, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ஆகியோர் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

ஆனால், இந்த ‘டூல்கிட்’-டின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்ததால், டுவிட்டர் நிறுவனமானது, பாஜக தலைவர்களின் ட்வீட்களில் ‘சித்தரிக்கப்பட்டதாக இருக்கலாம்’ (manipulation media)’ என முத்திரை குத்தியது.இதற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். டுவிட்டர் நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது, என்றும் குற்றம் சாட்டியிருந்தனர். சித்தரிக்கப்பட்டது என்ற குறியிடலை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.இந்நிலையில்தான், டுவிட்டர் நிறுவனத்தை மிரட்டும் வகையில், திங்களன்று மாலை குர்கான் மற்றும் தில்லி லாடோ சாராய் ஆகிய இடங்களில் உள்ள ‘டுவிட்டர் இந்தியா’ அலுவலகங்களுக்குள், மத்திய உள்துறை கட்டுப்பாட்டிலுள்ள தில்லி காவல்துறையினர் புகுந்து சோதனை நடத்தியுள்ளனர். டூல்கிட் ‘சித்தரிக்கப்பட்டது’ என்பதற்கான ஆதாரம் எங்கே? என்று கேட்டு, இந்த சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

;